தமிழகப் பாடத்திட்டத்தில் படிக்கும் மாணவர்களுக்கு மேல்நிலைப் பள்ளிகளில் 11 ஆம் வகுப்பிற்கான பாடங்களை நடத்தாமல், 12 ஆம் வகுப்பு பாடங்களை மட்டும் 2 ஆண்டு காலம் நடத்துவதால், கல்லூரித் தேர்வுகளில் மாணவர்கள் அவர்களின் மேற்படிப்பில் சிரமப்படுவதாக புகார்கள் வந்த வண்ணம் இருந்தன.
இந்நிலையில் தமிழ்நாடு மாநிலப் பாடத்திட்டத்தில் படிக்கும் அனைத்து மாணவர்களுக்கும் 2017 - 18ஆம் கல்வியாண்டு முதல் 11 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு அரசு பொதுத் தேர்வு அறிமுகப்படுத்தப்பட்டது. தற்போது11 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் 2025-2026ஆம் கல்வியாண்டு முதல் நீக்கப்படுவதாக பள்ளிக்கல்வித் துறை அறிவித்துள்ளது.
தமிழ்நாடு மாநிலப் பாடத்திட்டத்தில் படித்து வரும் அனைத்துப் பள்ளி மாணவர்களுக்கும் மேற்படிப்புக்கு நுழைவுத் தேர்வு இல்லாமல் இருந்தது. இந்நிலையில் 2017ம் ஆண்டு முதல், நீட் தேர்வு அறிமுகமானது. அந்த காலக்கட்டங்களில் 12 ஆம் வகுப்பு பாடங்களை மட்டுமே 2 ஆண்டுகள் மாணவர்கள் கற்பதால் உயர்கல்வி படிக்கச் செல்லும் மாணவர்களுக்கு, குறிப்பாக பொறியியல், மருத்துவம் படிக்கும் மாணவர்களின் தேர்ச்சி முதலாம் ஆண்டில் மிகக் குறைவாக இருந்தது. அதன் அடிப்படையில் கல்வியாளர்களின் அறிவுரையின்படி 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு கடந்த 2017-18ஆம் கல்வியாண்டு முதல் அமல்படுத்தப்பட்டது.
இதன்படியே ஒவ்வொரு ஆண்டும் கட்டாயமாக 11ஆம் வகுப்பில் பொதுத்தேர்வு முறை திரும்பவும் கொண்டு வரப்பட்டது. ஆனால் இந்த கல்வியாண்டில் இருந்து பொதுத்தேர்வு நீக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பள்ளிக்கல்வித் துறை அரசு முதன்மைச் செயலாளர் சந்திரமோகன் வெளியிட்டுள்ள அரசாணையில், 'கல்வித் துறையில் 5.11.1976 ஆம் ஆண்டில் வெளியிட்ட அரசாணையின்படி, தமிழ்நாடு முழுவதும் பள்ளிக் கல்வி மற்றும் உயர் கல்வியில் 10+2+3 என்ற முறையினை நடைமுறைப்படுத்தி ஆணை வெளியிடப்பட்டது. அதனைத்தொடர்ந்து மார்ச் 1980 இல் முதல்முறையாக மாநில அளவில் (மேல்நிலை இரண்டாம்) 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வினை நடத்திட உத்தரவிடப்பட்டது.
அதன் பின்னர் 2017-2018ஆம் கல்வியாண்டு, மார்ச் 2018 முதல் 11 ஆம் வகுப்பு (மேல்நிலை முதலாம்) ஆண்டிற்கு பொதுத் தேர்வினை நடத்திட உத்தரவிடப்பட்டது. இந்நிலையில் பள்ளிக்கல்வி இயக்குநர், மாணவர்களின் நலன் கருதியும், பொதுத்தேர்வு தொடர்பான எவ்வித பதற்றங்களும் இல்லாமலும், மேல்நிலை கல்வியை உறுதியுடன் கற்பதற்காகவும், தமிழ்நாடு மாநிலக் கல்விக் கொள்கை 2025னை செயல்படுத்தும் விதமாக, 2025-2026ஆம் கல்வியாண்டு முதல் (மேல்நிலை முதலாம் ஆண்டு ) 11ஆம் வகுப்பு அரசுப் பொதுத்தேர்வினை ரத்து செய்து கேட்டுள்ளார்.
அதன் அடிப்படையில், தமிழ்நாடு மாநிலக் கல்விக் கொள்கை 2025 செயல்படுத்தும் விதமாக, 2025-26 ஆம் கல்வியாண்டு முதல் (மேல்நிலை முதலாம் ஆண்டிற்கான) 11 ஆம் வகுப்பு அரசு பொதுத் தேர்வு ரத்து செய்யப்படுகிறது. 2025-26 ஆம் கல்வியாண்டு முதல் 11 ஆம் வகுப்பில் பயிலும் மாணவர்களுக்கு, 2017-2018ஆம் கல்வியாண்டிற்கு முன்னர் இருந்த மாணவர்களுக்கு நடைமுறையை பின்பற்றி தேர்வு நடத்திட வேண்டும்.
2025-26 ஆம் கல்வியாண்டில் இருந்து, 11 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு ஒருங்கிணைந்த மதிப்பெண் சான்றிதழ் வழங்கும் முறையை மாற்றி, 12 ஆம் வகுப்பு அரசுப் பொது தேர்வு எழுதிய பின்னர் 12 ஆம் வகுப்பு மதிப்பெண்களை மட்டும் உள்ளடக்கிய மதிப்பெண் சான்றிதழ் வழங்கும் முறையை நடைமுறைப்படுத்த அரசுத் தேர்வுகள் இயக்குநருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
மேலும் ஏற்கனவே 11 ஆம் வகுப்பு அரசுப் பொதுத் தேர்வில் தோல்வியுற்ற மாணவர்களுக்கு மட்டும் மேல்நிலை முதலாம் ஆண்டிற்கான அரசுப் பொதுத் தேர்வினை அடுத்த 5 ஆண்டுகளுக்குள், அதாவது மார்ச் 2030 வரையில் தொடர்ந்து எழுதுவதற்கு அரசுத் தேர்வுகள் இயக்குநருக்கு அனுமதி அளிக்கப்பட்டு அரசாணை தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் 12ஆம் வகுப்பில் படிக்கும் மாணவர்களின் கல்வித்தரம் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.