

வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித்தொகை திட்டத்தில் வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவுதாரர்கள் வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம். இதில் பள்ளி இறுதி வகுப்பு தேர்ச்சி பெறாதவர்கள், பள்ளி இறுதி வகுப்புத் தேர்ச்சி, மேல்நிலைக்கல்வி தேர்ச்சி, பட்டப்படிப்பு கல்வித் தகுதிகள் தேர்ச்சி பெற்று வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து தொடர்ச்சியாக பதிவை புதுப்பித்து வருபவர்கள் 31.12.2025-ம் தேதியின் நிலவரப்படி 5 ஆண்டுகளுக்கு மேல் காத்திருப்பவராக இருத்தல் வேண்டும்.
மாற்றுத்திறனாளி பதிவுதாரர்களாக இருப்பின் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து ஓராண்டு முடித்திருக்க வேண்டும். குடும்ப ஆண்டு வருமானம் ரூ.72 ஆயிரத்துக்கு மிகாமல் இருத்தல் வேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்கு வருமான உச்சவரம்பு இல்லை. அரசின் பிறதுறை மூலம் உதவித்தொகை பெறுபவர்கள் இந்த உதவித்தொகை பெற விண்ணப்பிக்க இயலாது.
ஒரு பதிவுதாரருக்கு ஒருமுறை மட்டுமே உதவித்தொகை வழங்கப்படும். 10-ம் வகுப்பு தவறியவர்களுக்கு மாதம் ரூ.200, தேர்ச்சி பெற்றவர்களுக்கு மாதம் ரூ.300, மேல்நிலைக்கல்வி முடித்தவர்களுக்கு மாதம் ரூ.400, பட்டதாரிகளுக்கு மாதம் ரூ.600 எனவும், மாற்றுத்திறனாளிகளுக்கு 10-ம் வகுப்பு தேர்ச்சி மற்றும் தேர்ச்சி பெறாதவர்களுக்கு மாதம் ரூ.600, மேல்நிலைவகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு மாதம் ரூ750, பட்டதாரிகளுக்கு ரூ.1000 உதவித்தொகை வழங்கப்படும்.
மேற்குறிப்பிட்ட தகுதிகள் உள்ளவர்கள் திருவண்ணாமலை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பெறப்பட்ட விண்ணப்பப்படிவத்திலோ அல்லது www.tnvelaivaaippu.gov.in என்ற வேலைவாய்ப்பு துறை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யப்பட்ட விண்ணப்பப் படிவத்திலோ பூர்த்தி செய்து வருவாய்த்துறையில் வருவாய் ஆய்வாளர் அல்லது அதற்கு மேற்பட்ட அலுவலரிடம் இருந்து பெறப்பட்ட சான்றும், தேசியமயமாக்கப்பட்ட வங்கி கணக்குப் புத்தகம், ஆதார் அட்டை மற்றும் அனைத்துக் கல்வி சான்றுகள் அசல் மற்றும் நகல்களுடன் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வருகிற பிப்ரவரி மாதம் 27-ந் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.
மாற்றுத்திறனாளிகளுக்கு வருமான சான்று தேவையில்லை என்பதால் மேற்குறிப்பிட்ட இதர ஆவணங்களுடன் அலுவலக வேலை நாட்களில் மாதந்தோறும் நேரில் வருகை புரிந்து விண்ணப்பம் அளித்து சேர்க்கைக்கான அனுமதி பெறலாம்.