வி.எஸ்.பாபு உடல்நிலை... முதல்வர் விஜய் நேரில் விசாரிப்பு..!!

மருத்துவமனையில் தவெக எம்.எல்.ஏ வி.எஸ்.பாபுவின் உடல்நிலை குறித்து கேட்டறிந்த முதல்வர் விஜய்: வெளியான முக்கிய தகவல்.
VS Babu
vijay meet VS babux
ராஜமருதவேல்

வணக்கம்! நான் வி.ராஜமருதவேல். பொறியியல் படித்து சில வெளிநாடுகளில் பணிபுரிந்துள்ளேன். தற்போது வங்கி மற்றும் காப்பீட்டு துறையில் பணியாற்றுகிறேன். சிறு வயதில் இருந்தே புத்தகத்தின் மீதும் எழுத்தின் மீது தீராத ஈர்ப்பு எனக்குண்டு. சில வருடங்களாக வலைத்தளங்களில் எழுத தொடங்கி, கல்கியில் எழுதும் வாய்ப்பு கிடைத்தது. வாய்ப்பளித்தமைக்கு நன்றி! ஆன்மீகம், ஆரோக்கியம், பயணம், மோட்டிவேஷன், விளையாட்டு, பசுமை/சுற்றுச்சுழல், கலை/கலாச்சாரம், செய்திகள், வெள்ளித்திரை ஆகிய பிரிவுகளில் எழுதி வருகின்றேன். என் எழுத்துக்கள் மற்றவர்களையும் கவரும் என்று நம்புகிறேன். வரலாற்றுக் சிறுகதைகள், வரலாற்றுத் தொடர்கள் எழுத ஆவல்! நன்றி! ஜெய் ஹிந்த்!

Updated on

கடந்த சில வாரங்களாக தவெகவின் கொளத்தூர் தொகுதி எம்எல்ஏவான விஎஸ். பாபு , திடீர் உடல்நலம் குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.கடந்த சில நாட்களாக விஎஸ்.பாபுவின் உடல்நிலை தொடர்பாக, சமூக வலைதளங்களில் பல்வேறு வதந்திகள் வெளியாகி வந்தன.

இந்நிலையில் தவெக தலைவரும் தமிழக முதல்வருமான விஜய் , இன்று எம்ஜிஎம் மருத்துவமனைக்கு நேரில் சென்று சிகிச்சை பெற்று வரும் வி.எஸ். பாபுவைச் சந்தித்து, அவரது உடல் நலம் குறித்து விசாரித்தார். மேலும் அவருக்கு அளிக்கப்பட்டுள்ள சிகிச்சைகள் குறித்தும், முன்னேற்றம் குறித்தும் அந்த மருத்துவமனையின் தலைமை மருத்துவர்களிடம் கேட்டறிந்து கொண்டார். அவர சிகிச்சைக்கு தேவையான அனைத்து உதவியும் தனது சார்பில் செய்து தர தயாராக இருப்பதாகவும் மருத்துவமனை நிர்வாகத்திடம் தெரிவித்திருக்கிறார்.

கடந்த சட்டமன்ற தேர்தலில் , கொளத்தூர் தொகுதியில் முன்னாள் முதல்வர் முக. ஸ்டாலினை எதிர்த்து தமிழக வெற்றி கழகம் சார்பில் போட்டியிட்டவர் வி.எஸ்.பாபு. இவர் தவெகவில் சேரும் முன்னர் , திமுகவில் தீவிரமாக பணியாற்றிக் கொண்டிருந்தார். முந்தைய தேர்தல் நாளில் திமுக தலைவர் ஸ்டாலின் வெற்றிக்காகவும் கடுமையாக உழைத்திருந்தார். பின்னாளில் நடிகர் விஜய் கட்சி தொடங்கியவுடன் திமுகவிலிருந்து விலகி அவர் கட்சியில் இணைந்தார்.

2026 சட்டமன்றத் தேர்தலில் கொளத்தூர் தொகுதியில் போட்டியிட அவருக்கு தவெக வாய்ப்பு கொடுத்தது. தேர்தல் காலங்களில் எந்த ஒரு எதிர்பார்ப்பும் இவரின் மீது ஏற்படவில்லை. அந்த தொகுதியில் முன்னாள் முதல்வர் ஸ்டாலின்தான் வெற்றி பெறுவார் என்று அனைவரும் எதிர்பார்த்து இருந்தனர். இதனால், அப்போது மீடியாக்களின் வெளிச்சம் எதுவும் வி.எஸ்.பாபுவின் மீது படவில்லை.

இந்நிலையில் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியான பின்னர், கொளத்தூர் தொகுதியின் முடிவுகள் இந்தியாவையே கடுமையான அதிர்ச்சிக்கு ஆளாக்கியது. அனைவரும் வியக்கும் வண்ணம் விஎஸ்.பாபு அப்போதைய முதல்வரான ஸ்டாலினை விட 8700 ஓட்டுக்கள் அதிகம் வாங்கி வெற்றி பெற்றார். இவரது வெற்றி தமிழகம் தாண்டி நாடு முழுக்க பேசப்பட்டது. ஸ்டாலினை தோற்கடித்ததால் இவரது புகழ் சர்வதேச அளவில் உயர்ந்தது. ஸ்டாலின் சைகைக்கு இவர் கொடுத்த எதிர் சைகை மிகவும் பிரபலமானது.

VS Babu
vijay VS Babux

கொளத்தூர் தொகுதியில் எம்எல்ஏவாக பதவியேற்ற விஎஸ்.பாபுவிற்கு கட்சியின் அமைச்சரவையில் பதவி கிடைக்கலாம் என்று அப்போது பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. அமைச்சர் பதவி கிடைக்க விட்டாலும் அவருக்கு மக்கள் மத்தியில் நல்ல பிரபலம் கிடைத்திருந்தது. இந்நிலையில் கடந்த செப்டம்பர் 9-ஆம் தேதி, திடீர் மூச்சுத்திணறல் மற்றும் கடுமையான சுவாசக் கோளாறு காரணமாக சென்னையில் உள்ள எம்ஜிஎம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அதன் பின்னர் மருத்துவமனையின் தீவிர கண்காணிப்பில் தீவிர சிகிச்சை பெற்று வந்தார். அவருக்கு இதயம் மற்றும் நுரையீரல் சிகிச்சை நிபுணர்கள் அடங்கிய சிறப்பு மருத்துவர் குழு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளித்து வருகிறது. தொடக்க காலத்தில் செயற்கை சுவாசக் கருவிகளின் உதவியுடன் சிகிச்சைகள் வழங்கப்பட்ட நிலையில், மருத்துவமனையின் தொடர் தீவிர கண்காணிப்பின் காரணமாக அவரது உடல்நிலையில் படிப்படியாக முன்னேற்றம் அடைந்ததாக தகவல்கள் வெளிவந்தன. தற்போது முதல்வர் சந்தித்து ஊடகங்களில் பேசு பொருளாகியுள்ளது.

logo
Kalki Online
kalkionline.com