

தமிழக சட்டமன்ற தேர்தல் நடந்து முடிந்த பிறகு 6 அதிமுக எம்எல்ஏக்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்து விட்டு தவெக-வில் இணைந்தனர். முதல்வர் விஜய் வென்ற திருச்சி கிழக்கு தொகுதி உட்பட மொத்தம் 7 தொகுதிகள் காலியானதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் தாராபுரம் மற்றும் மதுராந்தகம் தொகுதிகளைத் தவிர்த்து மற்ற 5 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்த உயர்நீதிமன்றம் தற்காலிக தடை விதித்துள்ளது.
இந்நிலையில் தாராபுரம் மற்றும் மதுராந்தகம் உள்ளிட்ட இரண்டு தொகுதிகளுக்கும் வருகின்ற அக்டோபர் 6-ம் தேதி இடைத்தேர்தல் நடக்க உள்ளது.
நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் மதுராந்தகம் தொகுதியில் அதிமுக வேட்பாளர் மரகதம் குமரவேலும், தாராபுரம் தொகுதியில் சத்யபாமாவும் வென்றனர். இவர்கள் இருவருமே தற்போது தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்துள்ளதால் இடைத்தேர்தலில் இவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படுமா என்று கேள்வி எழுந்துள்ளது.
ராஜினாமா செய்த பிறகு இடைத்தேர்தலில் எங்களுக்கு தவெக வாய்ப்பு வழங்கும் என இவர்கள் இருவருமே தெரிவித்திருந்தனர். இந்நிலையில் இன்று மின்துறை அமைச்சர் நிர்மல் குமாரிடம் ராஜினாமா செய்து விட்டு தவெகவில் இணைந்தவர்களுக்கு வாய்ப்பே வழங்கப்படுமா எனக் கேள்வி எழுப்பப்ட்டது.
இதற்கு பதலளித்த அமைச்சர் நிர்மல் குமார், “இடைத்தேர்தலில் யாருக்கு வாய்ப்பு வழங்கப்படும் என்பதை முதல்வர் விஜய் ஆலோசித்து முடிவெடுப்பார்” எனத் தெரிவித்தார்.
தாராபுரம் மற்றும் மதுராந்தகம் ஆகிய இரண்டு தொகுதிகளிலும் அதிமுக வென்றிருந்த நிலையில், இடைத்தேர்தலில் அமமுக மற்றும் பாஜகவின் ஆதரவை நாடியுள்ளது அதிமுக. மேலும் பாமகவின் ஆதரவும் கிடைக்கும் பட்சத்தில் இடைத்தேர்தலில் கடுமையான போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த இரண்டு தொகுதிகளையும் தங்கள் வசம் கொண்டு வர தவெக அனைத்து முயற்சிகளையும் எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக செங்கோட்டையன் தலைமையில் ஒரு அமைச்சர் குழுவும், ஆதவ் அர்ஜுனா தலைமையில் ஒரு அமைச்சர் குழுவும் தேர்தல் பணிகளை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.
அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்த மரகதம் குமரவேல் மற்றும் சத்யபாமாவிற்கே வாய்ப்பு வழங்க தவெக தலைமை முடிவு செய்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.