முக்கிய அறிவிப்புகள் வெளியாக வாய்ப்பு..! முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம்..!
2026 ஆம் ஆண்டுக்கான சட்டமன்ற கூட்டத் தொடர் ஜனவரி 20 ஆம் தேதி ஆளுநர் உரையுடன் துவங்க உள்ளது.இந்த சட்டமன்ற கூட்டத்தொடரில் தமிழக அரசு இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதனிடையே, வரும் ஜனவரி 6 ஆம் தேதி மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெறவுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த அமைச்சரவை கூட்டத்தில் 2026 ஆம் ஆண்டு நடைபெற உள்ள முதல் சட்டமன்றக் கூட்டத் தொடர் தொடர்பாகவும், ஆளுநர் வாசிக்கும் உரையில் இடம் பெற வேண்டிய குறிப்புகள் தொடர்பாகவும் ஆலோசிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் ஆசிரியர்கள், செவிலியர்கள் மற்றும் தூய்மைப் பணியாளர்கள் எனப் பல்வேறு தரப்பினர் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வரும் நிலையில், அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவது குறித்துத் தமிழக அமைச்சரவைக் கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்பட உள்ளது. குறிப்பாக, அரசு ஊழியர்களின் நீண்டகால கோரிக்கையான பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்துவது தொடர்பான முக்கிய அறிவிப்புகள் இந்த கூட்டத்தில் வெளியாக வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது. போராட்டக்காரர்களின் அதிருப்தி வரும் தேர்தலில் எதிரொலிக்காத வண்ணம், ஆக்கப்பூர்வமான முடிவுகளை எடுக்க அரசு திட்டமிட்டுள்ளது.
விரைவில் சட்டமன்றத் தேர்தல் வரவிருப்பதால், இந்த அமைச்சரவைக் கூட்டம் அரசியல் ரீதியாகப் பெரும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் பொதுமக்களைக் கவரும் விதமாகப் பல்வேறு புதிய மக்கள் நலத்திட்டங்கள் மற்றும் சலுகைகள் குறித்தும் இதில் ஆலோசிக்கப்பட உள்ளது. அரசு ஊழியர்கள் மற்றும் பல்வேறு துறையினரின் கோரிக்கைகளைச் சாதகமாகப் பரிசீலிப்பதன் மூலம் தேர்தலுக்கு முந்தைய அரசியல் சூழலைத் தங்களுக்குச் சாதகமாக மாற்ற அரசு முயன்று வருகிறது.
மேலும், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்படவுள்ள ரொக்கப் பரிசுத் தொகை குறித்தும் இந்தக் கூட்டத்தில் இறுதி முடிவு எடுக்கப்பட வாய்ப்புள்ளது. இந்த ஆண்டு பொங்கல் பரிசாகப் பெரிய தொகையை வழங்க அரசு திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகி வரும் நிலையில், அது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு அமைச்சரவை ஆலோசனைகளுக்குப் பிறகு வெளியாகக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

