சாப்பிட்ட உடனேயே படுக்காமல் அல்லது உட்காராமல் சில அடிகள் நடப்பது உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதாக மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர்.
சர்க்கரை நோயாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நீரிழிவு ஒரு கடுமையான உடல் நலப் பிரச்னையாக மாறியுள்ளது. சரியான நேரத்தில் தகுந்த சிகிச்சை எடுக்காமல் போனால், இருதய பிரச்னைகள், விரல்கள் மற்றும் கால் விரல்களில் நரம்பு சேதம், சிறுநீரக கோளாறுகள், கண் பிரச்னைகள், மோசமான இரத்த ஓட்டம் மற்றும் பாதங்களில் நரம்பு சேதம் போன்ற பாதிப்புகள் உருவாகும்.
தினசரி நடைப்பயிற்சி நமது ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. ஏனெனில் இது பல உடல் நலப் பிரச்னைகளில் இருந்து நம்மை காக்கிறது. ஏற்கனவே ஏதேனும் பிரச்னைகள் இருப்பின் அதனைக் கட்டுக்குள் வைத்திருக்கவும் உதவுகிறது. அதனால்தான் தினமும் நடப்பயிற்சி மேற்கொள்ள வேண்டும் என ஒவ்வொரு மருத்துவர்களும் கூறுகின்றனர். சாப்பிட்ட பிறகு சிறிது நேரம் நடப்பது செரிமானத்தை மேம்படுத்துவதாக பல ஆய்வுகள் தெரிவிக்கின்றன. சாப்பிட்ட பிறகு 15 நிமிடங்கள் நடப்பது ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் குறைக்கும். இது டைப் 2 நீரிழிவு போன்ற சிக்கல்களைத் தடுக்கவும் உதவுகிறது.
ஸ்போர்ட்ஸ் மெடிசின் இதழில் சமீபத்தில் வெளியிடப்பட்ட பகுப்பாய்வில், நடைபயிற்சி எவ்வாறு இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவுகிறது என்பதை தெளிவுப்படுத்தியுள்ளது. இதை தீர்மானிக்க துறைச் சார்ந்த 7 ஆய்வாளர்கள், ஆய்வுகளின் முடிவுகளை முடித்து மதிப்பாய்வு செய்தனர். உணவு உண்ட பிறகு இரண்டு முதல் ஐந்து நிமிடங்கள் வரை லேசான நடைபயிற்சி இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப் படுத்துவதில் குறிப்பிடத்தக்க விளைவை ஏற்படுத்தும் என்று ஆய்வாளர்கள் ஒருமனதாக தெரிவித்துள்ளனர்.
சாப்பிட்ட பிறகு சில நிமிடங்கள் நடப்பது ரத்தத்தில் சர்க்கரை அளவைக் கணிசமாகக் குறைக்கிறது என்பதனை பலனடைந்த நோயாளிகளும் தெரிவித் துள்ளனர். நடைப்பயிற்சி இரத்ததில் உள்ள சர்க்கரை அளவைக் குறைப்பது மட்டுமல்லாமல், உடல் சோர்வு இல்லாமல் காக்கிறது. கலோரிகளையும் குறைக்கிறது. மேலும், இது உடலுக்கு வலுவை அதிகரிக்கும் சிறப்பான நடவடிக்கையும் கூட. இதயம் ஆரோக்கியமாக இருப்பதுடன், எலும்புகளும் வலுவடையும்.