

தமிழ்நாடு அரசின் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் வங்கிக் கணக்கிலிருந்து ₹22.30 கோடி பணத்தை ஆன்லைன் மூலம் மோசடி செய்த வழக்கில், சென்னை மத்திய குற்றப் பிரிவு (CCB) சைபர் கிரைம் போலீசார் 7 பேரை அதிரடியாகக் கைது செய்துள்ளனர். தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் குறித்து சென்னை சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்தியா மற்றும் தமிழ்நாட்டில் சைபர் மோசடிகள் முன்னெப்போதும் இல்லாத அளவிற்குத் தீவிரமடைந்துள்ளன. சமீபத்திய தரவுகளின்படி, 2021 முதல் 2026-ஆம் ஆண்டின் நடுப்பகுதி வரை நாடு முழுவதும் ரூ.55,050 கோடிக்கும் அதிகமான நிதி இழப்புகள் பதிவாகியுள்ளன.
தமிழ்நாட்டில் 2025-ஆம் ஆண்டில் மட்டும் 1.09 லட்சத்திற்கும் அதிகமான சைபர் புகார்கள் பதிவாகி, பொதுமக்கள் சுமார் ரூ.1,100 கோடி வரை இழந்துள்ளனர்.
சமீபத்தில் தமிழக ஊரக வளர்ச்சித் துறையின் அரசு வங்கிக் கணக்கிலிருந்தே ரூ.22.30 கோடி மோசடி செய்யப்பட்ட சம்பவம் அரசுத் துறைகளையும் சைபர் குற்றவாளிகள் குறிவைப்பதைக் காட்டுகிறது.
2026-ஆம் ஆண்டில் மட்டும் 'டிஜிட்டல் கைது' என்ற பெயரில் காவல்துறை அல்லது சிபிஐ அதிகாரிகள் போல நடித்து இந்தியர்களிடம் இருந்து ரூ.800 கோடிக்கும் மேல் சுருட்டப்பட்டுள்ளது. இது தொடர்பாக வாட்ஸ்அப் (WhatsApp) உள்ளிட்ட தளங்கள் உரிய நடவடிக்கை எடுக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
போலி பங்குச்சந்தை முதலீட்டுச் செயலிகள், பகுதிநேர வேலை வாய்ப்புகள், ஆபத்தான APK கோப்புகள் மற்றும் செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் குரல்/முகத்தை மாற்றி ஏமாற்றுவது ஆகியவை வேகமாக அதிகரித்துள்ளன.
மோசடிகளிலிருந்து தற்காத்துக் கொள்ளும் வழிகள் :
இதுபோன்ற வங்கி பணப்பரிவர்த்தனை மற்றும் ஆன்லைன் பேங்கிங் மோசடியில் இருந்து தப்பிப்பதற்கான பின்வழிமுறைகளை பைசர் கிரைம் போலீசார் தெரிவித்துள்ளனர்.
* வங்கி அதிகாரிகளோ, காவல்துறையினரோ தொலைபேசி அல்லது வீடியோ அழைப்பு மூலம் உங்களை "டிஜிட்டல் கைது" செய்யவோ, உங்கள் OTP மற்றும் வங்கி விவரங்களைக் கேட்கவோ மாட்டார்கள்.
* வங்கி கணக்கு எண், ஏடிஎம் (ATM) ரகசிய எண், ஓடிபி (OTP) , சிசிவி எண், யுபிஐ ரகசிய எண் (UPI PIN) போன்ற விவரங்களை யாரிடமும் பகிரக்கூடாது.
* வங்கி அதிகாரிகள் எனக்கூறி செல்போனில் தொடர்பு கொள்பவர்களிடம் தனிப்பட்ட வங்கி விவரங்களை தெரிவிக்க வேண்டாம்.
* உங்கள் வங்கிக்கணக்கு எண்ணை பிறருக்கு கொடுக்கக்கூடாது.
