.jpg?w=480&auto=format%2Ccompress&fit=max)
.jpg?w=480&auto=format%2Ccompress&fit=max)
கடந்த 2023 ஆம் ஆண்டு இந்தியாவில் 2,000 ரூபாய் நோட்டுகள் ரிசர்வ் வங்கியால் திரும்பப் பெறப்பட்டன. இந்நிலையில் இன்னமும் ஒரு சிலர் 2,000 ரூபாய் நோட்டுகளை வைத்திருப்பதால், அதனை மாற்றிக் கொள்ள ஒரு அரிய வாய்ப்பை ரிசர்வ் வங்கி தற்போது வழங்கியுள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி ஆட்சியின் கீழ் கடந்த 2016 ஆம் ஆண்டு, பணமதிப்பிழப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதன்படி பழைய 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகளை ரத்து செய்துவிட்டு, புதிய 500 மட்டும் 2,000 ரூபாய் நோட்டுகளை அறிமுகம் செய்தது மத்திய அரசு.
பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் போது, பொதுமக்கள் பலரும் கடுமையான சிரமத்திற்கு உள்ளாகினர். இருப்பினும் படிப்படியாக நிலைமை சீராகி, புதிய ரூபாய் நோட்டுகள் மக்கள் மத்தியில் பரவலாக பயன்படுத்தப்பட்டது.
இந்நிலையில் கடந்த 2023 ஆம் ஆண்டு மே மாதத்தில், 2,000 ரூபாய் நோட்டுகளை மட்டும் திரும்பப் பெறுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்தது.
புதிய 2,000 ரூபாய் நோட்டுகளை அறிமுகப்படுத்தி, சில ஆண்டுகளிலேயே அதனை ரிசர்வ் வங்கி திரும்பப் பெற்றதால், பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இருப்பினும் இதற்கு குறிப்பிட்ட கால அவகாசம் வழங்கப்பட்டு, அஞ்சல் அலுவலகம் மற்றும் வங்கிகளில் 2,000 ரூபாய் நோட்டை கொடுத்து மாற்றிக் கொள்ளலாம் என ரிசர்வ் வங்கி அறிவித்திருந்தது.
இது பணமதிப்பிழப்பு நடவடிக்கை இல்லை என ரிசர்வ் வங்கி சார்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும் பொதுமக்கள் மத்தியில் 2,000 ரூபாய் நோட்டுகளின் புழக்கம் குறைவாக இருந்ததாலும், சிறிய மதிப்பிலான ரூபாய் நோட்டுகளின் புழக்கத்தை அதிகப்படுத்தவும் ரிசர்வ் வங்கி இம்முடிவை எடுத்தது.
இந்நிலையில் ரிசர்வ் வங்கி 98% அளவிலான 2,000 ரூபாய் நோட்டுகளை திரும்ப பெற்றுக் கொண்டது. மேலும் 2% நோட்டுகள் இன்னும் மக்களிடையே இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. 2,000 ரூபாய் நோட்டுகள் சட்டப்படி தடை செய்யப்படவில்லை என்பதால் வர்த்தகத்திற்கும், பணம் செலுத்துவதற்கும் இதனைப் பயன்படுத்தலாம். ஆனால் வங்கிகள் 2,000 ரூபாய் நோட்டுகளை வாங்க மறுப்பதன் காரணமாக, சில்லறை வியாபாரிகளும் இந்த நோட்டுகளை வாங்க மறுக்கின்றனர் என்பதே தற்போதைய நிலைமை.
கடந்த 2023 இல் ரிசர்வ் வங்கி 2,000 ரூபாய் நோட்டுகளை திரும்பப் பெறும் அறிவிப்பை வெளியிட்ட போது, இதனை வங்கிகளில் மாற்றிக் கொள்ள அதே ஆண்டு அக்டோபர் 7 ஆம் தேதி வரை காலக்கெடுவை நிர்ணயித்தது. அதன்பிறகு வங்கிகள் மற்றும் அஞ்சல் அலுவலகங்களில் 2,000 நோட்டுகள் வாங்கப்படுவது நிறுத்தப்பட்டது. இந்நிலையில் உங்களிடம் ஏதேனும் 2,000 ரூபாய் நோட்டுகள் இருந்தால், அதனை மாற்றிக் கொள்ள ரிசர்வ் வங்கி மற்றுமொரு அரிய வாய்ப்பை வழங்கியுள்ளது.
இதுகுறித்து ஒரு முக்கிய அறிவிப்பு ஒன்றை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கையில், “2,000 ரூபாய் நோட்டுகளை திரும்பப் பெற்றது பண மேலாண்மையை மேம்படுத்துவதற்காக மட்டுமே. 2,000 ரூபாய் நோட்டுகளைத் திரும்பப் பெற்றதன் மூலம், அவை செல்லாதவை என்று அர்த்தமல்ல. ஆகையால் 2,000 ரூபாய் நோட்டுகளை வைத்திருந்தால் அபராதமோ, தண்டனையோ விதிக்கப்படாது.
உங்களிடம் ஏதேனும் 2,000 ரூபாய் நோட்டுகள் இருந்தால், அதனை ரிசர்வ் வங்கி வெளியீட்டு அலுவலகத்தில் டெபாசிட் செய்து கொள்ளலாம். இதற்கு வழக்கமான வங்கி நடைமுறைகள் பொருந்தும்.
மேலும் உங்களுக்கு அருகில் உள்ள அஞ்சல் அலுவலகங்களின் வாயிலாகவும் 2,000 ரூபாய் நோட்டுகளை, ரிசர்வ் வங்கி வெளியீட்டு அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கலாம். சரிபார்ப்பு விவரங்கள் முடிந்த பிறகு, இந்தப் பணம் உங்கள் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும்” என ரிசர்வ் வங்கி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.