

கோடை காலத்தில், தலைச்சுற்றல், அதிக காய்ச்சல் அல்லது சோர்வு போன்ற வெப்பம் தொடர்பான நோய்களின் அறிகுறிகளுக்கு பாராசிட்டமால் அல்லது ஆஸ்பிரின் உட்கொள்வதைத் தவிர்க்குமாறு தமிழ்நாடு சுகாதாரத் துறை பொதுமக்களுக்கு ஒரு முக்கிய எச்சரிக்கையை விடுத்துள்ளது.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாகக் கோடை வெயிலின் தாக்கம் மிக அதிகமாக உள்ளது. குறிப்பாக, கத்திரி வெயில் (அக்னி நட்சத்திரம்) தொடங்குவதற்கு முன்பே, மாநிலத்தின் பல மாவட்டங்களில் வெப்பநிலை 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை தாண்டி பதிவாகி வருகிறது. வேலூர், கரூர் பரமத்தி, ஈரோடு, மதுரை, திருத்தணி, சேலம், கோவை, திருச்சி, கடலூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில்
100 டிகிரி ஃபாரன்ஹீட்டை தாண்டி அதிகமான வெப்பநிலை பதிவாகியுள்ளது. இதனால் சாலைகளில் அனல் காற்று வீசி பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
வரும் நாட்களில், குறிப்பாக உள் மாவட்டங்களில் வெப்பநிலை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும், வெப்ப அலை வீசக்கூடும் என்றும் வானிலை மையம் எச்சரிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக உள் மாவட்டங்களில் இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை உயர வாய்ப்புள்ளது.
இந்நிலையில் கோடை வெயிலின் அதீத வெப்பம் காரணமாக கோடை கால நோய்கள், வைரஸ் தொற்றுகள் அதிகளவில் பரவும் சூழல் எழுந்துள்ளது. மற்றொரு புறம், இணை நோயாளிகள், குழந்தைகள், முதியவர்கள் பகல் வேளைகளில் அவசியமின்றி வெளியே வர வேண்டாம் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். குறிப்பாக பொதுமக்கள், 12 மணி முதல் 3 மணி வரை வெளியே செல்வதைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தி உள்ளனர்.
இந்நிலையில், வெப்பவாத பாதிப்புக்கு உள்ளாவோரின் உடல் வெப்ப நிலையைக் குறைக்க மருத்துவரின் பரிந்துரையின்றி சிலர் வெவ்வேறு மாத்திரைகளை உட்கொள்வதாகத் தெரிகிறது. இதனால், கடுமையான எதிர்விளைவுகள் ஏற்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
அதுமட்டுமின்றி கோடை காலத்தில், தலைச்சுற்றல், அதிக காய்ச்சல் அல்லது சோர்வு போன்ற வெப்பம் தொடர்பான நோய்களின் அறிகுறிகளுக்கு பாராசிட்டமால் அல்லது ஆஸ்பிரின் உட்கொள்வதைத் தவிர்க்குமாறு தமிழ்நாடு சுகாதாரத் துறை பொதுமக்களுக்கு ஒரு முக்கிய எச்சரிக்கையை விடுத்துள்ளது.
பாராசிட்டமால், நோய்த்தொற்றுகளால் (உள்) ஏற்படும் காய்ச்சலைக் குறைப்பதன் மூலம் செயல்படுகிறது, ஆனால் கடுமையான வெளிப்புறச் சுற்றுச்சூழல் வெப்பத்தால் ஏற்படும் உடல் வெப்பநிலையை அதனால் குறைக்க முடியாது.
வெப்பம் தொடர்பான நோய்களுக்கு பாராசிட்டமால் அல்லது ஆஸ்பிரின் உட்கொள்வது கல்லீரல் மற்றும் சிறுநீரக பாதிப்பு உட்பட கடுமையான பக்க விளைவுகளை ஏற்படுத்தக்கூடும், மேலும் சில சமயங்களில் உயிரிழப்பையும் ஏற்படுத்தலாம் சுகாதாரத் துறை எச்சரித்துள்ளது.
தமிழ்நாடு சுகாதாரத் துறையின் அறிவுரைகள் மற்றும் வெப்பத்தாக்கத்திற்கான முதலுதவி:
வெப்பத்தாக்கம் என்பது உடலின் குளிரூட்டும் அமைப்பின் செயலிழப்பாகும், இது வழக்கமான காய்ச்சல் அல்ல.
வெப்பத்தாக்கத்தின் அறிகுறிகளுடன் (தலைச்சுற்றல், குமட்டல், அதிக காய்ச்சல், குழப்ப நிலை) யாரையாவது நீங்கள் கண்டால், உடனடியாகப் பின்வரும் நடவடிக்கைகளை மேற்கொள்ளுங்கள்:
பாதிக்கப்பட்ட நபரை உடனடியாகக் குளிர்ச்சியான, நிழல் மிகுந்த அல்லது குளிரூட்டப்பட்ட இடத்திற்கு அழைத்துச் செல்லவும்.
ஈரமான துணி அல்லது பஞ்சைக் கொண்டு உடலைத் துடைக்கவும்; தலையின் மீது சாதாரண வெப்பநிலையில் உள்ள நீரை ஊற்றவும்.
பாதிக்கப்பட்ட நபர் சுயநினைவுடன் இருந்தால், அவருக்குத் தண்ணீர், மோர் அல்லது இளநீர் பருகச் செய்து உடல் வெப்ப நிலையை குறைக்கலாம்.
வெப்பத்தாக்கம் என்பது உயிருக்கே ஆபத்தை விளைவிக்கக்கூடிய ஒரு அவசர நிலை என்பதால், உடனடியாக அவசர மருத்துவச் சேவைகளை (108) அழைக்கவும்.
உடலில் நீரேற்றம் குறையாமல் இருக்க, போதுமான அளவு நீர்ச்சத்து மிகுந்த திரவங்களைப் பருகவும். லேசான நிறம் கொண்ட, தளர்வான பருத்தி ஆடைகளை அணியவும்.