

திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தைச் சேர்ந்த போஸ்ட்மேன் செந்தில்குமார் என்பவர், பொதுமக்களுக்கு விநியோகம் செய்ய வேண்டிய கடிதங்களை கடத்த நான்கு ஆண்டுகளாக டெலிவரி செய்யவில்லை என கைது செய்யப்பட்டுள்ளது திருப்பூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வங்கிகளில் இருந்து வாடிக்கையாளருக்கு அனுப்பப்பட்ட ஏ.டி.எம் கார்டுகள், ரேஷன் கார்டுகள், ஆதார் கார்டுகள், நீதிமன்ற ஆணைகள், நீட் தேர்வு தொடர்பான தபால்கள் உள்ளிட்ட பல முக்கியமான தபால்களை சம்பந்தப்பட்டவர்களுக்கு விநியோகம் செய்யாமல் கடந்த 4 ஆண்டுகளாக இப்படி செய்து வந்திருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
திருப்பூர் மாவட்டம் காங்கேயம் கோவை ரோடு, தட்டான் தோட்டத்தை சேர்ந்தவர் போஸ்ட்மேன் செந்தில்குமார். வயது 45. இவர் வெள்ளகோவில் தபால் நிலையத்தில் போஸ்ட்மேன் ஆக கடந்த 15 வருடங்களாக பணியாற்றி வருவதாக தெரிகிறது. இந்நிலையில் கடந்த ஒரு வாரத்துக்கு முன் அவர் வசிக்கும் வீட்டுக்கு பின் பகுதியில் அவர்கள் கடிதங்கள் போன்ற போன்றவை அடங்கிய சில மூட்டைகள் கிடப்பதாக திருப்பூர் தபால் துறைக்கு அவர் வீட்டின் அருகில் இருந்தவர்கள் புகார் தந்துள்ளனர்.
இந்த புகார் திருப்பூர் மாவட்ட தபால் துறையின் உயர் அதிகாரிகள் கவனத்திற்குச் சென்றதைத் தொடர்ந்து மாவட்ட தபால் துறை அதிகாரிகள் செந்தில்குமார் வீட்டுக்குச் சென்று சோதனை இட்டபோது வீட்டுக்குள் அவர் பதுக்கி வைத்திருந்த மூட்டைகளை கண்டனர் . அதைக் கைப்பற்றி சோதனை நடத்திய போது கடந்த 4 ஆண்டுகளுக்கு மேல் வெள்ளகோவில் பகுதி மக்களுக்கு வந்த மிகவும் முக்கியமான ஆதார், வங்கி ஏடிஎம் கார்டு, பான் கார்டு, வக்கீல் நோட்டீஸ் உள்ளிட்ட பல கடிதங்கள் இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
குறிப்பாக இந்த மூட்டைகளை யாரும் எடுத்து விடக்கூடாது என்ற எண்ணத்தில் செந்தில்குமார் தனது வீட்டில் ஐந்து நாய்களை வளர்த்து வந்ததாகவும் மாவட்ட தபால் துறை அதிகாரிகள் வீட்டுக்கு சோதனைக்கு வருவதை அறிந்து பதுக்கி வைத்திருந்த மூட்டைகளில் சிலவற்றை அவசர அவசரமாக தீயிட்டு எரித்ததும் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது என தகவல்கள் தெரிவிக்கின்றனர்.
செந்தில்குமார் வீட்டுக்கு சென்று கைப்பற்றிய ஏழு மூட்டைகளில் இருந்த தபால்களை பறிமுதல் செய்து வெள்ளக்கோவில் தபால் நிலைய அலுவலர்கள் அவற்றை ஆட்டோவில் ஏற்றி தபால் நிலையம் கொண்டு சென்றதாகவும் , தபால் நிலைய அலுவலர்கள் மற்றும் போஸ்ட்மேன் ஆகியோரிடம் விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் சொல்லப்படுகிறது.
