

திருவண்ணாமலையில் உலக பிரசித்தி பெற்ற அருணாசலேஸ்வரர் கோவில் உள்ளது. திருவண்ணாமலையார் கோவில் என்று அழைப்படும் அருணாச்சலேஸ்வரர் கோவில், தமிழ்நாட்டின் திருவண்ணாமலையில் உள்ள பழமையான மற்றும் மிகவும் பிரபலமான இந்து கோவில்களில் ஒன்றாகும். இது மிகவும் சக்தி வாய்ந்த சிவபெருமானின் கோவில்களில் ஒன்றாகும். இயற்கையின் ஐந்து கூறுகளைக் குறிக்கும் ஐந்து பஞ்ச பூத தலங்களில் இந்தக் கோவில் ஒன்றாகும். அருணாச்சலேஸ்வரர் கோவில் நெருப்பை (அக்னி) குறிக்கிறது.
மூலவர் அக்னி லிங்கமாகவும், அன்னை உண்ணாமுலையம்மனாகவும் அருள்பாலிக்கின்றனர். நினைத்தாலே முக்தி தரும் இத்தலத்தில், கார்த்திகை தீபத் திருவிழாவும், ஒவ்வொரு பௌர்ணமியிலும் லட்சக்கணக்கான பக்தர்கள் மேற்கொள்ளும் கிரிவலமும் மிகவும் பிரசித்தி பெற்றவை.
இந்த கோவிலுக்கு தினமும் உள்ளூர் மட்டுமின்றி வெளிமாவட்டங்கள், வெளிமாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்த சாமி தரிசனம் செய்கின்றனர். குறிப்பாக ஆந்திரா, தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் சேர்ந்த பக்தர்கள் அதிகளவில் வருகின்றனர்.
இந்தக் கோவில் அண்ணாமலை மலை அடிவாரத்தில் அமைந்துள்ளது, இத்தலத்தில் உள்ள மலை எல்லா யுகங்களிலும் அழியாமல் இருப்பதாகவும், இம்மலையானது சிவபெருமானே என்றும் நம்பப்படுகிறது. மேலும் இக்கோவில் பின்புறம் உள்ள மகா தீபம் ஏற்றப்படும் மலையை சுற்றி தினமும் பகல், இரவு நேரங்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்ற வண்ணம் காணப்படுகின்றனர். நினைத்தாலே முக்தி தரும் இத்தலத்தில், கார்த்திகை தீபத் திருவிழாவும், ஒவ்வொரு பவுர்ணமி போன்ற விசேஷ நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் மேற்கொள்ளும் கிரிவலமும் மிகவும் பிரசித்தி பெற்றவை.
தினமும் காலை 5.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகிறார்கள். இதனால் அருணாசலேஸ்வரர் கோவிலில் அதிகாலை நடைதிறக்கும் சமயத்தில் இருந்து இரவில் நடை சாத்தும் வரையில் பக்தர்கள் கூட்டம் அதிகளவில் காணப்படுகிறது.
முன்பெல்லாம் விடுமுறை நாட்களிலும், விசேஷ நாட்களில் மட்டுமே கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிகளவில் காணப்படும். ஆனால் சமீப நாட்களாக அனைத்து நாட்களிலும் பக்தர்கள் கூட்டம் அதிகமாகவே காணப்படுகிறது. இதனால் அடிக்கடி கூட்ட நெரிசல் ஏற்படுகிறது. பக்தர்கள் மணிக்கணக்கில் வரிசையில் காத்திருநது சாமி தரிசனம் செய்ய வேண்டிய அவலநிலை உள்ளது.
திருப்பதிக்கு நிகராக தமிழகத்தில் அருணாசலேஸ்வரர் கோவிலில் பக்தகர்கள் கூட்டம் அதிகமாக வருகிறது.
இதனை பயன்படுத்தி இடைத்தரகர்கள் பலர் கோவிலில் விரைவாக சாமி தரிசனம் செய்ய உதவி செய்வதாக மோசடியில் ஈடுபட்டு பக்தர்களிடம் ஒருவருக்கு ரூ.500 முதல் ரூ.1000 வரையில் வசூல் செய்வதாகவும், கோவிலில் அரசியல் பின்பலத்துடன் ஏராளமான இடைத்தரகர்களாக செயல்பட்டு வருவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்த வண்ணம் உள்ளது.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பின்பற்றப்படும் முறையை போல தமிழகத்தில் உள்ள திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் உள்பட 50 முக்கிய கோவில்களில் கூட்ட நெரிசல், முறைகேடுகளை தடுக்கும் நடவடிக்கையாக ஆன்லைன் முன்பதிவு தரிசன முறையை நடைமுறைப்படுத்த உள்ளதாக கடந்த 7-ந்தேதி இந்து சமய அறநிலையத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் ஆன்லைன் முன்பதிவு தரிசன முறை கொண்டு வந்தால் இக்கோவிலில் பக்தர்கள் தடையின்றி தரிசனம் செய்யவும், நீண்ட வரிசையில் காத்திருக்காமல் குறிப்பிட்ட கால நேரத்திற்குள் தரிசனம் செய்வதற்கும் வழிவகை செய்யப்படும். குறிப்பாக இடைத்தரகர்கள் ஆதிக்கம் குறையும் என்று பக்தர்கள் கருதுகின்றனர்.
எனவே அருணாசலேஸ்வரர் கோவிலில் ஏற்படும் கூட்ட நெரிசல், இடைத்தரகர்களின் ஆதிக்கத்தை ஒழிக்கவும் விரைவாக ஆன்லைன் முன்பதிவு தரிசன முறையை அமல்படுத்த வேண்டும் என்று தமிழக அரசுக்கு பக்தர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர். ஆன்லைன் முன்பதிவு தரிசன முறை அறிவிப்பு என்பது சாதாரண அறிவிப்பாக இல்லாமல் பக்தர்களின் நலனை கருத்தில் கொண்டு விரைந்து செயல்படுத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் இக்கோவிலில் தினசரி சாமி தரிசனம் செய்யும் உள்ளூர் பக்தர்கள் எந்தவித தடையுமின்றி சாமி தரிசனம் செய்யவும் வழிவகை செய்ய வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.