

தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி அமைத்துள்ள தவெகவின் எம்எல்ஏக்கலை விலை பேசி வாங்க முயற்சி என கடந்த சில நாட்களாக புகார்கள் எழுந்துள்ளது. கரூரில் செந்தில் பாலாஜி ஆதரவாளர்கள் இரண்டு பேர் வீடுகளில் சென்னை போலீஸ் ரெய்ட் நடத்தி வரும் நிலையில் செந்தில் பாலாஜி ஆதரவாளர்கள் வீடுகளில் ரொக்க பணமும் சிக்கியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் ஊத்தங்கரை தவெக எம்எல்ஏ இளையராஜாவை அணுகி கட்சி மாற பேரம் பேசியதாக IPDS யூடியூபர் திருநாவுக்கரசு ஏற்கனவே கைது செய்யப்பட்டு உள்ளார். அவர் கொடுத்த தகவலின் அடிப்படையில் திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமான கரூரில் சக்தி மெஸ் என்ற பெயரில் உணவகம் நடத்திவரும் திமுக பிரமுகர்கள் கார்த்திக் மற்றும் ரமேஷ் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் இருவரும் திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்கள் ஆவர் .
ரமேஷ் மற்றும் கார்த்திக் தவெக எம்எல்ஏ விடம் பேரம் பேசி தவெக ஆட்சியை கவிழ்க்க முயற்சி செய்யப்பட்டதாகவும் குறிப்பாக கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை தவெக எம்எல்ஏ இளையராஜாவிடம் பேரம் பேசியதாகவும் கூறப்படுகிறது.
தவெக ஆட்சியை கவிழ்க்க முயற்சி நடைபெறுவதாக அமைச்சர் நிர்மல் குமார் நேற்று கூறியிருந்தார்.தற்போது வரை ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கிறது.
இந்நிலையில் இந்த பரபரப்பான கைது நடவடிக்கையைத் தொடர்ந்து முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக அரசு, பிற கட்சி எம்.எல்.ஏ.க்களை குதிரை பேரம் மூலம் இழுத்து பெரும்பான்மையை நிரூபித்ததாக திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி மற்றும் அதிமுக தரப்பில் ஆளுநரிடம் புகார்கள் அளிக்கப்பட்டன.
முதலமைச்சர் குதிரை பேரத்தில் ஈடுபட்டதை வைகோ ஒப்புக்கொண்டார் எனவும் உதயசூரியன் சின்னத்தில் வென்ற ராஜேந்திரன், செந்தில் செல்வனை ராஜினாமா செய்யக்கோரி வைகோவுடன் இணைந்து முதல்வர் கூட்டுச்சதி செய்ததாகவும் குதிரை பேரத்தில் முதல்வரே நேரடியாக ஈடுபட்டதால் அவர் மீது வழக்குப்பதிந்து நடவடிக்கை எடுக்க ஊழல் தடுப்புத் துறைக்கு உத்தரவிட வேண்டும் எனவும் திமுக ஆளுநரிடம் வலியுறுத்தி உள்ளது. இந்த முறைகேடு குறித்து சி.பி.ஐ விசாரணை நடத்த வேண்டும் என அதிமுகவும் கோரிய நிலையில் இந்த குற்றச்சாட்டுகளை முதலமைச்சர் விஜய் மற்றும் அவரது கட்சி அமைச்சர்கள் திட்டவட்டமாக மறுத்துள்ளனர்.
இன்று சென்னை தலைமைச் செயலகத்தில் அமைச்சர் நிர்மல் குமார் இந்த விஷயங்கள் குறித்து பேட்டி அளித்துள்ளார். .
திமுக தரப்பிலிருந்து பேரம் பேசப்படாத தவெக எம்எல்ஏக்களே இல்லை.ஒரு சில எம்எல்ஏக்கள் மிரட்டப்பட்டுள்ளனர்.அவர்களில் ஒரு எம்எல்ஏ புகார் அளித்துள்ளார். ஒவ்வொரு எம்எல்ஏவிடமும் 30 கோடி 40 கோடி 50 கோடி என பேரம் 40 நாட்களாக முயற்சி நடைபெறுகிறது.
கைது செய்யப்பட்டுள்ள ரமேஷ் திமுகவின் செந்தில் பாலாஜி உடன் நேரடி தொடர்பில் இருப்பவர் . திமுகவுடன் எடப்பாடி பழனிச்சாமியும் கூட்டு சேர்ந்து குறுக்கு வழியில் ஆட்சி அமைக்க முயற்சி செய்கிறார். பேரம் பேசியவர்கள் மீது சட்டபூர்வமாக கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
வாக்கிற்கு ரூபாய் 2000 கொடுத்தும் ரூபாய் 70 கோடி செலவழித்தும் தவெகவினர் வெல்லவில்லை. தவெகவினர் யாரிடமும் குதிரைபேரம் நடத்தவில்லை .வெறும் 2 லட்சம், 3 லட்சம் செலவு செய்து வென்றவர்கள்.
எம்எல்ஏக்கள் பேரம் பேசப்பட்ட விவகாரத்தை மறைக்க குதிரை பேரம் நடந்துள்ளதாக கூறுகிறது திமுக.அலுவலக ஆட்சி கவிழ்ந்துவிடும் என மு.க.ஸ்டாலின் தொடர்ந்து பேசுவதின் பின்னணி பேரம் தான்.ஆளுநருக்கு கடிதம் எழுதும் ஆர்.எஸ்.பாரதியிடம் குதிரை பேர குற்றச்சாட்டுக்கு ஆதாரம் உள்ளதா?
ஒரு வாரமாக உதயநிதி ஸ்டாலின் துபாயில் இருக்கிறார்.துபாயில் உதயநிதி ஸ்டாலினுக்கு என்ன வேலை? அதிமுகவில் இருப்பவர்கள் உணர்ச்சிவசப்பட்டு வருத்தத்தில் தங்கள் பதவியை ராஜினாமா செய்துள்ளனர்.
ஆன்லைனில் பதிவு செய்தால் உடனே தவெக புகைப்படத்துடன் ஐடி கார்டு வழங்கப்படும். இது வழக்கமானது.எம்எல்ஏக்களை ரூபாய் 40 கோடி 50 கோடி கொடுத்து பர்ச்சேஸ் செய்கிறார் ஸ்டாலின். எங்களுடன் இணைந்து பயணிப்பதாக மட்டுமே வைகோ கூறியுள்ளார்.திமுகவிலிருந்து பல பல நிர்வாகிகள் தவெகவில் இணைந்து வருகின்றனர். நாங்கள் யாரிடமும் பதவி விலகுமாறு கூறுவதில்லை அவர்களாகவே ராஜினாமா செய்கின்றனர்" என தங்கள் மீதான குதிரை பேரம் குற்றச்சாட்டுக்கு பதிலடி தந்து பேசினார் அமைச்சர் நிர்மல் குமார்.