தமிழகத்தில் மீண்டும் ஒரு நீட் மரணமா..? போலீசார் தீவிர விசாரணை..!

4 ஆண்டுகள் நீட் பயிற்சி... கலந்தாய்வில் ஏமாற்றம்!: பாளையங்கோட்டையில் மாணவி தூக்கிட்டுத் தற்கொலை
நீட் கலந்தாய்வில் ஏமாற்றம்
நீட் கலந்தாய்வில் ஏமாற்றம்source:dailythanthi
Updated on

பாளையங்கோட்டையை சேர்ந்தவர் அரிகிருஷ்ணன். இவர் தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வருகிறார். தற்போது வீட்டில் இருந்தவாறே ஆன்லைன் மூலம் பணியாற்றி வருகிறார்.இவருடைய மனைவி பமில்தா, ஸ்ருதிலயா (21) மற்றும் பத்தாம் வகுப்பு படிக்கும் மற்றொரு மகளும் உள்ளனர்.

சிறுவயது முதலே மருத்துவராக வேண்டும் என்ற லட்சியத்துடன் இருந்த இவர், இதற்காகத் தனியார் பயிற்சி மையத்தில் இணைந்து நான்கு ஆண்டுகளாகத் தீவிரமாக நீட் தேர்வுக்குத் தயாராகி வந்தார்.இதனையடுத்து சமீபத்தில் நடைபெற்ற நீட் தேர்வில் நல்ல மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.

இந்த மதிப்பெண்ணுக்கு இந்த முறை நிச்சயமாக மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையுடன் நேற்று முன்தினம் நடைபெற்ற முதற்கட்ட மருத்துவ கலந்தாய்வில் பங்கேற்றார்.

இடம் கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையில் இருந்த மாணவிக்கு ஏமாற்றமே மிஞ்சியது.இந்த கலந்தாய்வில் அவருக்கு மருத்துவப் படிப்பில் இடம் கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது.

இந்நிலையில், ஸ்ருதிலயா மிகவும் மன உளைச்சலில் இருந்து வந்தாள். சம்பவத்தன்று பக்கத்தில் சென்று வருவதாக பெற்றோர்களிடம் கூறிய ஸ்ருதிலயா வெகு நேரமாகியும் வீடு திரும்பவில்லை.இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர்கள் உடனடியாக தேடுதல் வேட்டையில் இறங்கினர். அவள் போகும் இடத்திற்கு சென்று பார்த்துள்ளனர். எங்கும் அவர் வரவில்லை என்ற பதிலே வந்தது. இது அவர்களை மேலும் பதற்றம் அடைய வைத்தது. உடனடியாக போலீஸில் புகார் அளித்தனர்.

ஸ்ருதிலயா தந்தை ஹரி கிருஷ்ணன் என்பவர் அளித்துள்ள புகாரில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:

"எனது மகள் ஸ்ருதிலயா கடந்த 2023-ஆம் ஆண்டு 12-ஆம் வகுப்பு படித்து முடித்தார். மருத்துவராக வேண்டும் என்ற லட்சியத்தில் தொடர்ந்து நான்கு முறை நீட் தேர்வு எழுதியும் அவருக்கு மருத்துவப் படிப்பில் சேர வாய்ப்பு கிடைக்கவில்லை. இதனால் மன உளைச்சலில் இருந்து வந்தார். நானும் எனது மனைவியும் அவருக்கு தொடர்ந்து ஆறுதல் கூறி தேற்றி வந்தோம்.

இந்நிலையில், இரவு 8:30 மணியளவில் 'பக்கத்தில் சென்றுவிட்டு உடனே வருகிறேன்' எனக் கூறிவிட்டு வீட்டிலிருந்து வெளியே சென்றார். ஆனால், வெகுநேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த நாங்கள், அருகில் உள்ள கோயில்கள், பூங்காக்கள் மற்றும் கடைகளுக்குச் சென்று தேடிப் பார்த்தோம். ஆனால், அவர் எங்கு தேடியும் கிடைக்கவில்லை" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.யாரை கேட்டாலும் இங்கு வரவில்லை என்றே கூறினார்கள் என அந்த புகாரில் தெரிவித்தார்.

போலீசார் உடனடியாக களத்தில் இறங்கினர்.விரைந்து சென்று விசாரணை நடத்தினர். அப்போது வீட்டுக்கு பின்னால் இருந்த குடோனில் மாணவி சுருதிலயா தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது.

நீட்
நீட்

இதை சற்றும் எதிர்பார்க்காத பெற்றோர்கள் ஸ்ருதிலயா உடலை பார்த்து கதறி அழுதது பார்ப்போரை கண்கலங்க வைத்தது..சற்று நேரம் முன் என்னிடம் பேசிய மகள் இப்போது உயிரோடு இல்லை என கதறி அழுதனர்.

காவல்துறையினர் ஸ்ருதிலயாவின் உடலை கைப்பற்றி, உடற்கூறாய்வு பரிசோதனைக்காக பாளையங்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இச்சம்பவம் தொடர்பாக பெருமாள்புரம் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மருத்துவப் படிப்பில் இடம் கிடைக்காத காரணத்தால் ஏற்பட்ட மனவேதனையினால் மாணவி இந்த விபரீத முடிவை எடுத்தாரா அல்லது அவரது மரணத்திற்கு வேறு ஏதேனும் பின்னணி காரணங்கள் உள்ளதா என்ற கோணத்திலும் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

நான்கு ஆண்டுகள் முயன்றும் மருத்துவராகும் லட்சியம் நிறைவேறாததால் மாணவி உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோக அலையை உருவாக்கியுள்ளது.

தற்கொலை எதற்கும் தீர்வு அல்ல:

வாழ்வதற்கு புது நம்பிக்கையைப் பெற தமிழ்நாடு அரசின் ஹெல்ப்லைன் நம்பர் 104-ஐ தொடர்பு கொண்டு பேசலாம். சிநேகா தொண்டு நிறுவனத்தை தொலைபேசி மூலமாக, +91 44 2464 0050 +91 44 2464 0060, இமெயில் மூலம் help@snehaindia.org தொடர்பு கொள்ளலாம். அல்லது டாடா நிறுவனத்தின் 91529 87821 என்ற எண்ணிலும் தொடர்பு கொண்டு தேவையான உதவிகளைப் பெறலாம்.

இதையும் படியுங்கள்:
ஒன்ஸ்மோர் திரை விமர்சனம்: அர்ஜுன் தாஸ் - அதிதி சங்கரின் காதல் காவியம் ஜெயித்ததா?
நீட் கலந்தாய்வில் ஏமாற்றம்
logo
Kalki Online
kalkionline.com