

ஒரு வாகனம் சாலையில் பாதுகாப்பாகவும் சட்டப்படி தகுதியுடனும் இயங்குகிறதா என்பதை உறுதி செய்யும் அதி முக்கியமான பணி தான் மோட்டார் வாகன ஆய்வாளரின் முக்கியப் பொறுப்பு. குறிப்பாக தகுதியற்ற வாகனங்களால் விபத்துகள் நேராவண்ணம் நம் உயிர்களை பாதுகாக்கும் மிகப்பெரிய பணியில் இருப்பவர்கள் இவர்களே.
இந்த பொறுப்பு மிக்க மோட்டார் வாகன ஆய்வாளர் நேர்முகத் தேர்வுக்கு தேர்வானவர்களுக்கு அழைப்பு விடுத்த டி.என்.பி.எஸ்.சி
நீதிமன்ற உத்தரவுகளின்படி, மூலச்சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் நேர்முகத் தேர்வுக்கு 228 தேர்வர்கள் அடங்கிய பட்டியல் இணையதளத்தில் (www.tnpsc.gov.in) வெளியிடப்பட்டுள்ளதாகவும் இதற்கான நேர்முகத் தேர்வு அடுத்த மாதம் செப்டம்பர் 1 ந்தேதி முதல் 3ந்தேதி வரை நடைபெறும் எனவும் அறிவித்துள்ளது.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) நடத்திய மோட்டார் வாகன ஆய்வாளர் (Motor Vehicle Inspector Grade-II) பணிக்கான நேர்முகத் தேர்வில் பங்கேற்க தகுதி வாய்ந்தவர்களின் பட்டியல் சுமார் 8 ஆண்டுகளுக்குப் பிறகு அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
கடந்த 2018-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் மோட்டார் வாகன ஆய்வாளர் பதவிக்காக காலியாக உள்ள 110 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை டி.என்.பி.எஸ்.சி வெளியிட்டு அதன் கீழ் இத்தேர்வுக்கு விண்ணப்பித்த 2,176 பேரில் 785 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டு, தகுதியானவர்களுக்கு 2018 ம் ஆண்டு ஜூன் 10 அன்று எழுத்துத் தேர்வு நடத்தப்பட்டது.
ஆனால் 1:2 என்ற விகிதத்தில் சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்பட வேண்டும் என்ற விதிகளைத் தவிர்த்தும், சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்காமலும் வெறும் 33 பேர் மட்டுமே நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது அனைவருக்கும் அதிர்ச்சியைத் தந்தது.
இதனை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்திலும், பின்னர் உச்ச நீதிமன்றத்திலும் தொடரப்பட்ட வழக்குகள் மீதான நியமன நடைமுறைகள் காரணமாக சுமார் 8 ஆண்டுகள் தடை நீடித்தது குறிப்பிடத்தக்கது.
இந்த வழக்கு தொடர்பாக நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகளைத் தொடர்ந்து, தேர்வானவர்கள் முடிவுகளை TNPSC தற்போது வெளியிட்டுள்ளதாக தெரிகிறது. இது தொடர்பாகத் தேர்வாணையக் கட்டுப்பாட்டு அலுவலர் ஸ்ரீவெங்கட பிரியா வெளியிட்டுள்ள அறிவிப்பில், எழுத்துத் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் மற்றும் இதர விதிகளின் அடிப்படையில், மூலச்சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் நேர்முகத் தேர்வுக்கான 228 தேர்வர்கள் அடங்கிய பட்டியல் தேர்வாணைய இணையதளத்தில் (www.tnpsc.gov.in) வெளியிடப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
மோட்டார் வாகன ஆய்வாளர் (Motor Vehicle Inspector - MVI) பணி ஏன் முக்கியமானது?
