அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், உக்ரைனுக்கு பேட்ரியாட் வான் பாதுகாப்பு ஏவுகணை அமைப்புகளை வழங்குவதாக அறிவித்துள்ளார். டிரம்பின் இந்த முடிவு சர்வதேச அளவில் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
கடந்த சில வாரங்களாக, ரஷ்யா உக்ரைன் மீது தொடர்ச்சியான மற்றும் பெரிய அளவிலான டிரோன் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தி வருகிறது. ஜூலை 9 அன்று ஒரே இரவில் 700-க்கும் மேற்பட்ட டிரோன்களை ஏவியது ரஷ்யா. இந்தத் தாக்குதல்கள் உக்ரைனின் முக்கியமான உள்கட்டமைப்புகளையும், நகரங்களையும் இலக்காகக் கொண்டு நடத்தப்பட்டு வருகின்றன.
உக்ரைன் தனது வான் பாதுகாப்புகளை பலப்படுத்த மேற்கு நாடுகளின் உதவியை நாடி வருகிறது. உக்ரைன் தரப்பிலும் ரஷ்யாவின் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளில், குறிப்பாக ரஷ்யாவின் குர்ஸ்க் மற்றும் பெல்கோரோட் பகுதிகளில் டிரோன் தாக்குதல்களை நடத்தி வருகிறது.
இப்படியான நிலையில் அமெரிக்கா மற்றும் நேட்டோ நாடுகள் பேட்ரியாட் போன்ற அதிநவீன வான் பாதுகாப்பு அமைப்புகளை உக்ரைனுக்கு வழங்குவது குறித்து கடந்த சில நாட்களாக விவாதித்து வந்தன.
இதனையடுத்து தற்போது இதுகுறித்து அமெரிக்க அதிபர் ட்ரம்ப் "உக்ரைனுக்கு பேட்ரியாட் ஏவுகணைகள் தேவை. ஏனென்றால் ரஷ்ய அதிபர் புதின் பலரை ஆச்சரியப்படுத்துகிறார். அவர் இனிமையாகப் பேசுகிறார், ஆனால் இரவில் அனைவர் மீதும் குண்டு வீசுகிறார். இது எனக்குப் பிடிக்கவில்லை," என்று டிரம்ப் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
மேலும் "இந்த ஏவுகணை அமைப்புகளுக்கான செலவை நேட்டோ நாடுகள் ஏற்றுக்கொள்ளும். அமெரிக்கா அதற்குப் பணம் செலுத்தாது. ஆனால் அவர்களுக்கு மிகவும் தேவைப்படும் பேட்ரியாட்களை நாங்கள் அனுப்புவோம்." என்றும் பேசினார்.
டிரம்ப்பின் இந்த அறிவிப்பு, கடந்த சில வாரங்களாக உக்ரைனுக்கு அமெரிக்கா வழங்கும் ஆயுத உதவிகள் குறித்து நிலவிய குழப்பங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது. முன்னதாக, பென்டகன் உக்ரைனுக்கான சில ஆயுத விநியோகங்களை இடைநிறுத்த முடிவெடுத்தது. ஆனால், ரஷ்யாவின் தாக்குதல்கள் அதிகரித்த நிலையில், தனது முடிவை டிரம்ப் மாற்றியுள்ளார்.
பேட்ரியாட் ஏவுகணை அமைப்புகள், போர் விமானங்களையும், பாலிஸ்டிக் மற்றும் கப்பல் ஏவுகணைகளையும் இடைமறித்துத் தாக்கும் திறன் கொண்ட உலகின் அதிநவீன வான் பாதுகாப்பு அமைப்புகளில் ஒன்றாகும். உக்ரைனின் நகரங்களையும், முக்கிய உள்கட்டமைப்புகளையும் பாதுகாப்பதில் இது ஒரு திருப்புமுனையாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அறிக்கைகளின்படி, இந்த வாரம் நேட்டோ பொதுச் செயலாளர் மார்க் ரூட் உடனான சந்திப்பிற்குப் பின்னர் டிரம்ப் ரஷ்யா குறித்து ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்காவின் இந்த புதிய நிலைப்பாடு, ரஷ்யாவுடனான போரில் உக்ரைனுக்கு பெரும் நம்பிக்கையையும், பலத்தையும் அளித்துள்ளது.