திருப்பதி ஏழுமலையான் கோவில் 2023 ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஒன்றாம் தேதி துவங்கி அதன் தங்க கோபுரத்திற்கு பொன் முலாம் பூசப்பட்ட புதிய தகடுகள் பொருத்தும் பணி நடைபெற உள்ளது. இந்த பணி சுமார் ஆறு மாத காலம் நடைபெறும் என்று தேவஸ்தானம் கூறுகிறது. தேவஸ்தானம் ஏழுமலையான் கோவில் தலைமை அர்ச்சகர்களில் ஒருவரான வேணுகோபால தீட்சதுலு, இது பற்றி கூறிய தகவலை அறிக்கையாக வெளியிட்டுள்ளது.
அதில் புதிதாக பொன்முலாம் பூசப்பட்ட தகடுகள் பொருத்தப்படும் சமயத்தில் பாலாலயம் செய்யப்படும். அப்போது வேறு ஒரு மூலவரை ஏற்பாடு செய்யும் பணிகள் நடைபெறும். இதற்கு முன்னர் 1957- 58 ல் புதிய தங்க தகடுகள் பொருத்தப்பட்ட போதும்,2018 ஆம் ஆண்டு பாலாலயம் நடைபெற்ற போதும் இதே நடைமுறை பின்பற்றப்பட்டது.
எனவே அந்த சமயத்தில் திருப்பதி மலைக்கு வரும் பக்தர்கள் தற்போது இருக்கும் மூலவரையும் வழிபடலாம். அதே நேரத்தில் பாலாலயம் செய்யப்பட்டு புதிதாக பிரதிஷ்டை செய்யப்பட இருக்கும் மூலவரையும் வழிபடலாம். ஆனால் மூலவருக்கு நடத்தப்படும் கட்டண சேவைகள் அனைத்தும் ஏகாந்தமாக நடைபெறும். அதே நேரத்தில் உற்சவருக்கு நடத்தப்படும் கல்யாண உற்சவம், கட்டண பிரமோற்சவம் ஆகியவை உள்ளிட்ட கட்டண சேவைகளில் மாற்றம் ஏதும் இருக்காது என்று கூறப்பட்டுள்ளது.
புதிய தங்கத் தகடுகள் பொருத்தப்படும் பணிகள் துவங்கிய ஆறு மாத காலமும் ஏழுமலையான் கோவில் மூடப்பட்டு இருக்கும் என்கிற வதந்தி பரப்பி விடப்பட்டு , ஒரு சில சமூக ஊடகங்களில் தவறான தகவல்கள் வெளியாகின என்பது குறிப்பிடத்தக்கது.