நக்சல் தாக்குதலில் வீர மரணமடைந்த போலீஸாருக்கு நினைவஞ்சலி... முன்னாள் டிஜிபி வால்டர் தேவாரம் பங்கேற்பு!

Naxal attack - Walter Devaram
Naxal attack - Walter Devaram
Published on

திருப்பத்தூரில் நக்சலைட் தாக்குதலில் வீரமரணமடைந்த போலீஸாருக்கு செவ்வாய்கிழமை 30 குண்டுகள் முழங்க நினைவஞ்சலி செலுத்தப்பட்டது.

திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டையில் கடந்த 1981-ஆம் ஆண்டு நக்சலைட் சிவலிங்கம் என்பவரை பிடித்து ஜீப்பில் அழைத்துச்சென்ற போது சிவலிங்கம் மறைத்து வைத்திருந்த நாட்டு வெடி குண்டை வெடிக்க செய்தார். இந்த சம்பவத்தில் ஜீப்பில் இருந்த காவல் ஆய்வாளர் பழனிச்சாமி, தலைமை காவலர்கள் ஆதிகேசவலு, யேசுதாஸ், முருகேசன் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

வீரமரணம் அடைந்த 4 போலீஸாருக்கு ஆண்டுதோறும் திருப்பத்தூர் நகர காவல்நிலையத்தில் கட்டப்பட்டுள்ள மணி மண்டபத்தில் வீரவணக்க நாள் அனுசரிக்கப்பட்டு வருகிறது. அதன்படி வீரமரணம் அடைந்த 4 போலீஸாருக்கு 42-ஆவது ஆண்டாக வீரவணக்க நாள் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை (இன்று) நடைபெற்றது.

திருப்பத்தூர் கலெக்டர் தர்ப்பகராஜ் தலைமை வகித்தார். எஸ்பி ஆல்பர்ட் ஜான் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக முன்னாள் டிஜிபி வால்டர் தேவாரம் கலந்து கொண்டு வீரர்களின் நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

கியூ பிரிவு எஸ்பி ஜி ஷஷாங்க்சாய், முன்னாள் கியூ பிரிவு எஸ்பி எம்.அசோக்குமார், எம்எல்ஏ-க்கள் தேவராஜி, நல்லதம்பி, வில்வநாதன், மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் என்.கே.ஆர்.சூரியக்குமார், நகர்மன்ற தலைவர் சங்கீதா வெங்கடேஷ், திருப்பத்தூர் ஒன்றியக்குழு தலைவர் விஜயா, அரசு அதிகாரிகள், வணிகர்கள், பிரமுகர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டு மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினர். பின்னர், போலீஸார் 30 துப்பாக்கி குண்டுகள் முழங்க மரியாதை செலுத்தினர். அதையடுத்து போலீஸாரின் அணிவகுப்பு மரியாதை நடந்தது.

இதையும் படியுங்கள்:
பங்களாதேஷ் இந்தியா எல்லையில் 4,096 கீமி தூரத்திற்கு பாதுகாப்பு…. வீரர்களுக்கு No leave!
Naxal attack - Walter Devaram

நிகழ்ச்சியில் வால்டர் தேவாரம் பேசியது:

'திருப்பத்தூர், தருமபுரி ஆகிய பகுதிகளில் நக்சலைட்டுகள் ஆதிக்கம் அதிகமாக இருந்தது. மேலும் நக்சலைட்டுகள் ஆதிக்கம் இந்தியா முழுவதும் பரவி இருந்தது. தமிழகத்தில் நக்சலைட்டுகளை ஒழிக்க நான் வேலூர் டிஐஜியாக நியமிக்கப்பட்டேன். அப்போதையை எஸ்.பி.அசோக்குமார் உள்ளிட்டோர் இப்பகுயில் முகாமிட்டு நக்சலைட்டுகளை ஒழிக்க நக்சலைட்டுகள் ஆப்ரேஷன் தொடங்கினோம். இதற்கு இப்பகுதி மக்களும், தருமபுரி பகுதியை சேர்ந்தவர்களும் போலீஸாருடன் இணைந்து செயல்பட்டனர். பொதுமக்களின் ஒத்துழைப்பு காரணமாக தமிழகத்தில் ஒரு வருடத்தில் நக்சலைட்டுகள் ஆதிக்கம் தடுத்து நிறுத்தப்பட்டது. இதற்காக இப்பகுதி மக்களுக்கு நன்றி கடன்பட்டு இருக்கிறோம். தமிழகத்தில் தற்போது நக்சலைட்டுகள் இல்லை. ஆந்திரம், ஜார்கண்ட், சத்திஸ்கர், தெலங்கானா, பிஹார் போன்ற மாநிலங்களில் இன்றும் நக்சலைட்டுகள் ஆதிக்கம் உள்ளது. ஆண்டு தோறும் இந்த நிகழ்ச்சியை நடத்த வேண்டும். நாங்கள் எப்போதும் இதில் கலந்து கொள்வோம்' என்றார்.

இந்த நிகழ்ச்சியில் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி குண்டு வெடிப்பின் போது பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸ் சப் & இன்ஸ்பெக்டர் அனுசுயா டெய்சி கலந்து கொண்டு பேசுகையில், 'அந்த குண்டு வெடியில் நான் மயிரிழையில் உயிர் தப்பினேன். அப்போது தமிழகத்தில் நக்லைட்சுகள் ஆதிக்கம் இருந்தது. நக்சலைட்டுகளை ஒழித்து தமிழகத்தை அமைதி பூங்காவாக மாற்றியவர் ஐயா தேவராம் தான்.' என கூறினார்.

திருப்பத்தூர் டிஎஸ்பி செந்தில் நன்றி கூறினார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com