

அதிமுக ஆட்சி காலத்தில் ஜெயலலிதா முதல்வராக இருந்த பொழுது தமிழக முழுவதும் குறைந்த விலையில் தரமான உணவு மக்களிடம் கொண்டு செல்வதை உறுதி செய்யும் பொருட்டு அம்மா உணவகம் தொடங்கினார். அதன்பின் கடந்த 2021 ஆம் ஆண்டு திமுக ஆட்சி ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு அம்மா உணவகங்களுக்கு சரியான நிதி ஒதுக்கப்படுவதில்லை என்றும், அம்மா உணவகங்கள் மூடுவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அதிமுகவினர் குற்றம் சாட்டி வந்தனர்.
இதைத் தொடர்ந்து சென்னை உள்ள ஒரு அம்மா உணவகத்தில் உள்ள ஜெயலலிதாவின் படம் கிழித்து எறியப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உடனடியாக தலையிட்டு சம்பந்தப்பட்டவர்களை கைது செய்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். மேலும் தமிழ்நாட்டில் உள்ள 21 மாநகராட்சிகளிலும் அம்மா உணவிற்கான நிதி ஒதுக்கப்பட்டு அம்மா உணவகங்கள் செயல்பட்டு வருகிறது.
இந்த நிலையில் திருச்சி மாநகராட்சி மேயரும், திமுக நகர செயலாளருமான அன்பழகன் இன்று திடீரென்று திருச்சி உறையூர் சாலை ரோட்டில் உள்ள அம்மா உணவகத்திலும் மற்றும் அண்ணா நகர் உழவர் சந்தை பகுதியில அம்மா உணவகத்திலும் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
காலை வழங்கப்படும் இட்லிக்கான பொருட்கள் மற்றும் மதியம் வழங்கப்படும் சாம்பார் சாதம் மற்றும் தயிர் சாதங்களை சாப்பிட்டு ஆய்வு செய்தார்.தொடர்ந்து சுவையாகவும் சுகாதாரமான உணவுகளை மக்களுக்கு வழங்க வேண்டும் என்று அம்மா உணவக பணியாளர்களுக்கு அறிவுரை வழங்கினர்.