

மு.க.ஸ்டாலின் அல்லது அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உடனே கல்வராயன் மலைப்பகுதியை பார்வையிட வேண்டுமென்று சென்னை ஐகோர்ட் ஆலோசனை வழங்கியுள்ளது.
சமீபத்தில் கள்ளச்சாராயம் குடித்து 67 பேர் மரணமடைந்தனர். இந்த சம்பவம் தமிழகம் முழுவதையும் உலுக்கியது. இதனால், இந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றமே தானாக முன்வந்து விசாரணை செய்து வருகிறது.
இந்த வழக்கு, நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம் மற்றும் குமரப்பன் ஆகியோர் அடங்கிய அமர்வில் கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது, தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன் ஆஜரானார். அப்போது இந்த வழக்கும், சிபிஐ விசாரணை கோரிய வழக்கும் ஒன்றல்ல என்று அவர் நினைப்பதாக தெரிவித்தார்.
ஆனால், இந்த வழக்கிற்கும் கல்வராயன் மலைப்பகுதி மக்களின் சமூக பொருளாதாரத்திற்கும் தொடர்பு இருக்கிறது என்றார். ஏனெனில், கள்ளச்சாராயத்தை அதிகம் உற்பத்தி செய்யும் இடம் கல்வராயன் மலைப்பகுதி. இப்போது கள்ளச்சாராயத்தை தடைசெய்தால், அந்த மக்களின் பொருளாதாரம் பாதிக்கப்படும் என்பதுதான் விஷயமே.
ஆயிரம் சதுர கிலோமீட்டர் பரப்பு கொண்ட மற்றும் 95 சதவீதம் பழங்குடி மக்கள் வசிக்கும் கல்வராயன் மலைப்பகுதி, கடந்த 1976ஆம் ஆண்டில் தான் இந்தியாவுடன் இணைக்கப்பட்டிருக்கிறது. கடந்த 1996ஆம் ஆண்டு முதல் தான் அப்பகுதி மக்களுக்கு வாக்குரிமை கிடைத்து இருக்கிறது. அந்தப் பகுதி மக்கள் மிகவும் பின்தங்கியுள்ளனர் எனக் குறிப்பிட்டனர்.
கல்வராயன் மலைப்பகுதியில் வாழும் மக்களின் தற்போதைய நிலை குறித்த அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்று அரசு தலைமையிலான வழக்கறிஞரிடம் தெரிவிக்கப்பட்டது. அப்போது குறுக்கிட்ட வழக்கறிஞர் தமிழ்மணி, அரசு அதிகாரிகள் அரசைப் பாதுகாக்கும் வகையில் அறிக்கை அளிப்பார்கள் என அச்சம் தெரிவித்தார்.
மேலும் அந்த மலைப்பகுதியில் எந்த அடிப்படை வசதியும் இல்லை. மருத்துவமனைகள் இல்லை என்பதால், கர்ப்பிணிகள் அதிகளவு சிரமப்படுகிறார்கள். ஆகையால், அந்த அறிக்கையில் மக்களுக்கு தேவைப்படும் வசதிகள் என்னென்ன என்பதை பட்டியலிட வேண்டும் என்று தெரிவித்தார்.
இதனையடுத்து இன்று இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. நீதிபதிகள் எஸ்.எம். சுப்ரமணியம், சி.குமரப்பன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது அறிக்கை வேகமாக தயாராகி வருவதாக தெரிவிக்கப்பட்டது.
இதனை ஏற்று வழக்கு விசாரணையை ஜூலை 26 ஆம் தேதிக்கு தள்ளிவைத்த நீதிபதிகள், கள்ளச் சாராயம் மட்டுமே அந்த பகுதி மக்களின் ஒரே ஆதாரமாக உள்ள நிலையில், அதனை ஒழிக்கும் பட்சத்தில் அப்பகுதி மக்களின் வாழ்வாதாரத்திற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றனர்.
அந்த பகுதிக்கு தாங்கள் செல்வதை விட, தமிழக முதலமைச்சர் ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சருடன் சென்று பார்வையிட்டால் அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுப்பார்கள், அந்த பகுதி மக்களுக்கு ஏதேனும் நன்மை விளையும் எனத் தெரிவித்தனர். மேலும் முதல்வரால், செல்லமுடியவில்லை என்றால், உதயநிதி ஸ்டாலின் செல்ல வேண்டும் என்றார்.