ரேஷன் அட்டைதாரர்களுக்கு குட் நியூஸ்..! 'பாக்கெட்' முறையில் பொருட்களை வழங்க அரசு திட்டம்!

ration shop
ration shop
Updated on

தமிழ்நாட்டில் தவெக ஆட்சி அமைந்ததிலிருந்து அதன் அமைச்சர்கள் அவரவர் துறையில் அதிரடி ஆய்வில் இறங்கி மக்களை கவர்ந்து வருகின்றனர். அந்த வகையில் உணவு பாதுகாப்பு துறை அமைச்சராக இருக்கும் வெங்கட்ராமன் நியாய விலை கடைகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டு வருகிறார். ரேஷன் கடைகளில் தரப்படும் பொருள்களில் எடை குறைப்பு இருந்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்ற எச்சரிக்கைகள் விடுத்துள்ளார். அதுமட்டுமின்றி நியாய விலை கடைகளில் ஏதேனும் முறைகேடுகள் நடந்தால் பொதுமக்கள் தயங்காமல் தன்னிடம் தெரிவிக்கலாம் என்ற நம்பிக்கையும் அளித்துள்ளார்.

அந்த வகையில் இனி ரேஷன் பொருள்களை பாக்கெட்டில் தரப்போவதாக தற்போது வந்துள்ள தகவல் மக்களை மகிழ்ச்சிப் படுத்தியுள்ளது.

பொதுவாகவே ரேஷன் கடைகளில் பல்வேறு முறைகேடுகள் நடப்பதாக கூறப்பட்டு வருகிறது. நீண்டகாலமாக நிலவி வரும் எடை குறைவு, கலப்படம் மற்றும் கடத்தல் போன்ற முறைகேடுகளுக்கு நிரந்தரத் தீர்வு காண புதிய அரசு இந்த அதிரடி திட்டத்தைக் கொண்டு வரவுள்ளதாக சொல்லப்படுகிறது.

‎தற்போது கிடங்குகளில் இருந்து திறந்த மூட்டைகளாகப் பொருட்கள் அனுப்பப்பட்டு, கடைகளில் கைகளால் அளந்து வழங்கப்படுவதால் பல்வேறு நடைமுறைச் சிக்கல்களும் புகார்களும் எழுந்து வருகின்றன. இதனை முழுமையாக மாற்றியமைக்கும் பொருட்டு, அரசு கிடங்குகளிலேயே அதிநவீன இயந்திரங்கள் மூலம் துல்லியமாக எடை போடப்பட்டு, முத்திரையிடப்பட்ட பாக்கெட்டுகளாகப் பொருட்களைத் தயாரிக்கத் தீவிர ஏற்பாடுகள் நடந்து வருவதாக கூறப்படுகிறது.

ஏழை, எளிய மக்களின் உணவுப் பாதுகாப்பை வலுப்படுத்தும் நோக்கில் கொண்டு வரப்படும் இத்திட்டத்தை உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை அமைச்சர் வெங்கட்ராமன் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தி உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்த முறை நடைமுறையில் வந்தால் பொருட்களின் தரம் மற்றும் பாதுகாப்பினை பெருமளவு உறுதிப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. திறந்த நிலையில் வைக்கப்படும் பொருட்கள் ஈரப்பதம், தூசு, பூச்சிகளால் பாதிக்கப்படுவதும், தரம் குறைந்த பொருட்கள் கலக்கப்படுவதும் பாக்கெட் முறையினால் முற்றிலும் தடுக்கப்பட்டு, சுகாதாரமான முறையில் உயர்தரப் பொருட்கள் மக்களுக்குச் சென்றடைவதோடு அரசு முத்திரை, பேட்ச் நம்பர் மற்றும் எடை விவரங்கள் அச்சிடப்பட்ட பாக்கெட்டுகள் விநியோகிக்கப்படுவதால், ரேஷன் பொருட்கள் கடத்தப்படுவதும் வெளிச் சந்தையில் விற்கப்படுவதும் உடனடியாகக் கண்டறியப்பட்டு தடுக்கப்படும் வாய்ப்பு உள்ளதாக மக்கள் கருதுகின்றனர்.

மேலும் இதனால் வரிசையில் நின்று காத்திருக்கும் மக்களின் நேர விரயம் குறையும். ஒவ்வொரு பொருளையும் தனித்தனியாக எடை போடுவதற்கான நேரம் மிச்சமாவதுடன், நீண்ட வரிசைகளும் தவிர்க்கப்பட்டு விநியோக நேரம் பாதியாகக் குறையும். முதலமைச்சரின் நேரடி அறிவுறுத்தலின்படி, அமைச்சர் வெங்கட்ராமன் துறை அதிகாரிகளுடன் இணைந்து மாநிலம் முழுவதுமுள்ள நியாய விலைக்கடைகளின் உள்கட்டமைப்பை ஆய்வு செய்து வருகிறார்.

முதற்கட்டமாகச் சில மாவட்டங்களில் சோதனை.திட்டமாகத் தொடங்கப்பட்டு, பின்னர் முழுமையாக டிஜிட்டல் மயமாக்கப்பட்டு மாநிலம் முழுவதும் விரிவுபடுத்தப்படவுள்ள இப்புதிய சீர்திருத்தம் பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

இந்த திட்டம் செயலுக்கு வந்தால் 500 கிராம் முதல் 1 கிலோ வரை எடை குறைவாக வழங்கப்படுவதாகக் கூறப்படும் புகார்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படுவதுடன், நுகர்வோரின் முழுமையான உரிமையும் நிலைநாட்டப்படும் என்கின்றனர்.

இதையும் படியுங்கள்:
இல்லத்தரசிகள் ஷாக்..! ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு டிமாண்ட்..!!
ration shop
logo
Kalki Online
kalkionline.com