வேளாண் பட்ஜெட்டில் உருப்படியா எதுவுமே இல்லை..வெறும் ஸ்டிக்கர் நாடகம்-அரசியல் தலைவர்கள் விமர்சனம்..!

தவெக வேளாண் பட்ஜெட் 2026
தவெக வேளாண் பட்ஜெட் 2026source:thehindutamil
Updated on

தவெக அரசின் முதல் பொது பட்ஜெட்டை நேற்று நிதியமைச்சர் மரிய வில்சன் தாக்கல் செய்த நிலையில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கிடையே இன்று வேளாண் பட்ஜெட்டை அமைச்சர் வினோத் தாக்கல் செய்தார். பட்ஜெட்டில் பல்வேறு திட்டங்கள் பற்றிய அறிவிப்புகளையும் நிதி ஒதுக்கீடு பற்றியும் வேளாண் துறை அமைச்சர் வெளியிட்டார்.

ஏற்கனவே பொது பட்ஜெட் குறித்து தேர்தல் வாக்குறுதிகள் பற்றிய அறிவிப்பு பட்ஜெட்டில் இல்லை என்பது போன்ற பல கலவையான விமர்சனங்கள் வந்துள்ள நிலையில் இன்று தாக்கல் செய்யப்பட்ட வேளாண் பட்ஜெட் குறித்து அரசியல் தலைவர்கள் தங்கள் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

எதிர்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், கருப்பு சட்டை அணிந்து சட்டமன்றத்திற்கு வந்து பட்ஜெட் அறிக்கையை கேட்டு தமிழ்நாடு வேளாண் பட்ஜெட்டில் உருப்படியாக எதுவும் இல்லை என்று விமர்சித்துள்ளார்.

“வேளாண் பட்ஜெட் என்று கூறுவதைவிட, மரபை மீறி முதல்வரை புகழும் செயல்களை செய்துள்ளனர். இந்த ஆட்சியில் காவிரியில்தான் தண்ணீர் வரவில்லை என்றால், பட்ஜெட்டிலும் திட்டங்கள் இல்லை.

மேகதாது பிரச்னை, பயிர்க் கடன் தள்ளுபடியில் ஏமாற்றம், பயிர் சாகுபடி செய்ய முடியாத நிலை என தவெக ஆட்சியில் விவசாயிகள்தான் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். ஆகையால், விவசாயிகளுக்கு ஆதரவாக திமுக எம்.எல்.ஏ.க்கள் இன்று கருப்புச் சட்டை அணிந்து பேரவைக்கு வந்துள்ளோம். எங்கள் எதிர்ப்பை அரசுக்கு தெரிவித்துள்ளோம்

திமுக அரசின் திட்டங்களுக்கு பெயர்களை மாற்றி புதுத் திட்டங்கள் போல அறிவித்துள்ளார்கள். இந்த பட்ஜெட்டில் உருப்படியாக எதுவுமே கிடையாது. 5 ஏக்கர் வரை நிலம் வைத்திருப்பவர்களுக்கு பயிர்க் கடன் தள்ளுபடி எனக் கூறி மக்களை ஏமாற்றி முதல்வர் ஆட்சிக்கு வந்தார்.

மேகதாது அணை பிரச்சினை ஒவ்வொரு நாளும் தீவிரமாக சென்று கொண்டிருக்கிறது. காவிரி நீர் கிடையாது என்று கர்நாடகம் தெளிவாக கூறிவிட்டது. இந்த விவகாரத்தில் தமிழ்நாட்டின் அனைத்துக் கட்சிகளும் ஒற்றுமையாக இருக்கிறது என்பதை காட்டும் விதமாக அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகிறோம்.

நாளைய கூட்டத்தில் அனைத்து அலுவல்களையும் ஒத்திவைத்துவிட்டு, விவசாயிகள் பிரச்னைகள் பற்றி விவாதிக்க பேரவைத் தலைவரிடம் நோட்டீஸ் வழங்கியுள்ளோம். அவர் அனுமதிப்பார் என்று நம்புகிறேன். எங்களின் கேள்விகளுக்கு முதல்வர் பதிலளிப்பார் என்று நம்புகிறேன்” எனத் தெரிவித்துள்ளார் உதயநிதி.

தவெக வேளாண் பட்ஜெட்
தவெக வேளாண் பட்ஜெட்source:hindutamil

வேளாண் பட்ஜெட் குறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது,

தமிழக அரசின் வேளாண் பட்ஜெட் விவசாயிகளுக்குப் பெரிய ஏமாற்றத்தை அளித்துள்ளதாகவும் புதிய திட்டங்கள் எதுவும் இடம்பெறவில்லை என்றும், பழைய திட்டங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டி அரங்கேற்றப்பட்ட நாடகம் இது என்றும் கடுமையாக விமர்சித்துள்ளார்.

அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், "இன்றைய பட்ஜெட் மீது விவசாயிகள் மிகுந்த எதிர்பார்ப்புகளைக் கொண்டிருந்தனர், ஆனால் அவர்கள் ஏமாற்றமே மிஞ்சியுள்ளனர். வேளாண் பட்ஜெட் என்ற பெயரில் அமைச்சர் இரண்டரை மணி நேரம் பேசினார், ஆனால் எந்தப் புதிய திட்டங்களும் அறிமுகப்படுத்தப் படவில்லை. கடந்த காலத்தில் இருந்த திட்டங்கள் யாவையெல்லாம் வெறுமனே பெயர் மாற்றம் செய்யப்பட்டு இன்றைய டி.வி.கே. பட்ஜெட்டில் மீண்டும் முன்வைக்கப்பட்டுள்ளன.

இன்று, தவெக அரசு பழைய பட்ஜெட்டின் மீது ஸ்டிக்கர்களை ஒட்டி சட்டமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது. குவிண்டாலுக்கு ரூ.3,500 வழங்குவதாக தவெக உறுதியளித்திருந்தது, ஆனால் அதுபற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை.

கரும்பு கொள்முதல் குறித்தும் தெளிவு இல்லை.

வேளாண் பட்ஜெட் என்ற பெயரில் தவெக அரசு இன்று ஒரு நாடகத்தை அரங்கேற்றியுள்ளது" என்றும் பட்ஜெட் மீதான விவசாயிகளின் ஏமாற்றத்தை சுட்டிக் காட்டினார்.

தேமுதிக பொது செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான பிரேமலதா விஜயகாந்த்,

"தவெக அரசு தாக்கல் செய்த வேளாண் பட்ஜெட்டில் எதுவுமே இல்லை" என்று காட்டமாக விமர்சித்துள்ளார். குறிப்பாக பெண்களுக்கு வாழ்வாதாரம் தரும் 100 நாள் வேலை வாய்ப்பு திட்டம் தொடர்பாக பட்ஜெட்டில் அறிவிக்கப்படும் என்று பெரிதும் எதிர்பார்த்ததாகவும் ஆனால் அது பற்றி எந்த அறிவிப்பும் வெளியிடப்பட வில்லை என்றும் நெல் சேமிப்புக்கிடங்குகள் தொடர்பாக அறிவிப்பு இல்லை, பழைய திட்டங்களுக்கு பெயர் மாற்றம் செய்துள்ளனர் என்றும் கூறியுள்ளார்.

பிரேமலதா சற்று ஆவேசமாகவே பட்ஜெட் மீதான கருத்துகளை தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

" செய்திதாளை வாசிப்பது போல வேளாண் பட்ஜெட்டை அமைச்சர் வாசித்து இருக்கிறார். 100 நாள் வேலை வாய்ப்பு திட்டம் தொட்ர்பாக பட்ஜெட்டில் எந்த அறிவிப்பும் வெளியிடப்படவிலை. இதனால் கோடிக்கணக்கான பெண்கள் பாதிக்கப்படுகின்றனர்.

ஏற்கனவே நெல் சேமிப்பு கிடங்குகள் பிரச்சினை குறித்து தேமுதிக சார்பில் கோரிக்கை விடுத்து வருகிறோம். நெல் சேமிப்பு கிடங்கு இல்லாமல் சாலைகளில் நெல் கொட்டப்படுகிறது. இதனால் இழப்பு ஏற்படுகிறது. ஆனால் நெல் சேமிப்புக் கிடங்குகள் தொடர்பாக எந்த அறிவிப்பும் இல்லை.

அதே போல எந்த பயனும் இல்லாமல் பரந்து கிடக்கும் கருவேல மரங்கள் உள்ள நிலத்தை சீர்படுத்த வேண்டும். தரிசு நிலங்களை விளை நிலங்களாக மாற்றுங்கள்.அதற்கான அறிவிப்பும் இல்லை. ஆகவே இந்த பட்ஜெட்டை கடுமையாக எதிர்க்கிறோம்" என்று கூறினார்.

இந்த பட்ஜெட்டை எதிர்கட்சித் தலைவர்கள் அனைவரும் ஒரே குரலில் எதுவுமே இல்லை என்றும் வாசிக்கப் பட்ட பட்ஜெட் மற்றும் பெயர் மாற்றம் செய்து ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட அறிவிப்புகள் என்றும் விமர்சித்து உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதற்கான எதிர்விளைவாக தகுந்த பதில்களை நாளை சட்டசபையில் தவெக அரசு அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படியுங்கள்:
குட் நியூஸ்.. சோலார் பம்ப் செட்டுக்கு 80% மானியம்..!
தவெக வேளாண் பட்ஜெட் 2026
இதையும் படியுங்கள்:
#BREAKING : மகளிருக்கு 50% மானியத்தில் ட்ரோன்கள்: அமைச்சர் வினோத்..!!
தவெக வேளாண் பட்ஜெட் 2026
logo
Kalki Online
kalkionline.com