

தமிழக அரசு கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்து பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் கல்வி உதவித்தொகை, காலை உணவு திட்டம், இலவச மிதி வண்டி, இலவச பேருந்து பயண அட்டை என பல திட்டங்கள் நடைமுறையில் உள்ளது.
தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறை நிர்வாக கட்டுப்பாட்டிலுள்ள திருக்கோவில்கள் வழிபாட்டுத் தலங்களாக மட்டுமல்லாமல், சமூக நோக்கத்தோடு செயல்படும் அறநிலையங்களாகவும் செயல்பட்டு வருகின்றன. அந்த வகையில், திருக்கோவில்கள் சார்பில் கல்வி நிறுவனங்கள், பயிற்சி பள்ளிகள், கருணை இல்லங்கள், மூத்த குடிமக்களுக்கான உறைவிடங்கள், மனநலக் காப்பகம், மருத்துவ மையங்கள் போன்றவை நடத்தப்பட்டு வருகின்றன.
அந்த வகையில் திருக்கோவில்கள் சார்பில் 6 அர்ச்சகர் பயிற்சிப் பள்ளிகள், 6 ஓதுவார் பயிற்சிப் பள்ளிகள், 3 தவில் மற்றும் நாதஸ்வர பயிற்சிப் பள்ளிகள், 2 வேத ஆகம பாடசாலைகள், ஒரு திவ்ய பிரபந்த பாடசாலை என 18 பயிற்சிப் பள்ளிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
இப்பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு உணவு, உடை, உறைவிடத்துடன் மாதந்தோறும் ஊக்கத்தொகையும் வழங்கப்பட்டு வருகிறது. கடந்த 2022-ம் ஆண்டுவரை முழுநேரமாக பயிலும் மாணவர்களுக்கு ரூ.1,000ம், பகுதிநேரமாக பயிலும் மாணவர்களுக்கு ரூ.500ம் வழங்கப்பட்டு வந்த நிலையில், அதனை மாற்றி, 2023-ம் ஆண்டு முதல் முழுநேரமாக பயிலும் மாணவர்களுக்கு ரூ.3,000 ஆகவும், 2024 ஆண்டு முதல் ரூ.4,000/-ஆகவும் உயர்த்தி வழங்கப்பட்டது. அதேபோல் பகுதி நேர வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு ஊக்கத்தொகையாக 2023-ம் ஆண்டு முதல் ரூ.1,500/- ஆகவும் 2024-ம் ஆண்டு முதல் ரூ.2,000/-ஆக வழங்கப்பட்டு வந்தது.
இந்நிலையில் இந்தாண்டு(2025) முதல் இந்த உதவித்தொகையை மீண்டும் அதிகரித்துள்ளது தமிழக அரசு. முழுநேரமாக பயிலும் மாணவர்களுக்கு ரூ.10,000ம், பகுதிநேரமாக பயிலும் மாணவர்களுக்கு ரூ.5,000ம் உயர்த்தி உள்ளது. இதன் மூலம், திருக்கோவில்கள் சார்பில் நடத்தப்படும் அர்ச்சகர், ஓதுவார், தவில் மற்றும் நாதஸ்வரம், திவ்ய பிரபந்த பாடசாலை மற்றும் வேத ஆகம பாடசாலை ஆகிய 18 பயிற்சிப் பள்ளிகளில் முழு நேரமாக பயிற்சி பெறும் 297 மாணவர்கள், பகுதி நேரமாக பயிற்சி பெறும் 66 மாணவர்கள் என மொத்தம் 363 மாணவர்கள் பயன்பெறுவர் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
அர்ச்சகர் பயிற்சி குறித்த கூடுதல் தகவல்கள்
* ஓராண்டு சான்றிதழ் படிப்பு - சைவ – வைணவ பயிற்சி
* சைவ-வைணவ முறைப்படி தமிழிலும், ஆகமத்திலும் முழுமையாக கற்றுத் தரப்படும்.
* ஆண், பெண் பாலின பாகுபாடின்றி அனைவரும் இந்த பயிற்சித் திட்டத்தில் சேரலாம்.
* இந்து சமய கோட்பாடுகளை கடைபிடிப்பவர்களாக இருத்தல் வேண்டும்.
* எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
* வயது வரம்பு 14 வயது முதல் 24க்குள் இருக்க வேண்டும்.
* பயிற்சி காலம் - ஓராண்டு காலம் மட்டும்
விண்ணப்ப படிவங்களை திருக்கோயில் அலுவலகத்தில் நேரில் பெற்றுக் கொள்ளலாம். திருக்கோயில் உள்ள இணையதள பக்கத்திலும் அல்லது இந்துசமய அறநிலையத்துறை இணையபக்கம் : https://hrce.tn.gov.in -திலும் அறிந்து கொள்ளுங்கள்.
கோயில் பயிற்சி பள்ளிகள்
1. மதுரை மாவட்டம், மதுரை, அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவர் திருக்கோயில் அர்ச்சகர் பயிற்சிப் பள்ளி (சைவம்),
2. திருவண்ணாமலை மாவட்டம், திருவண்ணாமலை, அருள்மிகு அருணாச்சலேசுவரர் திருக்கோயில் அர்ச்சகர் பயிற்சிப் பள்ளி (சைவம்),
3. தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர், அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் அர்ச்சகர் பயிற்சிப் பள்ளி (சைவம்),
4. திண்டுக்கல் மாவட்டம், பழனி, அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் அர்ச்சகர் பயிற்சிப் பள்ளி (சைவம்)
5. சென்னை மாவட்டம், திருவல்லிக்கேணி, அருள்மிகு பார்த்தசாரதி திருக்கோயில் அர்ச்சகர் பயிற்சிப் பள்ளி (வைணவம்),
6. திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம், அருள்மிகு அரங்காநாதசுவாமி திருக்கோயில் அர்ச்சகர் பயிற்சிப் பள்ளி (வைணவம்)
7. திருவள்ளுர் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர், அருள்மிகு ஆதிகேசவ பாஷ்யகார சுவாமி திருக்கோயில் அர்ச்சகர் பயிற்சிப் பள்ளி (வைணவம்)
8. நாமக்கல் மாவட்டம், அருள்மிகு லட்சுமி நரசிம்ம சுவாமி திருக்கோயில் அர்ச்சகர் பயிற்சிப் பள்ளி (வைணவம்)