jelly fish
jelly fish

ஜெல்லி மீன்களால் ஒவ்வாமையில் சிக்கிய சுற்றுலா பயணிகள்!

Published on

அரியமான் கடற்கரையில் ஜெல்லி மீன்கள் கடித்து 30 க்கும் மேற்பட்டவர்களை ஒவ்வாமை தாக்கியுள்ளது.

சுற்றுலா தலங்களில் மிகவும் முக்கியமான பகுதி, ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அரியமான் கடற்கரை. இங்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருவது வழக்கமான ஒன்று. ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் இருந்து சுமார் 27 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள இந்த கடற்கரை 150 மீட்டர் அகலமும் 2 கி.மீ. நீளமும் கொண்டதாகும்.

பொதுவாக ராமேஸ்வரம் செல்லும் பயணிகள் இந்த அரியமான் கடற்கரைக்கும் செல்வதாக கூறப்படுகிறது. அரியமான் கடற்கரையில் அதிகமான குளுமை இருப்பதாலும், கடற்கரையில் சிறிய அலைகள் மட்டுமே வருவதாலும் மக்கள் இந்த கடற்கரைக்கு விரும்பி செல்வார்கள். எனவே தினந்தோறும் இந்த கடற்கரையில் பயணிகள் கூட்டம் நிறைந்திருப்பதாக தெரிகிறது.

அரியமான் கடற்கரையில் பொதுவாக கோடை காலங்களில் தான் ஜெல்லி மீன்கள் அதிகமாக கரை ஒதுங்கும். இந்த முறை வழக்கத்திற்கு மாறாக கோடை காலம் முடிந்தும் ஜெல்லி மீன்கள் கரை ஒதுங்குகின்றன. அந்த வகையில், சுற்றுலா பயணிகள் கடலில் குளித்துக் கொண்டிருக்கும் போது திடீரென்று ஜெல்லி மீன்கள் கூட்டம் கூட்டமாக கரையை நோக்கி வந்ததாகக் கூறப்படுகிறது.

இதையும் படியுங்கள்:
இன்று விசாரணைக்கு வரும் சொத்து குவிப்பு வழக்கு: தப்பிப்பாரா அமைச்சர் பொன்முடி?
jelly fish

ஜெல்லி மீன்களின் தோற்றம் கண்ணாடி போல் காட்சியளிக்கும் என்பதால் கடல் நீரில் ஜெல்லி மீன்கள் வருவதை கண்டறிவது கடினம். ஆனால் இந்த ஜெல்லி மீன்கள் தானாகவே சென்று மனிதர்களை தாக்காது. அதை தொந்தரவு செய்யும் போது கடித்து விடும். மேலும் இதை மனிதர்கள் தொட்டால் கைகள் சிவந்து ஒரு விதமான எரிச்சல் ஏற்படுவதாக கூறுகின்றனர். ஜெல்லி மீன்களில் பல வகைகள் உண்டு. பொதுவாக இந்த ஜெல்லி மீன்கள் ஆஸ்திரேலியா, பிலிப்பைன்ஸ், இந்திய பெருங்கடல், பசுபிக் பெருங்கடல் போன்ற பகுதிகளில் அதிகமாக காணப்படும். இதனால் உயிரிழப்புகள் ஏதும் நேராது. ஆனால் சிறிய சிறிய பிரச்சனைகள் உண்டாகும்.

அந்த வகையில், அரியமான் கடற்கரையில் பயணிகள் குளித்துக் கொண்டிருந்த போது ஜெல்லி மீன்கள் கரை ஒதுங்கியுள்ளன. அந்த நேரம் குளித்துக் கொண்டிருப்பவர்களில் 30-க்கும் மேற்பட்டவர்களை ஜெல்லி மீன்கள் கடித்து அவர்களுக்கு ஒவ்வாமை ஏற்பட்டு சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.  

logo
Kalki Online
kalkionline.com