

தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று காலை 9.30 மணிக்கு தொடங்கியது. முதற்கட்டமாக கேள்வி நேரம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து, 2026–27ஆம் ஆண்டுக்கான மானியக் கோரிக்கைகள் மீது விவாதமும் வாக்கெடுப்பும் நடைபெற்றது .
அதன்படி, முதலில் பால்வள மேம்பாட்டுத் துறைக்கான மானியக் கோரிக்கையை அமைச்சர் விஜயலட்சுமி கொண்டு வந்தார் . அடுத்து மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறைக்கான மானியக் கோரிக்கையை அமைச்சர் ஸ்ரீநாத் கொண்டு வந்தார் .
மீன்வளத்துறை மற்றும் மீனவர் நலத்துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் பேசிய அமைச்சர் ஸ்ரீநாத் பல்வேறு முக்கிய அறிவிப்புக்களை வெளியிட்டார்.
தமிழ்நாடு அரசால் மீன்வளம் மற்றும் நீர்வாழ் உயிரின வளர்ப்புத் துறையை மேம்படுத்தவும், மீனவர் நலனைக் காக்கவும் பல்வேறு புதிய திட்டங்கள் மற்றும் கட்டமைப்பு மாற்றங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
மீனவர் நலன் மற்றும் உதவித்தொகை உயர்வு:
கடலில் மீன்பிடிக்கும் போது காணாமல் போகும் மீனவர்களின் குடும்பங்களுக்கு வழங்கப்பட்டு வந்த தினசரி உதவித்தொகை ரூ.350-லிருந்து ரூ.600-ஆக உயர்த்தி வழங்கப்படும் என அமைச்சர் ஸ்ரீ நாத் அறிவித்துள்ளார்.
அண்டை நாட்டினரால் சிறைபிடிக்கப்படும் மீனவர்களின் குடும்பங்களுக்கு வழங்கப்படும் தினசரி உதவித்தொகை ரூ.500-லிருந்து ரூ.600-ஆக உயர்த்தப்படுகிறது.
இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்டு, விடுவிக்கப்பட்டு, மீட்க இயலாத படகுகளின் உரிமையாளர்களுக்கு ரூ.1.86 கோடி நிவாரண உதவித்தொகை வழங்கப்படும்.
மீன்வள மேம்பாடு மற்றும் புதிய தொழில்நுட்பங்கள்:
கடல் மீன்வளத்தைப் பெருக்கக் கடலோர மாவட்டக் கடற்பகுதிகளில் செயற்கை மீன் உறைவிடங்கள் அமைக்கப்படும் மற்றும் கடலில் மீன்குஞ்சுகள் இருப்பு செய்யும் திட்டம் விரிவுபடுத்தப்படும்.
கிருஷ்ணகிரி அரசு மீன் பண்ணையில் வளர்ச்சி முடக்கப்பட்ட மீன் விரலிகள் உற்பத்திப் பிரிவு புதிதாக நிறுவப்படும். அரசு மீன் குஞ்சு நிலையங்களை வலுப்படுத்தத் தரமான, வீரியமிக்க சினை மீன்கள் உருவாக்கப்படும்.
உவர்நீர் மீன் வளர்ப்பு மற்றும் கடல்வாழ் உயிரின வளர்ப்புக் கொள்கை உருவாக்கப்படுவதோடு, நீர்வாழ் மண்டலங்களை நிறுவ அறிவியல் பூர்வமான வரைபடம் மற்றும் கடலோர வளங்கள் மதிப்பீடு செய்யப்படும்.
கடலில் மிதவைக் கூண்டு மீன் வளர்ப்பு மற்றும் கடற்பாசி வளர்ப்பை ஊக்குவிக்க மானிய உதவிகள் வழங்கப்படும்.
நன்னீர் இறால் வளர்ப்பில் நிலையான வளர்ச்சியை ஊக்குவிக்கத் தனியாக நன்னீர் இறால் இனப்பெருக்க மையம் அமைக்கப்படும்.
உட்கட்டமைப்பு மற்றும் சந்தை வசதிகள்:
திருவொற்றியூர் மீன்பிடித் துறைமுகத்தில் அதிநவீன மீன் சந்தையும், கன்னியாகுமரி மாவட்டம் சின்னமுட்டம் மீன்பிடித் துறைமுகத்தில் ஒருங்கிணைந்த வெப்பநிலை கட்டுப்படுத்தும் டிஜிட்டல் மீன் ஏலக் கூடமும் அமைக்கப்படும்.
தேங்காப்பட்டணம் மீன்பிடித் துறைமுகத்தில் அணுகுசாலையைப் பாதுகாக்கப் பழைய கல்சுவர் சீரமைக்கப்பட்டு, புதிய கல்சுவர் அமைக்கப்படும்.
கடலூர் மாவட்டத்தில் மீனவர்களுக்கான அடிப்படை உட்கட்டமைப்பு மற்றும் பாதுகாப்பு வசதிகள் வலுப்படுத்தப்படும்.
மீன்வள உட்கட்டமைப்புப் பணிகளுக்காகத் 'திட்ட வடிவமைப்பு மற்றும் மேலாண்மைப் பிரிவு' தனியாக உருவாக்கப்படும்.
மீன்வளக் கூட்டுறவு சங்கங்கள், மீன் வளர்ப்போர் மற்றும் உற்பத்தியாளர் அமைப்புகளாக வலுப்படுத்தப்படும்.
கல்வி, ஆராய்ச்சி மற்றும் சர்வதேச நிகழ்வுகள்:
சென்னையில் சர்வதேச கடல் உணவுக் கண்காட்சி மற்றும் சமையல் திருவிழா நடத்தப்படும்.
தமிழ்நாடு டாக்டர் ஜெ. ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்தின் ஆய்வகங்கள் NABL அங்கீகாரத்துடன் வலுப்படுத்தப்படும்.
மீன்வளப் பல்கலைக்கழக மாணவர்களுக்குச் சர்வதேச ஆராய்ச்சி பயிற்சிகள் அளிக்கப்படுவதுடன், செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் திறனறி தொழில்நுட்பப் பயிற்சிகளும் வழங்கப்படும்.
முட்டுக்காடு மீன்வளர்ப்புத் தொழில் காப்பகம் மற்றும் தொழிற்பயிற்சி பயிலும் மாணவ, மாணவியருக்குப் புதிய தங்கும் விடுதியும், வாணியஞ்சாவடி மீன்வள முதுநிலை பட்டப்படிப்பு கல்வி நிலையத்தில் கூடுதல் தங்கும் விடுதி வசதியும் ஏற்படுத்தப்படும்.