* பொய்யான பரிசு, சலுகை, லாட்டரி வென்றதாக கூறும் செய்திகளை நம்ப வேண்டாம்.
* வங்கி கணக்கில் நடைபெறும் பணப்பரிவத்தனைகளை அவ்வப்போது சரிபார்க்க வேண்டும்.
* வாட்ஸ்அப் அல்லது எஸ்எம்எஸ் மூலம் வரும் அறிமுகமில்லாத நபர்களிடமிருந்து வரும் லிங்க்களை (Links) கிளிக் செய்வதோ அல்லது ஆப் (Apps) மற்றும் ஏபிகே (APK) கோப்புகளை பதிவிறக்கம் செய்வதோ தவிர்க்கப்பட வேண்டும்.
* கூகுள் அல்லது சமூக வலைத்தளங்களில் வரும் போலியான வங்கி வாடிக்கையாளர் சேவை எண்களை நம்ப வேண்டாம்.
* AnyDesk, Team Viewer போன்ற Remote Access செயலிகளை அறிமுகம் இல்லாத நபர்களின் அறிவுறுத்தலின்படி பதிவிறக்கம் செய்யக்கூடாது.
* பணத்தை பெறுவதற்கு யுபிஐ ரகசிய எண் பதிவிட அவசியம் இல்லை என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.
* ஒடிபி எண் மற்றும் யுபிஐ ரகசிய எண்ணை யாரிடமும் பகிரக்கூடாது.
* தெரியாத நபர்களுக்கு பணம் அனுப்பக்கூடாது.
* போலியான KYC Update செய்திகளை நம்பக்கூடாது.
* தெரியாத QR Code-களை ஸ்கேன் செய்யக்கூடாது.
* அதிக லாபம் தருவதாக கூறும் ஆன்லைன் முதலீட்டு விளம்பரங்களை நம்பக்கூடாது.
* கமிஷனுக்கு ஆசைப்பட்டு முன்பின் தெரியாதவர்களின் பணத்தைத் தங்கள் வங்கிக் கணக்கில் பெற்றுக் கொடுப்பதும், வங்கிக் கணக்கு, ஏடிஎம் கார்டு, சிம் கார்டு ஆகியவற்றை மற்றவர்களுக்குக் கொடுப்பதும் சைபர் மோசடியில் நேரடியாகப் பங்கேற்பதற்குச் சமமான குற்றமாகும். அப்படிச் செயல்படுபவர்கள் மீது கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
- அதையும் மீறி எதிர்பாராதவிதமாக உங்கள் வங்கிக் கணக்கிலிருந்து பணம் திருடப்பட்டால், முதல் 1 மணி நேரத்திற்குள் (Golden Hour) தேசிய சைபர் குற்ற உதவி எண் 1930 என்ற எண்ணைத் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்க வேண்டும்.
2026 ஜூன் வரை இந்த அமைப்பின் மூலம் ரூ.11,158 கோடிக்கும் அதிகமான பணம் மோசடியாளர்களிடம் செல்லாமல் மீட்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் cybercrime.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திலும் உங்கள் புகாரைப் பதிவு செய்யலாம்.
சம்பந்தப்பட்ட வங்கியை தொடர்பு கொண்டு கணக்கு மற்றும் பரிவர்த்தனைகளை முடக்க நடவடிக்கை எடுக்கலாம்.
அதேசமயம், சைபர் மோசடி புகாரால் உங்கள் வங்கிக் கணக்கு முடக்கப்பட்டால், சம்பந்தப்பட்ட வங்கிக் கிளையை நேரில் அணுகி அல்லது ஜிஆர்எம் (GRM - Grievance Redressal Mechanism) மூலம் மறுஆய்வு கோரி கணக்கை மீட்டெடுக்கலாம்.
சிறிய கவனக்குறைவும் பெரிய பண இழப்பை ஏற்படுத்தும் என்பதை விழிப்புடன் இருந்து சைபர் குற்றங்களை தடுக்கலாம்.