

இன்றைய காலத்தில் சிறிய தலைவலி என்றால் கூட உடனே மாத்திரை எடுத்துக் கொள்பவர்கள் அதிகமாகவே இருக்கின்றனர். அதிலும் உடனே நினைவிற்கு வருவது பாராசிட்டமால் மாத்திரைகள் ஆகும். அடிக்கடி பாராசிட்டமால் மாத்திரையை எடுக்குறீங்களா? இனி அந்த தவறை செய்யாதீங்க. பாராசிட்டமால் அடிக்கடி எடுத்துக் கொள்வதால் ஏற்படும் ஆபத்தைக் குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
மருந்து கடைகளிலும் மருத்துவர் சீட்டு இல்லாமலேயே இந்த மாத்திரை கொடுக்கப்பட்டு வருகின்றது. இதனால் சாதாரண மக்கள் கூட உடல் மற்றும் தலைவலி ஏற்பட்டால் உடனே இதனை வாங்கி போட்டுவிடுகின்றனர். கொரோனாவிற்கு பின்பு இந்த பயன்பாடு மக்களிடையே அதிகமாகியுள்ளது. ஆனால் இந்த மாத்திரைகளை அதிகமாக எடுத்துக் கொண்டால், இரத்தத்தில் அதிக அமிலம் சேர்வது, சிறுநீரகப் பிரச்னைகள், தலைவலி, போதைப் பழக்கம் போன்ற பக்கவிளைவுகளை ஏற்படுத்துகின்றது.
வாரத்திற்கு இரண்டு முறைக்கு மேல் பாராசிட்டமாலை எந்த சூழ்நிலையிலும் எடுத்துக் கொள்ளக் கூடாது. பாராசிட்டமாலை அதிகமாகப் பயன்படுத்துவதால் இதயம் சம்பந்தமான பிரச்னைகளும் வர வாய்ப்புள்ளது.
வலி நிவாரணிகளை (மூட்டு வலி மாத்திரைகள்) தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் மாரடைப்பு வரும் வாய்ப்புகள் அதிகம் என்கிறார்கள் நாட்டிங்காம் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள். நீண்ட காலமாக பாராசிட்டமால் பயன்படுத்திய முதியவர்களுக்கு சிறுநீரகம், இதயம், வயிறு சம்பந்தமான பிரச்னைகள் வர வாய்ப்புகள் அதிகம்.
ஆகவே தலைவலி போன்ற பிரச்னைக்கு பெரும்பாலும் இயற்கை வழிகளையே பின்பற்ற வேண்டும். தலைவலிக்கு நீர்ச்சத்து குறைபாடும் ஒரு காரணம். மன அழுத்தத்தைத் தவிர்க்க யோகா, தியானம் போன்றவற்றைப் பழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும்.
பாராசிட்டமால் ஓவர்டோஸ் காரணமாக 4 குழந்தைகள் அண்மையில் பாதிக்கப்பட்டு அதில் ஒரு குழந்தை இறந்து போனது. மற்ற மூன்று குழந்தைகள் சிகிச்சைக்கு பிறகு மீண்டனர். இத்தகைய சூழல் குழந்தைகளுக்கு தடுப்பூசி போடுதலின் போது நிகழ்கிறது. காரணம் பொதுவாக தடுப்பூசி போடும் போது குழந்தைகளுக்கு காய்ச்சல் வரும். அதற்கு பாராசிட்டமால் சொட்டு மருந்து அல்லது சிரப் வழங்கி வருகின்றனர். அதை குறிப்பிட்ட இடைவெளியில் குறிப்பிட்ட அளவில் மட்டுமே கொடுக்க வேண்டும்.
பாராசிட்டமால் 120mg முதல் 500 mg வரை கிடைக்கிறது. மருத்துவர்கள் குழந்தைகளின் உடல் எடைக்கு தகுந்தவாறு ஒரு கிலோவுக்கு 10-15 mg என கணக்கிட்டு தரச் சொல்வார்கள். இதனை கையாளும் செவிலியர்கள் மற்றும் பெற்றோர்களின் கவனக்குறைவால் குழந்தைகளுக்கு ஓவர்டோஸ் தரப்படுகிறது. இந்த பாராசிட்டமால் ஓவர்டோஸ் காரணமாக குழந்தைகளுக்கு மூச்சு திணறல், மலத்தில் ரத்தம், கல்லீரல் பாதிப்பு சில நேரங்களில் மூளை பாதிப்பு ஏற்படும் என்கிறார்கள்.
குளிர்காலத் தொற்றுநோய்கள் அதிகரித்து வரும் நிலையில், அழற்சி எதிர்ப்பு மருந்துகளை (anti-inflammatoires) தவிர்த்து பாராசிட்டமால் (paracétamol) மருந்துக்கு முன்னுரிமை தரலாம். மேலும் காய்ச்சல் அல்லது குளிர்காலத் தொற்றுகளுடன் தொடர்புடைய வலி, தொண்டை அழற்சி (angine), மூச்சுக்குழாய் அழற்சி (bronchite), அல்லது காதுத் தொற்று (otite) போன்றவை ஏற்பட்டால், அழற்சி எதிர்ப்பு மருந்துகளை விட பாராசிட்டமாலை பயன்படுத்துவது சிறந்தது என்கிறார்கள்.
நாடு முழுவதும் பருவகால காய்ச்சல் (ஃப்ளூ) தொற்று வேகமாக பரவி வரும் சூழ்நிலையில் மக்கள் மருத்துவர்களின் பரிந்துரை இன்றி எந்தவொரு மருந்துகளையும் உட்கொள்ள வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது.
(முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த மருத்துவரை அணுகவும்)