இது குறித்து திருப்பூர் கோட்ட தலைமை தபால் கண்காணிப்பாளர் கூறுகையில் சம்பந்தப்பட்ட போஸ்ட்மேன் செந்தில்குமாரை சஸ்பெண்ட் செய்து விசாரணை நடப்பதாகவும் கடந்த ஆறு மாதமாக அவருக்கு உடல் நலம் சரியில்லை என்று முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்ததாகவும் தற்போது டெலிவரி செய்யப்படாமல் உள்ள தபால்களை அதற்கு உரியவர்களிடம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்திருக்கிறார்.
மேலும் ஏடிஎம் கார்டுகள், பாஸ்போர்ட், அரசு வேலை வாய்ப்பு ஆணைகள் போன்ற முக்கிய ஆவணங்கள் விநியோகிக்கப்படாமல் இருந்ததால் அரசு ஊழியராக இருந்த தன்னிடம் ஒப்படைக்கப்பட்ட பொதுமக்களின் சொத்தை துரோகம் செய்து பதுக்கியதற்காக நம்பிக்கை மோசடி வழக்கு பதிவு செய்ய முடியும் என்றும் அதேபோல் பொதுமக்களின் கடிதங்களை சட்டவிரோதமாக தனது தனிப்பட்ட இடத்தில் மறைத்து வைத்திருந்ததாக அரசு ஆவணங்களை சேதப்படுத்துதல் மற்றும் திருடுதல் பிரிவில் போலீசார் வழக்கு செய்ய முடியும் எனவும் கூறப்படுகிறது .
இப்போது முறைப்படி அந்த கடிதங்கள் உரியவர்களிடம் சேர்க்கப்பட்டாலும் காலம் கடந்த பின் அவைகள் அவர்கள் கையில் கிடைத்து ஏதேனும் பயன் உள்ளதா என்பது கேள்விக்குறியே.
நான்கு வருடங்களாக ஒரு அரசு ஊழியர் எப்படி தனது பணியை செய்யாமல் இருந்திருக்க முடியும் என்ற கேள்வியும் எழுகிறது . கடந்த ஆறு மாதங்களாக அவருக்கு உடல்நலம் சரியில்லை என்பது ஒரு காரணமாக இருந்தாலும் பதிவுத்தபால்கள் அனுப்புபவர்கள் அது உரியவர்களுக்கு சென்ற சேர்ந்து விட்டதா என தெரிந்து கொள்ள முயற்சித்து இருப்பார்கள்.
அதேபோல் தபால் துறை அதிகாரிகள் இவரிடம் கொடுத்து அனுப்பும் தபால்கள் பட்டுவாடா செய்யப்பட்டு விட்டதா என்பதை நான்கு வருடங்களாக அறியாமல் இருந்தது எப்படி என்ற கேள்விகளும் இந்த வழக்கு மீது பல சந்தேகங்களை எழுப்புகிறது என்ற கருத்துக்களும் நிலவி வருகிறது.
இவர் பதுக்கி வைத்த அந்த கடிதங்களில் எத்தனை வேலை வாய்ப்புகள் பறிபோனதோ? எத்தனை இடங்கள் மோசடி செய்யப்பட்டதோ? எத்தனை வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டதோ ? தற்போது அனைத்தும் ஆன்லைன் என்றாலும் புத்தகங்கள் , வழக்கறிஞர் நோட்டீஸ்கள், ஆவணங்கள் போன்றவைகளுக்கு இன்னும் தபால் துறைதான் பயன்படுத்தப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
பாதிக்கப்பட்ட பொதுமக்கள் நுகர்வோர் பாதுகாப்பு சட்டத்தின்படி தபால் துறையின் மீது கூட வழக்கு தொடரும் வாய்ப்பு உள்ளது என்று வழக்கறிஞர்கள் கருதினாலும் இந்த வழக்கின் உண்மை தன்மை என்ன என்பது தெரியாத வரை இதில் கருத்து எதுவும் சொல்ல முடியாது என்றும் கூறுகின்றனர்.
விசாரணையில் போஸ்ட் மேன் செந்தில் குமார் அளிக்கும் விபரங்களில்தான் தெரியவரும் இந்த தபால்கள் பதுக்கலின் பின்னணி என்ன வென்று..?