விஜயின் தமிழக வெற்றிக் கழகத்தில் சேர தனக்கு விருப்பம் இருப்பதாக ராதாரவி தெரிவித்துள்ளார்.
அரசியலுக்கு வரப் போவதாக நடிகர் விஜய் கடந்த பிப்ரவரி மாதம் தனது கட்சியைத் தொடங்கினார். வரும் 2026ம் ஆண்டு நடக்கவிருக்கும் தமிழக சட்டசபை தேர்தலில் போட்டியிடப் போவதாகவும் தெரிவித்தார்.
அதற்கான அனைத்து வேலைகளும் நடைபெற்று வருகின்றன. மேலும் தனது 69வது படத்துடன் தனது சினிமா பயணத்தை முடிக்கவிருப்பதாக தெரிவித்தார். புதுமுகம் நவீன்குமார் இயக்கியிருக்கும் கடைசி தோட்டா படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் ராதாரவி. இந்நிலையில்அந்த படவிழாவில் ராதாரவி கூறியதாவது,
"நான்நடிக்க வந்து 50 ஆண்டுகள் ஆகிவிட்டது. நடிகன் என்பவன் இறந்தும் நடிப்பவன். நடிகன் இறந்தாலும் அவன் நடித்த காட்சிகளும், கதாபாத்திரங்களும் ரசிகர்களின் கண் முன்பு வந்து கொண்டே தான் இருக்கும். அதனால் என் நடிப்பு பயணம் தொடர்ந்து கொண்டிருக்கும். தற்போது நான் எந்தக் கட்சியிலும் இல்லை. விஜய் அரசியலுக்கு வந்திருப்பது வரவேற்க வேண்டிய விஷயம். அவர் என்னை அழைத்தால் நிச்சயம் தமிழக வெற்றிக் கழகத்தில் சேர்வேன்." என்றார்.
நடிகர் ராதாரவி தனது அரசியல் பயணத்தை திமுகவுடன் துவங்கினார். பின்னர் அதிமுக விற்கு சென்று எம்.எல்.ஏ ஆனார். மீண்டும் அதிமுகவிலிருந்து திமுக சென்றார். திமுகவில் இருக்கும்போது அவர் நயன்தாரா பற்றி விமர்சித்தது பெரும் சீற்றமாக எழுந்த நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் அவரை கட்சியிலிருந்து நீக்கினார்.
திமுகவில் இருந்து நீக்கப்பட்ட பிறகு எடப்பாடி பழனிச்சாமி முன்னிலையில் மீண்டும் அதிமுகவில் சேர்ந்தார். 2019ம் ஆண்டு அதிமுகவில் இருந்து விலகி பாஜகவில் சேர்ந்தார். தற்போது அவர் எந்த கட்சியிலும் இல்லை.
தன் கட்சியில் சேர சில நிபந்தனைகள் விதித்திருக்கிறார் விஜய். சினிமாவில் இருப்பவர்கள் யாரையும் தன் கட்சியில் சேர்க்க அவர் விரும்பவில்லை. ராதாரவி பலமுறை கட்சி மாறியிருக்கிறார். பாஜகவிற்கு பிறகு த.வெ.க கட்சியில் இவர் சேர்வாரா? விஜய் அழைப்பாரா? என்பதுதான் மிகுந்த எதிர்பார்ப்பே.