

திருப்பதி லட்டுவில் விலங்கு கொழுப்பு கலந்த சர்ச்சை இன்னும் முழுமையாக ஓயவில்லை.
அதற்குள் இப்போது மற்றுமொரு அதிர்ச்சிகரமான மோசடி வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
பக்தர்கள் மற்றும் விஐபிகளுக்கு வழங்கப்படும் புனிதமான 'பட்டு' அங்கவஸ்திரங்களில் (துப்பட்டா) இந்த மெகா மோசடி நடந்துள்ளது.
பட்டு அல்ல... வெறும் பாலிஸ்டர்!
திருப்பதி தேவஸ்தானத்தில் விஐபி தரிசனம் செய்பவர்களுக்கும், நன்கொடையாளர்களுக்கும் பட்டு அங்கவஸ்திரம் போர்த்தப்படுவது வழக்கம்.
இதற்காக "சுத்தமான மல்பெரி பட்டு" (Pure Mulberry Silk) மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும் என்பது விதியாகும்.
ஆனால், கடந்த 2015 முதல் 2025 வரையிலான 10 ஆண்டுகளில், பட்டுக்கு பதிலாக 100% பாலிஸ்டர் துணிகள் சப்ளை செய்யப்பட்டுள்ளது.
ஒப்பந்தத்தின் படி, சுத்தமான மல்பெரி பட்டு மற்றும் 20/22 டெனியர் நூல் மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
குறைந்தபட்சம் 31.5 டெனியர் அளவு தரம் இருக்க வேண்டும் என்பது கட்டாய விதியாகும்.
பட்டு' அங்கவஸ்திரங்களில் சமஸ்கிருதம் மற்றும் தெலுங்கில் 'ஓம் நமோ வெங்கடேசாய' என்று அச்சிடப்பட்டிருக்க வேண்டும்.
மேலும் சங்கு, சக்கரம் மற்றும் நாமம் சின்னங்கள் அதில் இடம்பெற வேண்டும்.
நிர்ணயிக்கப்பட்ட அளவு, எடை மற்றும் பார்டர் டிசைன் மிகத் துல்லியமாக இருக்க வேண்டும்.
முக்கியமாக, உண்மையான பட்டு என்பதற்கான 'சில்க் ஹாலோகிராம்' முத்திரை கண்டிப்பாக இருக்க வேண்டும்.
சிக்கியது எப்படி?
டிடிடி (TTD) அறங்காவலர் குழுத் தலைவர் பி.ஆர். நாயுடு, துப்பட்டாக்களின் தரத்தை ஆய்வு செய்ய உத்தரவிட்டார்.
இதனையடுத்து திருப்பதி குடோனிலிருந்து மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பெங்களூரு ஆய்வகங்களுக்கு அனுப்பப்பட்டன.
பரிசோதனை முடிவுகள் தேவஸ்தானத்தை அதிர வைத்துள்ளன. அந்தத் துணிகள் எதுவும் பட்டு இல்லை என்று உறுதியானது.
அவை அனைத்தும் பாலிஸ்டர் என்றும், அதில் இருக்க வேண்டிய 'சில்க் ஹாலோகிராம்' முத்திரையும் இல்லை என்றும் தெரியவந்துள்ளது.
54 கோடி ரூபாய் 'ஸ்வாகா'!
ஆந்திராவின் நகரி பகுதியைச் சேர்ந்த 'விஆர்எஸ் எக்ஸ்போர்ட்ஸ்' என்ற நிறுவனம் தான் இந்தத் துணிகளை சப்ளை செய்துள்ளது.
ஒரு துப்பட்டாவிற்கு ரூ.1,389 என விலை நிர்ணயிக்கப்பட்டு, கோடிக்கணக்கில் வர்த்தகம் நடந்துள்ளது.
கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் சுமார் ரூ.54.95 கோடி மதிப்பிலான துணிகளை இந்நிறுவனம் சப்ளை செய்துள்ளது.
லஞ்ச ஒழிப்புத் துறையிடம் வழக்கு
கடவுளின் பெயரால் பக்தர்களிடம் பட்டு என்று கூறி பாலிஸ்டரைத் தலையில் கட்டிய விவகாரம் பெரும் அதிர்ச்சியை தந்துள்ளது.
இது குறித்து விசாரிக்க ஆந்திர மாநில ஊழல் தடுப்புப் பிரிவுக்கு (ACB) உத்தரவிடப்பட்டுள்ளது.
ஏற்கனவே லட்டு விவகாரத்தால் நொந்துபோன பக்தர்கள், இப்போது கடும் கோபத்தில் உள்ளனர்.