ஒரே நாளில் 2 தமிழ் பிரபலங்கள் மரணம் - திரையுலகினர் அதிர்ச்சி..! 

manorama son and deva brother
manorama son and deva brother
Published on

இன்று தமிழ் திரையுலகை சேர்ந்த இரண்டு சினிமா பிரபலங்கள் மரணமடைந்தது , திரையுலகினரை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. ஆச்சி மனோரமாவின் மகன் பூபதியும் , இசையமைப்பாளர் தேவாவின் தம்பி சபேஷ்ஷும் ஒரே நாளில் உயிரிழந்துள்ளனர். இது இவர்களின் குடும்பத்தினர் மட்டுமன்றி திரையுலகை சார்ந்தவர்களையும் கவலையில் ஆழ்த்தியுள்ளது.

மனோரமாவின் மகன் பூபதி:

ஆச்சி மனோரமாவை பற்றி அறிமுகம் தேவையில்லை .தமிழ் சினிமாவில் முதல் முறையாக 1000 படங்களுக்கு மேல் நடித்த நடிகை என்ற பெருமை அவருக்கு உள்ளது. பெண் சிவாஜி என்று பலராலும் புகழப்பட்டவர். 3 தலைமுறை நடிகர்களுடன் நடித்து எப்போதும் தனக்கு என்று தனி இடத்தை தமிழ் சினிமாவில் பதித்தவர். மனோரமாவின் ஒரே மகன் தான் பூபதி , 1965-ஆம் ஆண்டு பிறந்தார்.  இவர் இயக்குநர் மகேந்திரனின் ‘உதிரிப்பூக்கள்’ படத்தின் மூலம் 1979-ஆம் ஆண்டு அறிமுகமானார்.அதன் பின்னர் ஆராதனை ,மணல் கயிறு, குடும்பம் ஒரு கதம்பம் , மனைவி ரெடி ,டில்லி பாபு , ராணித்தேனீ , நட்சத்திரம் , மனைவி ரெடி, மானா மதுரை மல்லி  உள்ளிட்ட பல படங்களில்  நடித்துள்ளார். இவரை வைத்து மனோரமா "தூரத்து சொந்தம்” என்ற திரைப்படத்தை தயாரித்தார். இந்த படம் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை, ஆனாலும் பலரது பாராட்டுக்களை பெற்றது. 

அதன் பின்னர் "சரணம் ஐயப்பா’ என்ற பக்தி திரைப்படம் அவருக்கு நல்ல பெயரை பெற்று தந்தது.சமீப காலமாக உடல் நலம் சரியில்லாமல் இருந்த அவர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார். இவருக்கு ராஜராஜன் என்ற ஒரு மகனும் அபிராமி, மீனாட்சி என்கிற இரண்டு மகள்களும் உள்ளனர்.

தேவாவின் தம்பி சபேஷ்: 

90 களின் காலத்தில் தமிழ் திரையுலகின் உச்சத்தில் இருந்தவர் தேனிசைத் தென்றல் தேவா. ரஜினி,கமல் , விஜய் , அஜித் , பிரபுதேவா உள்ளிட்ட நடிகர்களின் அதிக திரைப்படங்களுக்கு இசையமைத்தவர் தேவா தான். அவரது திரைப்படங்களுக்கு இணை இசையமைப்பாளர்களாக பணிபுரிந்தவர் தான் சபேஷ் - முரளி ஆகிய அவரது இரு சகோதரர்கள். இதில் சபேஷ் இன்று காலையில் உடல்நலக் குறைவு காரணமாக தனது 68 வது வயதில் உயிரிழந்துள்ளார்.  

ஆரம்ப காலத்தில் தேவா இசையமைக்கும் திரைப்படங்களில் , தன் சகோதரர் முரளி உடன் இணைந்து உதவி செய்து வந்தார். பின்னர் சரத்குமார் நடித்த 'சமுத்திரம்' திரைப்படம் மூலமாக முரளியுடன் சேர்ந்து இரட்டை இசையமைப்பாளராக அறிமுகமானார்.இந்த திரைப்படத்தின் பாடல்கள் அனைத்தும் பெரிய அளவில் வெற்றியை பெற்றது. பின்னர் தவமாய் தவமிருந்து, பொக்கிஷம் மற்றும் கோரிப்பாளையம் போன்ற பல படங்களுக்கும் இசையமைத்துள்ளார். இவரது இசையில் வந்த பல திரைப் படங்களின் பாடல்கள் வெற்றி பெற்றுள்ளன. . சபேஷுக்கு கீதா மற்றும் அர்ச்சனா எனும் மகள்களும் கார்த்திக் எனும் மகனும் உள்ளனர். சபேஷின் மனைவி தாரா முன்னரே காலமானது குறிப்பிடத்தக்கது. 

இன்று ஒரே நாளில் இரண்டு திரை பிரபலங்கள் மறைந்தது சினிமா ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.இவர்களின் மரணத்திற்கு திரையுலக பிரபலங்கள் பலர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். சில திரையுலகினர் இரங்கல் தெரிவித்து உள்ளனர்.

இதையும் படியுங்கள்:
பிரபல நிறுவனத்தில் 6 லட்சம் பேருக்கு வேலை பறிபோகும் அபாயம்..!
manorama son and deva brother

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com