
தெய்யம் (Theyyam) என்பது கேரளாவின் வடபகுதியில் உள்ள மலபார் பிராந்தியத்தில் நிகழ்த்தப்படும் ஒரு சடங்கு நடனமாகும். இது காசர்கோடு, கண்ணூர், வயநாட்டின் மானந்தவாடி, கோழிக்கோடு, வடகரா மற்றும் கொயிலாண்டி தாலுகாக்கள் மற்றும் மாஹே மாவட்டங்கள் உட்பட கேரளாவின் வடக்கு மலபார் பகுதிகளில் ஆடப்படுகிறது. இது கோவில்கள் மற்றும் புனித இடங்களில் நிகழ்த்தப்படுகிறது.
தெய்யம் நடனக்கலைஞர்கள் தெய்வங்கள் மற்றும் வீரர்களின் வேடமிட்டு, வண்ணமயமான ஆடைகள் அணிந்து, முகமூடிகள் மற்றும் தலைக்கவசங்களை அணிந்து ஆடுவார்கள். இது கடவுள்களுக்கும், வீரர்களுக்கும் மரியாதை செலுத்தும் வகையில் நிகழ்த்தப்படுகிறது.
கேரள ஆலயங்களில் வேண்டுதல்கள் நிறைவேறியதும் தெய்வங்களுக்கு நன்றி செலுத்தும் விதத்தில் ஆடப்படும் ஒருவகை நடனம் இது. தெய்யம் நடனத்தை ஆண்களே பெண்கள் வேடமிட்டு ஆடுகின்றனர். இந்த ஆட்டத்தை 'தெய்யாட்டம்' என்றும், தெய்வத்தின் வேடத்தை 'தெய்யக்கோலம்' என்றும் கூறுகிறார்கள்.
தெய்யம் சீசன் மலையாள மாதமான துலாம் (அக்டோபர் நடுப்பகுதி) பத்தாம் நாளில் தொடங்கி ஏடவம் மாதத்தின் நடுப்பகுதி வரை (மே மாத இறுதி) வரை நீடிக்கும்.
தெய்யம் என்பது வடக்கு கேரளாவில் தோன்றிய ஒரு பாரம்பரியமான கலை வடிவமாகும். இது தெய்வீக வழிபாட்டின் ஒரு வடிவமாகவும் நிகழ்த்தப்படுகிறது. தெய்யம் என்பது புராணம், ஆன்மீகம் மற்றும் துடிப்பான நிகழ்ச்சிகளை இணைக்கும் ஒரு தனித்துவமான கலை வடிவமாகும்.
இந்த வசீகரிக்கும் கலை வடிவம் கேரளத்தின் கலாச்சார அடையாளத்தின் ஒருங்கிணைந்த பகுதியாக உள்ளது. பண்டைய மரபுகளை பாதுகாக்கிறது. வடக்கு கேரளாவில் கோவில் திருவிழாக்களின் போதும், மத விழாக்களின் பொழுதும் தெய்யம் என்பது முக்கியமாக நிகழ்த்தப்படுகிறது. இந்தத் திருவிழா ஏராளமான சுற்றுலாப் பயணிகளையும், பக்தர்களையும் ஈர்க்கிறது.
தெய்யம் பல நூற்றாண்டுகளுக்கு முந்தையது. இது நாட்டுப்புற கதைகளில் இருந்தும், பழங்குடி சடங்குகளில் இருந்தும் தோன்றியதாக நம்பப்படுகிறது. நடனம், இசை, நாடகக்கதை சொல்வது ஆகியவற்றின் அனைத்து கூறுகளையும் ஒருங்கிணைத்து பல்வேறு கடவுள்களையும், மூதாதையர் ஆவிகளையும் சித்தரிக்கிறது.
தெய்யத்தில் பல வடிவங்கள் உண்டு. ஒவ்வொன்றும் வெவ்வேறு தெய்வம் அல்லது மூதாதையர்களை குறிக்கின்றது. முச்சிலோட்டு பகவதி, சாமுண்டி, பொட்டன் தெய்யம், கந்தனார் கேளன் போன்றவை சில பிரபலமான தெய்யம் வடிவங்களாகும். சுமார் 400 வகையான தெய்யங்கள் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன.