

தவெக ஆட்சியை கவிழ்க்க சதி செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் திமுகவின் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, அவரது சகோதரர் அசோக் குமாருக்கு சென்னை திருவல்லிக்கேணி போலீசார் சம்மன் அளித்துள்ளனர்.
இவர்கள் இருவரின் வீட்டிலும் போலீசார் சம்மனை ஒட்டியுள்ளனர். மேலும் கரூர் ராமேஸ்வரம்பட்டியில் உள்ள செந்தில்பாலாஜியின் பூர்வீக வீட்டிற்கு சென்று பெற்றோரிடம் சம்மன் வழங்கி கையெழுத்து பெற்றது சென்னை திருவல்லிக்கேணி போலீஸ்.
வரும் திங்களன்று (ஜூலை 6-ம்தேதி) காலை 10 மணிக்கு சென்னை திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் செந்தில்பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக் விசாரணைக்கு ஆஜராக சம்மன் வழங்கப்பட்டுள்ளது.
தவெக ஆட்சியை கவிழ்க்க சதி செய்ததாக, திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதர் மீது வழங்கு பதிவு செய்து சம்மன் வழங்கி உள்ளது சென்னை திருவல்லிக்கேணி போலீஸ்.
செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக் கடந்த 5 நாட்களாக தலைமறைவாக உள்ள நிலையில் விசாரணைக்கு ஆஜராகுமாறு அவரது தாய் பழனியம்மாள், தந்தை வேலுச்சாமியிடம் சம்மன் வழங்கப்பட்டுள்ளது.
செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக் குமார் (அசோக்குமார்) ஆகியோர் தற்போது ஆளும் தவெக (தமிழக வெற்றி கழகம்) கட்சியின் ஆட்சியை கவிழ்க்க எம்எல்ஏ இளையராஜாவுக்கு ரூ.35 கோடி வரை பேரம் பேசியதாக எழுந்த புகாரில் சிக்கியுள்ளனர். இவ்வழக்கில் தொடர்புடைய 8 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர்.
தவெக சட்டமன்ற உறுப்பினர் என். இளையராஜாவிடம், யூடியூபர் திருநாவுக்கரசு மூலமாக ரூ.10 கோடி முதல் ரூ.50 கோடி வரை பேரம் பேசப்பட்டதாக ஆளுங்கட்சி தரப்பில் குற்றம்சாட்டப்பட்டது.
அதாவது தவெக ஊத்தங்கரை சட்டமன்ற உறுப்பினர் என். இளையராஜா, சட்டப்பேரவையில் சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தின் போது தவெக அரசுக்கு எதிராக வாக்களிக்க தன்னிடம் பேரம் பேசப்பட்டதாக காவல் துறையில் புகார் அளித்தார்.
இந்த பேரம் மற்றும் ஆட்சி கவிழ்ப்பு சதிக்கு மூளையாக முன்னாள் அமைச்சரும், தற்போதைய திமுக எம்எல்ஏவுமான செந்தில் பாலாஜியும், அவரது சகோதரர் அசோக் குமாரும் செயல்பட்டதாக முதல் தகவல் அறிக்கையில் (FIR) காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.
இதன் அடிப்படையில் அசோக் குமார் மற்றும் செந்தில் பாலாஜி மீது ஊழல் தடுப்புச் சட்டம், குற்றவியல் சதி மற்றும் மிரட்டல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் முக்கிய நபர்களாகக் கருதப்பட்ட திருநாவுக்கரசு, நரேஷ் கிருஷ்ணன் உட்பட இதுவரை மொத்தம் 8 பேர் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில் செந்தில் பாலாஜி, அசோக்கிற்கும் இந்த பேரத்தில் தொடர்பிருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது. இது குறித்து திருவல்லிக்கேணி போலீசார் விசாரணை நடத்த கரூர், சென்னையில் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக்கையும் தேடி வந்த நிலையில் அவர்கள் 5 நாட்களாக தலைமறைவாக உள்ளனர்
இதற்கு முன்பு, சட்டவிரோத பணப்பரிமாற்றம் மற்றும் அரசு வேலை முறைகேடு வழக்குகளில் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை கைது செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.
தவெக கட்சியின் ஆட்சியை கவிழ்க்க ரூ.50 கோடி வரை பேரம் பேசப்பட்ட சம்பவம் தமிழக அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. தவெக தரப்பில் திமுக மீது நேரடி குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வரும் அதேவேளையில், திமுக இதற்கு மறுப்பு தெரிவித்துள்ளது.