

தமிழ்நாட்டில் விஜய் தலைமையிலான தவெக அரசின் முதல் பட்ஜெட் நேற்று (ஆகஸ்ட் 5) சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. சட்டப்பேரவையில் நிதியமைச்சர் மரிய வில்சன் பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.
தமிழ்நாட்டில் சட்டப்பேரவை தேர்தல் அறிவிக்கப்பட இருந்ததால், கடந்த பிப்ரவரி மாதம் திமுக அரசு 2026-27 நிதியாண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தது. இந்நிலையில், தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, விஜய் தலைமையிலான தவெக அரசு அமைந்தது.
நேற்று தமிழக நிதியமைச்சர் மரிய வில்சன் தாக்கல் செய்த பட்ஜெட்டில் கடந்த 5 ஆண்டுகளில் கடன் இரண்டு மடங்காக உயர்ந்திருப்பதாகவும், அதிகமான வட்டியை செலுத்தி வருகிறோம் என்றும் தெரிவித்தார்.
மேலும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அறிவிப்புகள் இந்த பட்ஜெட்டில் ஏதுவும் இல்லை என்றாலும் பெண்கள், மாணவர்கள் பல புதிய அறிவிப்புகள் இடம் பெற்றிருந்தது.
இந்த நிலையில், பட்ஜெட்டில் 'வீட்டுக் கூரை சூரிய மின் மானியத் திட்டம்' அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. இதில் சூரிய மின்பலகைக்கு (Solar Panel) ரூ.1 லட்சம் வரை மானியம் (சோலார் மானியம்) வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. மேலும், இத்திட்டத்தைச் செயல்படுத்துவதற்காக ஆரம்ப கட்டமாக ரூ.50 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தை மாநில அரசு விரைவில் நடைமுறைப்படுத்தப்படும் நிலையில் இத்திட்டத்தின் கீழ் சூரிய மின்பலகை நிறுவ ரூ. 1 லட்சம் வரை மானியம் வழங்கப்படுவதால், ஆரம்ப கால முதலீட்டுச் சுமை பொதுமக்களுக்குப் பெரிய அளவில் குறையும். உபரி மின்சாரத்தை (Surplus Energy) மின் வாரியத்திற்கு வழங்குவதன் மூலம், பொதுமக்கள் அதன் மூலம் வருமானம் ஈட்டவும் முடியும்.
இதற்கிடையே மத்திய அரசு பிரதான் மந்திரி சூர்யா கர் முஃப்த் பிஜிலி யோஜனா என்ற திட்டத்தின் கீழ், சோலார் மேற்கூரை அமைக்க கடன் வழங்குகிறது. இந்தக் கடனுக்கான வட்டி விகிதம் ஆண்டுக்கு 7 சதவீதம் என்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் அறிவிக்கப்பட்ட வீட்டுக் கூரை சூரிய மின் மானியத் திட்டம், மத்திய அரசின் 'பிரதான் மந்திரி சூர்யா கர் முஃப்த் பிஜிலி யோஜனா' (PM Surya Ghar: Muft Bijli Yojana) திட்டத்துடன் இணைக்கப்பட்டு செயல்படுத்தப்படுகிறது.
இத்திட்டத்தின் மூலம் வீடுகளின் மேற்கூரைகளில் சோலார் பேனல் அமைக்க மாநில அரசு ரூ.50 கோடி நிதி ஒதுக்கீட்டுடன் கூடுதலாக ரூ.1 லட்சம் வரை மானியம் வழங்குகிறது.
இது மத்திய அரசின் 'பிரதான் மந்திரி சூரிய வீடு' திட்டத்தின் அடிப்படையில், மாநில அரசும் கூடுதல் நிதி மற்றும் சலுகைகளுடன் இணைத்து வழங்கும் திட்டமாகும். அதாவது மத்திய அரசின் மானியத்துடன் சேர்த்து தமிழக அரசு ரூ.1 லட்சம் வரை மாநில மானியம் வழங்குகிறது.
மத்திய அரசின் திட்டத்தின்படி பொதுவாக 3 கிலோ வாட் வரையிலான சூரிய மின் அமைப்புகளுக்கு அதிகபட்சமாக ரூ. 78,000 வரை மத்திய அரசு மானியமாக வழங்குகிறது.
தற்போது தமிழக அரசின் இந்த புதிய அறிவிப்பின் மூலம் நுகர்வோருக்குக் கிடைக்கும் மொத்த மானியம் ரூ. 1 லட்சம் வரை உயர்த்தப்பட்டுள்ளது.
இரண்டு திட்டங்களின் நோக்கமும் ஒன்றுதான். வீடுகளின் மாதாந்திர மின் கட்டணத்தைக் குறைப்பதற்கும், பசுமை ஆற்றலை (Green Energy) ஊக்குவிப்பதற்கும் பொதுமக்களை ஊக்கப்படுத்துவது.
மின் வாரியத்தின் மூலம் (TANGEDCO) நுகர்வோர்களின் வீடுகளில் ஸ்மார்ட் மீட்டர்கள் பொருத்துவது மற்றும் மானியத் தொகையை நேரடியாக நுகர்வோரின் வங்கிக் கணக்கில் சேர்ப்பது போன்ற ஒருங்கிணைந்த நடைமுறைகளின் கீழ் இது செயல்படுத்தப்படுகிறது.
பொதுமக்கள் சோலார் அமைப்புகளை நிறுவ வசதியாகத் தேசிய அளவிலும், மாநில அளவிலும் குறைவான வட்டியில் (சுமார் 7% வரை) வங்கிக் கடன் வசதிகளும் இத்திட்டத்தின் கீழ் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.