டைட்டானிக் கப்பல் விபத்தில் நூற்றுக்கணக்கான உயிர்களை காப்பாற்றியதற்காக கேப்டன் ஆர்தர் ஹென்றி ரோஸ்ட்ரானுக்கு வழங்கப்பட்ட தங்க பாக்கெட் கடிகாரம் 16 கோடிக்கு விற்பனையாகி சாதனை படைத்துள்ளது.
வரலாற்றில் சிறப்புமிக்க டைட்டானிக் கப்பல் 'ஒயிட் ஸ்டார்' என்ற நிறுவனத்தால் 1911 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது.
கடந்த 1912-ல் இந்தக் கப்பல், தனது முதல் பயணமாக சவுத்தாம்ப்டனில் இருந்து நியூயார்க் நகரத்திற்கு புறப்பட்டது. இதில் 2,200 பயணிகள் பயணித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
டைட்டானிக் கப்பல் அட்லாண்டிக் பெருங்கடலில் சென்றுகொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக பனிப்பாறையில் மோதி விபத்துக்குள்ளானது. அதில் பயணித்த 2,200 பயணிகளில் 1,500 பேர் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த நிகழ்வானது, வரலாற்றில் மோசமான கடல் விபத்துகளில் ஒன்றாக கருதப்படுகிறது. மீதமிருந்த, உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த 700 பயணிகளை கேப்டன் ஆர்தர் ரோஸ்ட்ரான் காப்பாற்றினார்.
ரோஸ்ட்ரான் காற்றிய 700 பயணிகளில் ஜான் பி தைய்யர், ஜான் ஜேக்கப் ஆஸ்டர் மற்றும் ஜார்ஜ் டி வைட்னர் ஆகிய மூன்று பெண்களும் அடங்குவர். இவர்கள், தங்களின் உயிரைக் காப்பாற்றியதாக கேப்டன் ஆர்தர் ரோஸ்ட்ரானுக்கு, டிஃப்பனி அண்ட் கோ நிறுவனத்தின், 18 காரட் தங்க பாக்கெட் கடிகாரத்தை பரிசாக அளித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
டைட்டானிக் கப்பல் விபத்துக்கு பிறகு, அதிலிருந்து மீட்கப்பட்ட பொருள்கள் அல்லது அது தொடர்பான நினைவுப் பொருள்கள், அவ்வப்போது ஏலத்தில் விடப்பட்டு வருவதுண்டு. அந்த வகையில், விபத்துக்குள்ளான டைட்டானிக் கப்பலில் இருந்து மீட்கப்பட்ட வயலின், கடந்த 2013ல் ரூ.11.65 கோடிக்கு ஏலத்தில் விற்கப்பட்டது. கடந்த, 11 ஆண்டுகளாக இந்த வயலின் தான், டைட்டானிக் நினைவுச் சின்னங்கள் ஏலம் விடப்பட்டதில் மிக அதிக தொகைக்கு வாங்கப்பட்ட கலைப்பொருள் என்ற சாதனையைப் படைத்திருந்தது.
இந்நிலையில், கேப்டன் ஆர்தர் ரோஸ்ட்ரானின் தங்க பாக்கெட் கடிகாரம் அந்த வயலினின் சாதனையை முறியடித்து உலக சாதனைப் படைத்துள்ளது.
சமீபத்தில், இங்கிலாந்தின் டிவைசஸ் நகரில் உள்ள ஹென்றி ஆல்டிரிட்ஜ் அண்ட் சன் நிறுவனம், இந்தக் கடிகாரத்தை ஏலத்திற்கு கொண்டு வந்தது. அந்த ஏலத்தில் கலந்து கொண்ட அமெரிக்கர் ஒருவர் 1.5 மில்லியன் பிரிட்டன் பவுண்டுக்கு (அதாவது இந்திய மதிப்பில் ரூ.16 கோடிக்கு மேல்) இந்த பாக்கெட் கடிகாரத்தை வாங்கியுள்ளார். இதுவே, விபத்துக்குள்ளான டைட்டானிக் கப்பலின் ஏலப் பொருட்களில் அதிக விலைக்கு விற்பனையான பொருள் என்ற சாதனையைப் படைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.