பொங்கல் பண்டிகைக்கு தங்கள் சொந்த ஊருக்கு செல்பவர்களுக்காக எப்போதும் சில மாதங்கள் முன்னரே ரயில் டிக்கெட் முன்பதிவு வசதி செய்யப்படும். அந்தவகையில் தற்போது ரயில் டிக்கெட் முன்பதிவிற்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
தீபாவளி, பொங்கல், கிறிஸ்துமஸ், ரம்ஜான் போன்ற பண்டிகைகளுக்கு மக்கள் சென்னையிலிருந்து சொந்த ஊருக்கு திரும்புவார்கள். ஏராளமானோர் பயணம் மேற்கொள்வதால், பேருந்து, ரயில் ஆகியவை நிரம்பி வழியும். ஆகையால், முன்பதிவு செய்யும் நாளை பல நாட்களுக்கு முன்பே அறிவித்துவிடுவார்கள்.
அந்தவகையில் தீபாவளிக்கான டிக்கெட் முன்பதிவு வசதி ஜூன் மாதமே முடிந்தது. முன்பதிவு தொடங்கப்பட்ட சில நிமிடங்களிலேயே டிக்கெட்டுகள் காலியாகின.
அந்தவகையில் தற்போது பொங்கல் பண்டிகைக்கு சொந்த ஊருக்கு செல்பவர்களின் முன்பதிவு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. எப்போதும் 120 நாட்களுக்கு முன்னரே முன்பதிவு செய்யும் வசதி நடைமுறைப்படுத்தப்படும். இதன்படி பொங்கலுக்கான டிக்கெட் முன்பதிவு நாளை தொடங்குகிறது. அதாவது 2025ம் ஆண்டு பொங்கல் பண்டிகை 14ம் தேதி (செவ்வாய்க்கிழமை) வருகிறது.15ம் தேதி மாட்டுப் பொங்கல், 16ம் தேதி காணும் பொங்கல் கொண்டாடப்படுகிறது. பொங்கலுக்கு முந்தைய நாளான போகி பண்டிகை திங்கட்கிழமை வருகிறது. நீண்ட நாள் விடுமுறை வருவதால் மக்கள் சொந்த ஊர்களுக்கு வெள்ளிக்கிழமையே பயணம் செய்ய விரும்புவார்கள். இதனை முன்னிட்டு, சொந்த ஊர்களுக்கு செல்பவர்கள் வசதிக்காக, ரயில் டிக்கெட் முன்பதிவு செப்டம்பர் 12ம் தேதி முதல் தொடங்குகிறது.
அந்த வகையில், ஜனவரி 10ம் தேதி பயணம் செய்ய விரும்புபவர்கள் செப்டம்பர் 12ம் தேதியும், ஜனவரி 11ம் தேதிக்கு பயணம் செய்ய விரும்புபவர்கள் 13ம் தேதியிலும், ஜனவரி 12ம் தேதிக்கு செப்டம்பர் 14ம் தேதியும் டிக்கெட் முன்பதிவு செய்து பயணம் செய்யலாம். ஜனவரி 13ம் தேதி போகி பண்டிகை அன்று பயணம் செய்ய விரும்பும் பயணிகள் 15ம் தேதியும் முன்பதிவு செய்து பயணம் செய்யலாம். ஐஆர்சிடிசி இணையதளம் மூலமாகவும், டிக்கெட் முன்பதிவு மையங்களிலும் டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளலாம் என தெற்கு ரயில்வே தகவல் தெரிவித்துள்ளது.