

அர்ஜுன் தாஸ், அதிதி சங்கர், சோனா ஒலிக்கல் நடிப்பில் வந்துள்ள படம் ஒன்ஸ்மோர். விக்னேஷ் ஸ்ரீகாந்த் இப்படத்தை இயக்கியுள்ளார்
வாழ்க்கையில் கடந்த காலத்தில் ஏற்பட்ட சோகத்தினால் வருத்தத்துடன் வாழ்ந்து வருகிறார் ரகுவரன்.(அர்ஜுன் தாஸ்)இவர் வாழ்க்கையில் எதிர்பாராத விதமாக வரும் அஞ்சலி(அதிதி) என்ற பெண் இவர் வாழ்க்கையை மாற்றுகிறார்.
இருவரும் காதலிக்கிறார்கள். திருமணம் செய்து கொள்ள முடிவெடுக்கிறார்கள். திருமண நிச்சயத்தின் நாள் அன்று ஒரு போன் கால் வருகிறது. " ரகுவரன் உன்னிடம் தனியாக பேச வேண்டும்" என்கிறார் இந்திரா (சோனா) என்ற பெண். ரகுவரனும் இந்திரா அழைத்த இடத்திற்கு செல்கிறார். இந்திரா யார்? இந்திராவிற்கும் ரகுவரனுக்கும் இருந்த கடந்த கால காதல் என்ன? அந்த காதல் ஏன் உடைந்தது? சமகால ரகுவரனின் வாழ்க்கைக்குள் வந்திருக்கும் இந்திரா ரகுவரன் - அஞ்சலி திருமணத்தில் எந்தவித பாதிப்புகளை ஏற்படுத்தினார் என்று சொல்கிறது இப்படம்.
படத்தின் பிளஸ்.. படத்தின் மிகப்பெரிய பிளஸ் என்பது அப்துல் வஹாப் இசைதான். நீண்ட நாட்களுக்கு பிறகு ஒரு படத்தில் அனைத்து பாடல்களும் ஹிட்டாகி உள்ளது. ரொமான்ஸ் படத்திற்கு இசை மிகப்பெரிய பலம். இந்த பலத்தை கொஞ்சம் அதிகமாகவே தந்துள்ளார் அப்துல் வஹாப். அனைத்துப் பாடல்களும் நமக்கு காதல் உணர்வை தருவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. குறிப்பாக இந்திரா என தொடங்கும் பாடல் டாப்.
இசைக்கு அடுத்தபடியாக படத்திற்கு பலம் சேர்ப்பது அரவிந்த் விஸ்வநாதனின் ஒளிப்பதிவு. அரவிந்த் வைத்திருக்கும் லைட்டிங் காதல் காட்சிகளில் ஒரு லைவ் உணர்வை தருகிறது. அழகான கேரள கடற்கரைகள், கல்லூரி, துள்ளல் இளைஞர்கள், ஒரு மென்மையான காதல் என இரண்டாம் பாதி சிறப்பாக உள்ளது.
அதிதி, சோனா ஒலிகல் என இரண்டு ஹீரோயின்கள் படத்தில் இருந்தாலும் நடிப்பில் நம்மை அதிகம் அசத்துவது சோனா தான். காதலுக்குள் வரும் ஒரு உளவியல் பிரச்சனையை தனது நடிப்பால் மிகச் சிறப்பாக தந்துள்ளார் அறிமுக நடிகை சோனா. அதிதி கொஞ்சம் துள்ளலும், சிரிப்பு ம் மாக நடித்திருக்கிறார். படத்தின் ஹீரோ அர்ஜுன் தாஸ் இந்த கேரக்டருக்கு சரியா வருவாரா என்ற எண்ணம் ரசிகர்களுக்கு ஆரம்பத்தில் இருந்தது. Bஆனால் இந்த எண்ணத்தை பொய்யாக்கும் விதமாக கதாபாத்திரத்தை ஏற்று புரிந்து கொண்டு சரியாக நடித்துள்ளார். காதல் வலியால் தான் தொலைத்த காலங்களை நினைத்து மனதில் வருந்துவதும்,வெளியே சற்று இறுக்கமாக இருந்தாலும் மனதளவில் ஒரு மென்மையான குணம் கொண்டவர் என்பதையும் தனது கதாபாத்திர நடிப்பின் மூலம் சரியாக தந்துள்ளார் அர்ஜுன் தாஸ்.
மைனஸ்... படத்தில் இரண்டாம் பாதியில் காட்சிகள் ஒரு அழகான காதல் உணர்வை தந்தாலும் முதல் பாதி பெரிய அளவில் நமக்கு நெருக்கமாக இல்லை அர்ஜுன் தாஸ், சோனா, அதிதி இவர்கள் கேரக்டர்களுக்கு தந்த முக்கியத்துவம் மற்ற கேரக்டர்களுக்கு இயக்குனர் தரவில்லை. குறிப்பாக நண்பர்களாக வருபவர்கள், பெற்றோர்களாக நடிப்பவர்கள் போன்றவர்கள் ஆழமாக நம் மனதிற்குள் நிற்கவில்லை.
படத்தின் கிளைமாக்ஸ் இன்னும் உணர்வுபூர்வமாக இருந்திருக்கலாம். கிளைமாக்ஸ் ஓகே ரகமாக உள்ளது. கடைசியாக படத்தில் சில குறைகள் இருந்தாலும் சில லாஜிக் மீறல்கள் இருந்தாலும் பரவாயில்லை எனக்கு ஒரு மென்மையான காதல் திரைப்படம் மட்டும் இருந்தால் போதும் என்று நினைப்பவர்களுக்கு இந்த ஒன்ஸ்மோர் கண்டிப்பாக பிடிக்கும் ஒன்ஸ்மோர் -காதல் -காதல் காதல்.
இத்திரையரங்க ஒன்ஸ்மோர் விமர்சனம் படிப்பதன் மூலம், இப்படத்திற்கு குடும்பத்துடன் செல்வதா அல்லது காதல் திரைப்பட ரசிகர்களுக்கு மட்டுமே ஏற்றதா என்பதைத் துல்லியமாகத் தீர்மானித்து உங்கள் நேரத்தையும் பணத்தையும் சரியாகத் திட்டமிட முடியும்.