.png?w=480&auto=format%2Ccompress&fit=max)
.png?w=480&auto=format%2Ccompress&fit=max)
2026 சட்டமன்றத் தேர்தலில், அதிகம் பேசப்படுவது, விஜய் தலைமையிலான தமிழக வெற்றி கழகம் அரசியல் கட்சியை பற்றி தான். கடந்த சில தினங்களுக்கு முன்பு ஒவ்வொரு தொகுதிகளிலும் போட்டியிடுவதற்கு, கட்சியினர் விருப்ப மனுக்களை பெற்று அவற்றை நிரப்பி சமர்ப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டது. இந்த விருப்ப மனுக்களை வாங்க 100 ரூபாய் கட்டணமாக அறிவிக்கப்பட்டது.
நடிகர் விஜய்க்கு செல்லும் இடமெல்லாம் பெருமளவில் கூட்டம் திரண்டு வந்தது. அதுபோல ரசிகர்களும் விருப்ப மனுக்களை வாங்க போட்டோ போட்டி போட்டுக் கொண்டிருந்தனர். இந்த அறிவிப்பு வெளியான அன்று, கிட்டத்தட்ட 10,000க்கும் மேற்பட்ட கட்சியினர் தமிழக வெற்றி கழகத்தின் தலைமை அலுவலகம் இருக்கும் பனையூருக்கு திரண்டு வந்தனர். இவர்கள் கூட்டமாக வந்ததால் பனையூர் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது, இதன் காரணமாக உள்ளூர் மக்களின் கோபத்திற்கும் ஆளாகினர்.
அதன் பின்னர் , "விருப்ப மனுக்களை வாங்க கட்சியினர் யாரும் பனையூர் அலுவலகத்திற்கு வர அவசியம் இல்லை. இந்த விருப்ப மனுக்களை ஆன்லைனிலேயே 100 ரூபாய் செலுத்தி பெற்றுக்கொள்ளலாம்" என்று அறிவிக்கப்பட்டது. அதன் பின்னர் பலரும் ஆன்லைனில் விருப்ப மனுக்களை பெற்று வந்தனர். அடுத்தடுத்த சில தினங்களில் 50,000 மேற்பட்ட கட்சியினர் விருப்ப மனுக்களை பெற்றனர்.
கொடுக்கப்பட்ட விருப்ப மனுக்களை முறையாக பூர்த்தி செய்து , அந்த விண்ணப்பத்திற்குரிய கட்டணத்தை காசோலையாக இணைத்து , முறையாக பனையூர் தலைமை அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும், என்று அறிவுறுத்தப் பட்டிருந்தது. விண்ணப்பங்களை சமர்ப்பிக்க பொது பிரிவினருக்கு கட்டணமாக 10,000 ரூபாயும் எஸ்.சி/எஸ்.டி பிரிவினருக்கு 5000 ரூபாய் கட்டணமாகவும் நிர்ணயிக்கப்பட்டிருந்தது. விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டிய இறுதி தேதி பிப் 20 என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் தமிழக வெற்றிக் கழக தொண்டர்கள் 50,000 விருப்ப மனுக்களை வாங்கினாலும் , இதுவரை கட்சி தலைமை அலுவலகத்திற்கு அவர்கள் சமர்பித்த விருப்ப மனுக்கள் எண்ணிக்கை , மொத்தமாகவே 5000 அளவில் தான் இருக்கும் என்று தெரிவிக்கின்றனர். திரும்பி வந்த பல விருப்ப மனுக்களில் , காசோலைகளில் இணைக்கப்படவில்லை. இதனால் பல விருப்ப மனுக்கள் செல்லாதவையாகவும் இருக்கின்றன.
விருப்ப மனுக்களைச் சமர்ப்பிக்க வேண்டிய இறுதி நாளான இன்று (பிப். 20), பனையூர் அலுவலகம் கட்சியினர் நடமாட்டமின்றி வெறிச்சோடிக் காணப்படுகிறது. இறுதி நாளில் அதிக மனுக்கள் வரும் என எதிர்பார்த்து காத்திருந்த தலைமைக்கு, இந்த மந்தமான சூழல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.விருப்ப மனுக்களை பெற்ற ஏராளமானோர் , சமர்ப்பிக்க தவறியது , கட்சியின் மீதான எதிர்பார்ப்பை குறையச் செய்வதாக இருக்கிறது.
இதன் மூலம் தேர்தலில் போட்டியிட பெருமளவில் விஜய் ரசிகர்கள் தயாராக இல்லை, என்று அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். திமுக மற்றும் அதிமுக கூட்டணி வலுவாக இருக்கும் சூழலில் தங்களது கட்சி இன்று வரை கூட்டணி கட்சி எதுவும் இல்லாமல் , தேர்தலை எதிர்நோக்குவதைக் கண்டு பலரும் சோர்வாக உள்ளனர். விருப்ப மனுக்கள் எதிர்பார்த்த அளவுக்கு வராதது தவெக நிர்வாகிகளிடையே பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.