

பலருக்கும் அரசு வேலை பார்க்க வேண்டும் என்ற கனவு, லட்சியம் இருக்கும்.அந்த வகையில் தமிழகத்தில் நடத்தப்படும் குரூப்-1, 2, 2ஏ, 4, 5 தேர்வுக்கு பலரும் ஆர்வத்துடன் விண்ணப்பித்து தேர்வு எழுதி வருகின்றனர். தமிழகத்தில் அரசு துறைகளில் வேலை வாய்ப்புக்காக காத்திருக்கும் பல லட்சம் தேர்வர்கள் ஆர்வத்துடன் எதிர்பார்த்து காத்திருந்த டிஎன்பிஎஸ்சி 2026-ம் ஆண்டுக்கான தேர்வு அட்டவணையை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது.
2026-ம் ஆண்டில் மே மாதம் தொடங்கி அக்டோபர் மாதம் வரை அறிவிப்புகள் வெளியிடப்படும்.ஆகஸ்ட் தொடங்கி டிசம்பர் வரை தேர்வுகள் நடைபெறவுள்ளது.2026-ம் ஆண்டுக்கான டின்பிஎஸ்சி ஆண்டு அட்டவணையை விரிவாக பார்க்கலாம்.
தமிழ்நாடு அரசுத்துறைகளில் காலியாக இருக்கும் காலிப் பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டு, தேர்வு நடத்தி அதன் மூலம் தகுதியானவர்களை தேர்வு செய்யும் பணியை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்(டிஎன்பிஎஸ்சி) செய்து வருகிறது. அதன்படி, குரூப்-1, 2, 2ஏ, 4, 5 என பல்வேறு பதவிகளுக்கான காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருகின்றன.
இந்த வகையில் 2026-ம் ஆண்டுக்கான அட்டவணை டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
* அதில் ஒருங்கிணைந்த தொழில்நுட்ப சேவைகள் பணிகளுக்கான தேர்வு குறித்தஅறிவிப்பு 2026-ம் ஆண்டு மே மாதம் 20-ந்தேதி அறிவிப்பு வெளியிடப்படும் என்றும், ஆகஸ்டு 3-ந்தேதி தேர்வு நடத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
* அதேபோல் குரூப்-1 பணியிடங்களுக்கான அறிவிப்பு அடுத்த ஆண்டு(2026) ஜூன் மாதம் 23-ந்தேதி வெளியிடப்படும். அதற்கான தேர்வு செப்டம்பர் 6-ந்தேதியும் நடத்தப்படும்.
* குரூப்-2, 2ஏ பணியிடங்களுக்கான அறிவிப்பு ஆகஸ்டு 11-ந்தேதி வெளியிடப்பட்டு, அக்டோபர் 25-ந்தேதி தேர்வு நடத்தப்படும்.
* அதிக தேர்வர்கள் எழுதும் தேர்வான குரூப் 4 தேர்வு, 2026-ம் ஆண்டு அக்டோபர் 6-ம் தேதி வெளியாகும். இதற்கு தேர்வு ஒரே கட்டமாக டிசம்பர் 20-ம் தேதி நடத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
* இத்தேர்வுகள் மூலம் எத்தனை காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும் என்பது அறிவிப்பு வெளியாகும்போது தெரியவரும். காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை அறிவிப்பு வெளியிடும் போது தெரிவிக்கப்படும் என கூறப்பட்டிருக்கிறது.
TNPSC தேர்வு அட்டவணையின் முழுப் பட்டியலை அறிய அதிகாரப்பூர்வ வலைத்தளமான www.tnpsc.gov.in பக்கத்தை அணுகி பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். 2026-ம் ஆண்டு தேர்வுகளுக்கான இந்த முன்னோட்டம், தேர்வர்கள் தங்கள் இலக்கை நோக்கி முன்னேற உதவும்.
2024-ம் ஆண்டு முதல் டிஎன்பிஎஸ்சி ஆண்டு அட்டவணையை வெளியிடப்பட்டு வருகிறது. அதன்படி, தொடர்ச்சியாக மூன்றாவது முறையாக அட்டவணை வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.