

ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா கொமேனி கொலை செய்யப்பட்டதை தொடர்ந்து , ஈரான் அருகில் உள்ள அரபு நாடுகளை தாக்கி வருகிறது. இந்த தாக்குதலின் அரபு நாடுகளில் வசித்து வரும் பல்வேறு நாட்டினரும் உயிரிழந்து வருகின்றனர். மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நடைபெறும் போர் காரணமாக விமான சேவையும் சரக்கு போக்குவரத்தும் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. ஈரானின் புரட்சி பாதுகாப்பு படை வான்வழி மற்றும் கடல் வழி தாக்குதல்களை அதிகப்படுத்தி உள்ளது. இந்த தாக்குதலில் ஈரானின் எல்லையை ஒட்டிய பகுதிகளில் போக்குவரத்தில் உள்ள சில கப்பல்களையும் தாக்கி வருகிறது.
ஈரான் புரட்சி படைகள் ஓமன் நாட்டின் முசந்தம் தீபகற்பம் அருகில் பயணித்த ஸ்கைலைட் என்ற வர்த்தக கப்பலை குறிவைத்து தாக்குதல் நடத்தின. இந்த கப்பலில் பணிபுரிந்த 21 ஊழியர்களின் 16 பேர் இந்தியாவை சேர்ந்தவர்கள் ஆவர். சர்வதேச கடல் பாதுகாப்பு விதிப்படி பயணித்த இந்த கப்பலை , ஈரான் தனது எல்லைக்குள் அத்துமீறியதாக காரணம் கூறி தாக்குதல் நடத்தியுள்ளது. ட்ரோன் மூலம் குண்டுவீசி நடத்தப்பட்ட இந்த தாக்குதல் மார்ச் 3 ஆம் தேதி நடைபெற்றுள்ளது.
ஈரான் நடத்தியிருந்த இந்த தாக்குதலில் மாலுமிகளாக பணிபுரிந்த 2 இந்தியர்கள் சம்பவ இடத்திலேயே பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 3 இந்தியர்கள் படுகாயம் அடைந்துள்ளனர் , 2 இந்தியர்கள் காணாமல் போனதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த சம்பவம் நடைபெறும் முன்னர் , மஸ்கட் கடற்கரையில் இருந்து 52 கடல் மைல் தொலைவில் பயணித்த 'எம்கேடி வியோம்' (MKD Vyom) என்ற மற்றொரு சரக்கு கப்பல் மீதும் ஈரான் தாக்குதல் நடத்தி இருந்தது. இந்த தாக்குதலில் ஒரு இந்தியர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் ஸ்கைலைட் கப்பலில் காணாமல் போனதாக அறிவிக்கப்பட்ட 2 இந்தியர்கள் , உயிரிழந்துள்ளதாக இன்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர்களில் கப்பலின் கேப்டன் ஆஷிஷ் குமாரும் ஒருவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தின் மூலம் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் , ஈரான் நடத்திய பல்வேறு தாக்குதல்களில் 5 இந்தியர்கள் பலியாகி உள்ளனர். மேலும் 20க்கும் மேற்பட்டோர்கள் படுகாயம் அடைந்துள்ளனர்.
தொடர்ச்சியாக தாக்குதல்கள் அதிகரித்த வண்ணம் இருப்பதால், இந்திய அரசாங்கம் தாக்குதல்களுக்கு ஆளாகியுள்ள இடங்களில் இருந்து, இந்தியர்களை மீட்பதற்கு பல்வேறு நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இந்த தாக்குதல்களில் பலியாகி உள்ள இந்தியர்களின் உடலை மீட்பதற்கு , ஓமனில் உள்ள இந்திய தூதரகம் வழியாக மத்திய அரசு முயற்சி செய்து வருகிறது. போரில் பலியானவர்களின் உடல்களை இந்தியாவிற்கு கொண்டு வருவதற்கும் தூதரகம் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. மேலும் காயமடைத்தவர்களுக்கு உயரிய சிகிச்சை அளிக்கவும் ஓமன் அரசு அதிகாரிகளுடன் இந்திய தூதரகம் இணைந்து பணியாற்றி வருகிறது.
இந்தியர்கள் மற்றும் இந்திய கப்பல்கள் மீதான தாக்குதல்களை தவிர்க்கவும் , பாதுகாப்பை அதிகரிக்கவும் பாரசீக வளைகுடா மற்றும் ஓமன் வளைகுடா பகுதிகளில் இந்திய கடற்படை தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறது. நிலைமையை உன்னிப்பாக கவனிக்கவும் அடுத்த கட்ட நடவடிக்கையை தொடங்கவும் இந்திய கடற்படை தயாராக இருக்கிறது.