பொதுவாக போலீசாரில் சிறப்பாக பணி செய்பவர்களுக்கு சற்று தாமதமாக பாராட்டு கிடைக்கும். ஆனால் நேர்மையற்ற முறையில் பணிபுரிந்து வரும் போலீஸாருக்கும் வெகுமதிகள் கிடைக்கும். இதை பார்க்கும் நேர்மையான போலீசார் மனம் வெம்பி போவதுண்டு. ஆனால் சாராய வியாபாரிகள், காட்டன் சூதாட்டம் உட்பட பல்வேறு சட்டத்துக்கு புறம்பான செயல்களில் ஈடுபட்டு வரும் நபர்களுடன் கைகோர்த்து சுற்றித்திரிந்த 15 போலீசாரை சரகம் விட்டு சரகம் தூக்கி அடித்து திருப்பத்தூர் பெண் எஸ் பி தன் அதிரடியை தொடங்கியுள்ளார்.
ஸ்ரேயா குப்தா. இவர்தான் திருப்பத்தூர் மாவட்டத்திற்கு புதிதாக பொறுப்பேற்றுள்ள எஸ் பி ஆவார். இவர் இங்கு பணியில் சேர்ந்ததும் திருப்பத்தூர் மாவட்டத்தில் சட்டவிரோத கும்பல்களுடன் சுற்றித் திரியும் சில போலீசாருக்கு சந்தோசம் ஏற்பட்டது. ஏனெனில் வந்திருப்பது பெண் எஸ்பி. அதனால் அதிரடியாக எதுவும் செய்ய மாட்டார் என்ற நினைப்பில் மகிழ்ந்திருந்தனர். ஆனால் அவர்கள் மகிழ்ச்சியில் மண் விழுவது போல சில நாட்களுக்கு முன்னர் சப் இன்ஸ்பெக்டர்கள் உட்பட 15 போலீசார் கடலூருக்கும், விழுப்புரத்துக்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இது திருப்பத்தூர் மாவட்டத்தில் பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
போலீஸ் துறையை பொருத்தமட்டில் தண்டனை என்பது ஆயுதப் படைக்கு மாற்றுவது, சரகத்துக்கு உள்ளாக இடமாற்றம் செய்வது என்பதைத்தான் அதிகம் பேர் செய்வார்கள். ஆனால் ஆயுதப்படைக்கு மாற்றம் என்பது அவர்களுக்கு அளிக்கப்படும் ஓய்வாகவே கருதப்படுகிறது. தவறும் செய்து விட்டு பணி செய்யாமல் ஓய்வெடுக்கும்படியாக விட்டு விடுவது எந்த வகையில் தண்டனை எனத் தெரியவில்லை. இப்படித்தான் பலர் ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டு வருகின்றனர். ஆனால் இதற்கெல்லாம் மாற்றாக தவறு செய்தவர்கள் மீது கடும் தண்டனையாக சரகம் விட்டு சரகம் இடமாற்றம் செய்திருப்பது பலரையும் நெற்றியை சுருக்க வைத்துள்ளது.
இது குறித்து போலீஸ் தரப்பில் கேட்ட போது, பொதுவாக தண்டனைக்கான இடமாற்றம் என்பது ஆயுதப் படையாக இருக்கும். புது எஸ் பி தவறு செய்பவர்கள் யாராக இருந்தாலும் கடும் நடவடிக்கைதான் என ஏற்கனவே எச்சரித்து இருந்தார். அதை கேட்ட பின்னர் ஆவது இவர்கள் திருந்தி இருக்கலாம். பெண் தானே சாப்டா இருப்பார்கள் என நினைத்து விட்டார்கள். அதனால் அவர் வாய்ப்பு கொடுத்தும் திருந்தாத நிலையில், சரகம் விட்டு சரகம் தூக்கி அடித்துள்ளார். இதனால் தவறு செய்யும் போலீசார் மத்தியில் அச்சம் ஏற்பட்டுள்ளது என்றனர்.
மேலும் அவர்கள் கூறுகையில், திருப்பத்தூர் மாவட்டத்தில் பணியாற்றி வரும் பல போலீசார் பழைய நினைப்பிலேயே பணியாற்றி வருகின்றனர். அதாவது தாலுகாவாக இருந்தபோது, போலீசார் எப்படி இருந்தார்களோ, அதே நினைப்பில் தான் இன்னமும் பணியாற்றி வருகின்றனர். திருப்பத்தூர் என்பது தாலுகா என்பதை தாண்டி, மாவட்ட தலைநகர் என்ற அந்தஸ்தை பெற்றுள்ளது. அதற்கேற்ப போலீசார் தங்களை மாற்றிக் கொள்ள வேண்டும். அப்படி இல்லை என்றால் இப்போது சரகம் விட்டு சரகம் இடமாற்றம், அதன் பின்னர் திருப்பத்தூர் டு கன்னியாகுமரி இடமாற்றம் நடந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. வரும் எஸ்பிகள் மிகவும் நேர்மையாக இருக்கின்றனர். அதனால் தவறு செய்தவர்கள் தாங்களாகவே திருந்திக் கொள்ள வேண்டும். இல்லையென்றால் திருத்தப் படுவார்கள் என்றனர்.