
உடல் உறுப்பு தானம் என்பது, ஒருவர் இறந்த பின் அல்லது உயிருடன் இருக்கும்போது, தங்கள் உடல் உறுப்புகளை தானம் செய்வதன் மூலம், மற்றவர்களின் உயிரைக் காப்பாற்ற அல்லது அவர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த உதவும் ஒரு செயல் ஆகும். உடல் உறுப்பு தானம் செய்வதில் தமிழகம் முதன்மை மாநிலமாக திகழ்கிறது. ஒரு நபர் உயிருடன் இருக்கும்போது அல்லது இறந்த பிறகு, தங்கள் உடல் உறுப்புகளை (சிறுநீரகம், கல்லீரல், இதயம், நுரையீரல், கணையம், குடல்) மற்றவர்களுக்கு தானம் செய்வதாகும். இந்த உறுப்புகள் மாற்று அறுவை சிகிச்சை மூலம், உறுப்பு செயலிழப்பு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பொருத்தப்பட்டு, அவர்களின் உயிரைக் காப்பாற்றவோ அல்லது அவர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தவோ உதவுகிறது.
ஒரு நபர் இறந்த பிறகு, அவர்களின் உடல் உறுப்புகளை தானம் செய்வது. இதில், மூளைச்சாவு அடைந்தவர்களின் உறுப்புகள் தானம் செய்யப்படுகின்றன.
இறந்த பிறகு உடல் உறுப்புகளை தானம் செய்ய, உறுப்பு தானம் செய்பவர் தன்னுடைய விருப்பத்தை முன்கூட்டியே பதிவு செய்து கொள்ளலாம் அல்லது அவர்களின் குடும்பத்தினர் இறந்த பிறகு அவர்களின் விருப்பத்தை தெரிவிக்கலாம்.
உறுப்புதானம் வழங்குவதில் இந்தியாவிற்கே தமிழ்நாடு ஒரு வழிகாட்டியாக இருக்கிறது என்றால் அதற்கு மிகமுக்கிய காரணம் 2008-ம் ஆண்டு கருணாநிதி கொண்டு வந்த உறுப்புமாற்று சிகிச்சைகளாகும்.
அதனை தொடர்ந்து தமிழக அரசு 2023-ம் ஆண்டு மூளைச்சாவு அடைந்து உறுப்பு தானம் வழங்குபவரின் உடலுக்கு அரசு மரியாதை வழங்கப்படும் என்ற அறிவிப்பை வெளியிட்டது. இந்த அறிவிப்பிற்கு பிறகு 479 பேர் உடல் உறுப்பு தானம் செய்தனர். அவர்களுக்கு அரசு சார்பாக மரியாதை செலுத்தப்பட்டது.
இந்நிலையில் 2024-ம் ஆண்டு மட்டும் 268 பேர் உடலுறுப்பு தானம் செய்து இந்தியாவில் மட்டுமல்ல உலகளவில் தமிழ்நாடு ஆயிரக்கணக்கான உயிர்களை காப்பதில் முதன்மையான மாநிலமாக திகழ்கிறது. உடல் உறுப்பு தானத்தில் தமிழ்நாடு முதல் மாநிலமாக மத்திய அரசு அறிவித்து தேசிய விருதும் வழங்கப்பட்டிருக்கிறது.
தேசிய உடல் உறுப்பு தான தினம் இன்று கடைபிடிக்கப்படும் நிலையில் இந்த தகவலை தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதத்துடன் வெளிப்படுத்தி உள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட சமூக வலைத்தளப்பதிவில் கூறியிருப்பதாவது:-
உயிர் பிரிந்த பின் தமது உடல்பாகங்கள் தீக்கும் மண்ணுக்கும் இரையாகாமல், பிறரது வாழ்க்கைக்கு உதவுவதே பெருவாழ்வு. அதனால்தான், நான் எனது உடலுறுப்புகளை தானம் அளித்துள்ளேன். நான் உடல் உறுப்புகளைக் கொடையளிப்போருக்கு அரசு மரியாதையுடன் விடை கொடுக்கப்படும் என்று அறிவிப்பு வெளியிட்ட பின் இதுவரையில் 479 பேர் (2024-ம் ஆண்டும் மட்டும் 268 பேர்) தங்களது உடலுறுப்புகளை தானம் செய்து, பல நூறு உயிர்களை வாழ வைத்திருக்கிறார்கள். அவர்களுக்கு எனது வணக்கம்! என்று அவர் பதிவிட்டுள்ளார்.