சாலைப் பாதுகாப்பு, வாகனப் பதிவு உள்ளிட்ட போக்குவரத்து விதிகளைச் செயல்படுத்துவதில் மிக முக்கியமான அரசுப் பணியாகும். மேலும் தொழில்நுட்பம் மற்றும் அதிகாரம் கொண்ட பொறுப்புமிக்க பதவியாகவும் உள்ளது.
வாகன விபத்துகளைத் தடுக்கும் வகையில் புதிய மற்றும் பழைய வாகனங்களின் தரம், புகை மாசு அளவு மற்றும் இயந்திரப் பாதுகாப்பு ஆகியவற்றைச் சோதித்து சான்றிதழ் வழங்குதல் இவர்களது பணியே. மேலும் ஓட்டுநர் பயிற்சி பெறுபவர்களுக்கும், உரிமம் கோருபவர்களுக்கும் ஓட்டுநர் தேர்வு நடத்தி தகுதியை உறுதி செய்தல் மற்றும் சாலை விபத்துகளைத் தவிர்க்கும் வகையில் தகுதியற்ற மற்றும் விதிகளை மீறும் வாகனங்கள் மீது நடவடிக்கை எடுத்தல் போன்றவைகளும் இவர்களது பொறுப்பு.
வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் (RTO) முக்கிய தொழில்நுட்ப அதிகாரியாகச் செயல்பட்டு அரசாங்க விதிமுறைகளைக் கண்காணிப்பதும் இதில் சிறப்பு. இப்பதவியில் அனுபவம் பெற்ற பின், உயர் பதவிகளான வட்டாரப் போக்குவரத்து அலுவலர் (RTO) போன்ற நிலைகளுக்குப் பதவி உயர்வு பெறலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
தேவையான தகுதிகள் :
மெக்கானிக்கல் இன்ஜினியரிங் அல்லது ஆட்டோமொபைல் இன்ஜினியரிங் பட்டப் படிப்பு அல்லது மோட்டார் வாகனப் பராமரிப்பில் பட்டயப் படிப்புடன் (Diploma in Automobile/Mechanical Engineering).கட்டாயம் ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும் .குறிப்பாக கனரக வாகனம் (ஹெவி வெகிக்கிள்) ஓட்டுநர் உரிமம் தேவைப்படலாம். குறிப்பிட்ட வருட பணி அனுபவம் (Experience) சில அறிவிக்கைகளில் கேட்கப்படலாம்.
தேர்வு முறைகள் :
எழுத்துத் தேர்வில் தமிழ் தகுதித் தேர்வு, பொது அறிவு மற்றும் இன்ஜினியரிங் பாடம் சார்ந்த கொள்குறி வினாக்கள் (Objective type) இடம்பெறும்.எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள்.மருத்துவச் சோதனை (Medical Test): உடல் தகுதி மற்றும் கண்பார்வைச் சோதனை நடத்தப்படும்.
சம்பளம் :
இது தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) மூலம் நிரப்பப்படும் லெவல்-19 அல்லது அதற்கு இணையான நிலை (Pay Scale) ஆகும்.தோராயமாக ஆரம்பச் சம்பளம் அடிப்படை ஊதியம் மற்றும் படிகளுடன் சேர்த்து ₹37,200 முதல் ₹1,19,200 வரை (Level 20 / Pay Matrix அடிப்படையில் மாறுபடலாம்) இருக்கும் என குறிப்புகள் கூறுகிறது.
போக்குவரத்துத் துறையில் வாகனங்களின் பாதுகாப்பு, தகுதி மற்றும் ஓட்டுநர் உரிமம் தொடர்பான பணிகளை மேற்கொள்ளும் முக்கியமான அரசு பதவியாக மோட்டார் வாகன ஆய்வாளர் பணி இருப்பதாலேயே இதற்கான போட்டிகளும் அதிகமிருக்கும் எனப்படுகிறது. மேலும் 8 ஆண்டுகளுக்கு பின் தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தேர்வு சற்று கடினமாகவே இருக்கலாம் எனவும் கருதப்படுகிறது.