சிறை கைதிகளுக்கு டார்ச்சர்? களம் இறங்கியது சிபிசிஐடி!

Vellore Central Prison
Vellore Central Prison
Published on

தமிழகத்தில் சென்னை, வேலூர், சேலம், கோவை, மதுரை, கடலூர், திருச்சி ஆகிய ஊர்களில் மத்திய சிறைகள் இயங்கி வருகின்றன. இங்கு விசாரணை கைதிகள், தண்டனை கைதிகள் உட்பட சிறைச்சாலைகளின் பரப்பளவுக்கு ஏற்ப 1000 முதல் 2000 பேர் வரை அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களின் பாதுகாப்புக்கு சிறைத்துறை போலீசார், வார்டன்கள், சிறை எஸ்பி, டி ஐ ஜி என பலர் உள்ளனர். இந்நிலையில் சிறைக்குள் இருக்கும் கைதிகளை, அதிகாரிகள் தங்கள் வீட்டு வேலைகளுக்கு பயன் படுத்துவது வாடிக்கையான ஒன்றாகும். ஆனால் அது சட்டத்திற்கு புறம்பானது. ஆனாலும் சிறைத்துறை அதிகாரிகள் 'ஆப் தி ரெக்கார்டாக' சிறை கைதிகளை தங்களின் சொந்த உபயோகத்திற்காக பயன்படுத்தி வருகின்றனர் என்பது பலருக்கும் தெரிந்த ஒன்றுதான்.

இந்நிலையில், வேலூர் மத்திய சிறையில் உள்ள அதிகாரிகள் சிலர், ஆயுள் தண்டனை கைதிகளை வீட்டு வேலைக்கு உபயோகப்படுத்தியதும், மேலும் அவரிடம் கடுமையாக நடந்து கொண்டதும் அவரின் குடும்பத்தார் மூலமாக வெளி உலகத்திற்கு தெரிய வந்தது. இதை அடுத்து சென்னை சிபிசிஐடி போலீசார் இது குறித்து வழக்கு பதிவு செய்தனர். இதில் வேலூர் மத்திய சிறையில் 14 உயர் அதிகாரிகள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

அவர்கள் நடத்திய விசாரணையில், பெரும்பாலான சிறைகளில் இது போன்ற தவறுகள் நடப்பது தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து சேலம் மத்திய சிறையில் சிபிசிஐடி போலீசார் அங்குள்ள கைதிகளிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையில் அங்குள்ள சிறை அதிகாரிகளின் வீடுகளுக்கு யார்? யார்? பணி செய்ய சென்றது, அப்படி செல்லும்போது அவர்களுக்கு அங்கு வழங்கப்படும் பணி, சாப்பாடு, ஓய்வு குறித்து தீவிரமாக கேட்டு தெரிந்து கொண்டதாக கூறப்படுகிறது. மேலும் சிறைத்துறை அதிகாரிகள் கைதிகளிடம் எப்படி நடந்து கொள்கின்றனர்? கைதிகளின் நலனில் அவர்களுக்கு எவ்வளவு ஈடுபாடு உள்ளது? என்பது போன்ற கேள்விகளையும் கைதிகளிடம் கேட்டு விசாரிப்பதாக கூறப்படுகிறது.

இதையும் படியுங்கள்:
இந்தியாவின் பிரம்மாண்ட ரோபோடிக்ஸ் மையம் சென்னையில் தொடக்கம்!
Vellore Central Prison

இப்படியாக தமிழகம் முழுவதும் உள்ள மத்திய சிறைகளில் அடைபட்டுள்ள கைதிகளிடம் சிறை போலீசார் குறித்து சிபிசிஐடி தன்னுடைய விசாரணையை தொடங்கியுள்ளது. இதில் குறிப்பிட்டு சொல்ல வேண்டியது, சிறையில் விசாரணை நடக்கும் போது உடன் சிறை போலீசார், சிறைத்துறை உயர் அதிகாரிகள் யாரும் இல்லாத வகையில் பார்த்துக் கொள்ள வேண்டும். இல்லை எனில் சிறை போலீசார் முன்னிலையில் விசாரணை நடத்தப்பட்டால், சோதனை முடித்துக்கொண்டு சிபிசிஐடி போலீசார் சென்று விடுவார்கள். ஆனால் அதன் பின்னர் சிறைக்குள் இருப்பது அந்த கைதிகளும், சிறைத்துறை உயர் அதிகாரிகளும், அதிகாரிகளும், போலீசாரும் மட்டுமே. அதனால் அவர்களின் எதிர்காலத்தில் வெளியே சொல்ல முடியாத பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். இதை கருத்தில் கொண்டு சிறை போலீசார் யாரும் உடன் இல்லாத வகையில் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்திட வேண்டும் என பாதிக்கப்பட்ட கைதிகளின் குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.                   

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com