.jpg?w=480&auto=format%2Ccompress&fit=max)
புதுமைப் பெண், தமிழ்ப் புதல்வன் திட்டத்தில் விண்ணப்பிக்க திருநங்கை, திருநம்பிகளுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசு புதுமைப் பெண் திட்டம் மற்றும் தமிழ் புதல்வன் திட்டங்கள் வழியாக தமிழ் வழியில் பள்ளி படிப்பை முடித்து கல்லூரியில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கப்பட்டு வருகிறது. பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய குடும்பங்களுக்கு நிதி நெருக்கடி காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு மாணவிகளை அனுப்ப முடியாத சூழல் இருக்கிறது. இதுபோன்ற சூழலில் புதுமைப்பெண் திட்டம் மாணவிகளுக்கு உதவியாக இருக்கிறது. பல மாணவ, மாணவிகள் கல்லூரி படிப்பையும் தொடர இந்த இரு திட்டங்களும் வழிவகை செய்கின்றன.
இந்நிலையில் புதுமைப் பெண், தமிழ்ப் புதல்வன் திட்டத்தின் கீழ் திருநங்கை, திருநம்பிகளுக்கான நிபந்தனைகளை தளர்த்தி தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை தமிழில் படித்திருக்க வேண்டும் என்ற நிபந்தனையை தளர்த்தி தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
இனி, தமிழ், ஆங்கிலம் என எந்த வழியில் பயின்றிருந்தாலும், இத்திட்டத்தில் பயன்பெற விரும்பும் திருநங்கைகள் தமிழ்நாடு திருநங்கைகள் நல வாரியத்தில் வழங்கப்பட்ட அடையாள அட்டையினை தாங்கள் பயிலும் கல்லூரியில் சான்றாக சமர்ப்பித்தால் போதுமானது.
திருநங்கை, திருநம்பி, இடைபாலினத்தவர்கள் UMIS இணையதளத்தில் விண்ணப்பித்து உயர்கல்வி பயில உதவித்தொகை பெறலாம் என அரசு தெரிவித்துள்ளது.