அமெரிக்காவில் குடியேற வேண்டுமா? H1B விசாவை விடுங்கள் வந்துவிட்டது கோல்ட் கார்டு.அமெரிக்காவின் கோல்ட் கார்டு விசா திட்டத்தை அறிமுகப்படுத்தி வைத்தார் டொனால்ட் ட்ரம்ப். அமெரிக்காவில் வெளிநாட்டவர்கள் வந்து தங்கி வேலை செய்வதையும், குடியேறுவதையும் கடுமையானதாக மாற்றி வருகிறது அமெரிக்க நிர்வாகம்.
அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவியேற்ற பிறகு, நாட்டினுடைய பொருளாதாரத்தை மேம்படுத்தவும், நிதிப் பற்றாக்குறையை சரி செய்யவும் பலவிதமான அதிரடி நடவடிக்கைகளை எடுத்துக் கொண்டு வருகிறார். அந்த விதத்தில் அமெரிக்காவில் நிரந்தர குடியுரிமை வேண்டும் என்பவர்களுக்கு கோல்ட் கார்டு விசா என்ற ஒரு புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தி செயல்பாட்டுக்கு கொண்டு வந்திருக்கிறது. அமெரிக்காவுக்குச் சென்று வேலை பார்ப்பதற்கு H1B உள்ளிட்ட பல்வேறு விசாக்கள் வழங்கப்படுகின்றன. இதில் இந்தியர்கள் அதிகமாக பயன்படுத்தக்கூடிய H1B விசாவும் ஒன்று. H1B விசாவில் அமெரிக்கா செல்பவர்கள் சில காலத்திற்குப் பிறகு அமெரிக்காவில் நிரந்தரமாக வசிக்க வேண்டுமென்றால் கிரீன் கார்ட் என்ற அந்தஸ்தை பெற்றுக் கொள்ள வேண்டும். ஆனால் இப்பொழுது விசா விண்ணப்பம் கிரீன் கார்டு விதிமுறைகள் அனைத்திலும் பல கட்டுப்பாடுகள் வந்துள்ளது.
நிரந்தரமாக அமெரிக்காவில் வேலை பார்க்க வேண்டும் என்பவர்களுக்கு ஒரு மாற்று வாய்ப்பாக கோல்ட் கார்டு விசா திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. அதன்படி இந்த குடியுரிமை திட்டத்திற்கு தனி நபர் விண்ணப்பித்தால் ஒரு மில்லியன் டாலராகவும், நிறுவனங்கள் சார்பில் தங்களின் பணியாளர்களுக்கு விண்ணப்பித்தால் இரண்டு மில்லியன் டாலராகவும் கட்டணம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி வெளிநாட்டவர்கள் அமெரிக்க அரசிடம் குறிப்பிட்ட தொகையை செலுத்தி விட்டு இந்த கோல்ட் கார்டு விசாவை பெற்று நிரந்தரமாக அமெரிக்காவில் தங்குவதற்கான அந்தஸ்தை பெற முடியும். இதில் கிரீன் கார்டை விட பல நன்மைகள் இருக்கிறது என்று டிரம்ப் தெரிவித்துள்ளார்.
ஒரு மில்லியன் US டாலர் என்பது இந்திய ரூபாயின் மதிப்பில் கிட்டத்தட்ட 8 கோடியே 99 லட்சம் ரூபாயாகும். தற்பொழுது கோல்டு கார்டு விசா திட்டம் அமலுக்கு வந்துவிட்டது என்பதால் வெளிநாட்டவர்கள் இந்த கோல்ட் கார்டு விசாவிற்கு விண்ணப்பம் செய்யலாம் என்றும் அறிவித்துள்ளது.
இந்தத் திட்டம் மிகப்பெரிய வெற்றி அடையும் என்றும், இதன் மூலம் கோடிக்கணக்கான டாலர்களை திரட்ட முடியும் என்றும், இது மக்களின் வரிகளை குறைக்க உதவும் மற்றும் பிற நல்ல விஷயங்களை செய்ய உதவியாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த கோல்ட் கார்டு விண்ணப்பங்களுக்கான அதிகாரப்பூர்வ வலைத்தளங்கள் ஏற்கனவே செயல்பாட்டில் உள்ளது. இந்த திட்டம் மூன்று வகைகளை கொண்டுள்ளன. தனிநபர் கோல்டு கார்டு, நிறுவன கோல்ட் கார்டு மற்றும் பிளாட்டினம் கார்டு. தனிநபர் கோல்ட் கார்டில் அமெரிக்க கருவூலத்துக்கு இந்திய மதிப்பில் 8.5 கோடி ரூபாய் வழங்க வேண்டும். அத்துடன் இதற்காக விண்ணப்பிப்பவர்கள் திரும்பப் பெற முடியாத, பரிசோதனை மற்றும் செயலாக்க கட்டணமாக 15,000 அமெரிக்க டாலர் அதாவது இந்திய மதிப்பில் 13 லட்சம் ரூபாய் செலுத்த வேண்டும்.
கார்ப்பரேட் கோல்டு கார்டு என்ற விசாவில் நிறுவனங்கள் ஊழியர்களை ஸ்பான்சர் செய்யலாம். இதற்கு 2 மில்லியன் டாலரை செலுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மூன்றாவதாக பிளாட்டினம் கார்டு. இது மிக உயர்ந்த அளவிலான விருப்பமாகும். இதற்காக விண்ணப்பிப்பவர்கள் 43 கோடி ரூபாயை அரசுக்கு செலுத்த வேண்டும். இத்திட்டத்திற்கு அமெரிக்க பார்லிமென்ட்டின் ஒப்புதல் தேவை என்பதால் இது இன்னமும் முழுமையாக அமல்படுத்தப்படவில்லை.
https://trumpcard.gov/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு சென்று கோல்டு கார்டு விசாவுக்கு விண்ணப்பம் செய்யலாம்.