

தமிழ்நாட்டில் தொழில் தொடங்க முன்வரும் நிறுவனங்களுக்கு சிங்கிள் விண்டோ முறையில் அனுமதி வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. புதிய தொழில் கொள்கை விரைவில் வெளியிடப்பட உள்ளது. சர்வதேச நிறுவனங்களின் முதலீடுகளை ஈர்க்கவும், தொழில் தொடங்க அனுமதியை எளிதாக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக சட்டப்பேரவையில் ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் ஆற்றிய உரையில் அறிவித்துள்ளார்.
தமிழ்நாடு சட்டமன்ற கூட்டத்தொடரின் முதல் நாளில், தமிழக பொறுப்பு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் ஆற்றிய உரையில் தொழில் வளர்ச்சி மற்றும் முதலீடுகள் குறித்துப் பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். அதன் விபரம் இதோ:
ரூபாய் 200 கோடிக்கும் மேல் முதலீடு செய்யும் அல்லது 5,000 பேருக்கு மேல் வேலைவாய்ப்பு வழங்கும் புதிய நிறுவனங்களுக்கு, ஒற்றை சாளர முறையில் (Fast-track Clearance) விரைவாக அனுமதி வழங்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்படும் என்று ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். மாநிலத்தில் புதிய தொழில் கொள்கையை அமல்படுத்தவும், பொருளாதாரத்தை மேம்படுத்தவும் தமிழக அரசு இந்த முக்கிய நடவடிக்கையை எடுத்துள்ளது. இதன் மூலம் பன்னாட்டு மற்றும் உள்நாட்டு முதலீட்டாளர்களை பெருமளவில் ஈர்த்து, தமிழக இளைஞர்களுக்கான வேலைவாய்ப்புகளை அதிகரிக்க அரசு திட்டமிட்டுள்ளது. இந்த அதிரடி விரைவு அனுமதி திட்டமானது, தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சியை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதில் குறைந்தபட்சம் ரூ.200 கோடிக்கு மேல் தமிழகத்தில் முதலீடு செய்யும் பெரிய நிறுவனங்கள் இதற்கு தகுதியானவை. 200 கோடி முதலீடு இல்லாவிடினும், நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ 5000க்கும் மேற்பட்டோருக்கு வேலைவாய்ப்பு வழங்கும் திட்டங்களை அமைக்கும் நிறுவனங்களுக்கு இந்த முன்னுரிமை கிடைக்கும்.
பல்வேறு அரசுத் துறைகளிடமிருந்து பெறவேண்டிய சான்றிதழ்கள் மற்றும் அனுமதிகளை எவ்வித நிர்வாக தொய்வும் இன்றி மிக விரைவாக பெறுவதற்கு ஒற்றை சாளர முறை எளிமைப்படுத்தப்படும். தமிழகத்தில் தொழில் தொடங்குவதற்கான நடைமுறைகளை முற்றிலும் எளிதாக்கும் வகையில் இந்த புதிய தொழில் கொள்கையை தவெக அரசு விரைவில் வெளியிட உள்ளது. முந்தைய அரசின் தொழில் கொள்கைகளை தொடர்வதுடன் புதிய தொழில் கொள்கையை தவெக அரசு விரைவில் வெளியிட உள்ளது. இதற்கு முதலீடுகளை ஈர்க்க தலைமைச் செயலாளர் தலைமையில் தமிழ்நாடு முதலீட்டு ஊக்குவிப்பு ஆணையம் அமைக்கப்படும் என்று சட்டப்பேரவையில் ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் கூறியுள்ளார்.
கடந்த சில ஆண்டுகளில் மாநிலத்தின் நிதிநிலை சவாலாக மாறியுள்ளதை சுட்டிக்காட்டிய ஆளுநர், நிதி மேலாண்மையை வெளிப்படையாக்குவதற்காக அரசு வெளியிட்ட வெள்ளை அறிக்கை பாராட்டுக்குரியது என்றார். தமிழ்நாட்டிற்கு சேர வேண்டிய முறையான வரிப்பகிர்வு மற்றும் நிதிப் பங்கீட்டைப் பெற சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்படும் மற்றும் தேவைப்படின் சட்டப்பூர்வ நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் தன்னுடைய உரையில் குறிப்பிட்டுள்ளார்.
தொழில் வளர்ச்சியை மேம்படுத்தவும், முதலீடுகளை ஈர்க்கவும் இந்தப் புதிய தொழில் கொள்கை அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பன்னாட்டு மற்றும் உள்நாட்டு முதலீட்டாளர்களை ஈர்த்து வேலை வாய்ப்புகளை பெருக்க அரசு மேற்கொள்ளும் முன்னெடுப்பாக இது அமைந்துள்ளது. தொழில் முதலீடுகளை ஈர்ப்பதன் மூலமும், இளைஞர்களுக்கான வேலைவாய்ப்புகளை உருவாக்குவதன் மூலமும் தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்வதே இந்த விரைவு அனுமதி திட்டத்தின் முதன்மையான நோக்கமாகும். இது தவெக அரசு தமிழ்நாட்டில் தொழில் வளர்ச்சியை ஊக்குவிப்பதற்காக மேற்கொண்டுள்ள தீவிர முயற்சியைக் காட்டுகிறது.