

தமிழ்நாடு சட்டப்பேரவை இரண்டு நாட்கள் விடுமுறைக்குப் பிறகு, இன்று கூடியது. இன்று ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் மற்றும் அரசின் செயல்பாடுகள் குறித்த விவாதங்களும் நடைபெறறது. இன்று முதல்வர் விஜய் பிறந்த நாள் என்பதால் சட்டமன்ற உறுப்பினர்கள் அவருக்கு வாழ்த்துக்களையும் சொல்லி தங்கள் உரையை நிகழ்த்தினர்.
இந்நிலையில் எதிர்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் சட்டமன்றத்தில் எழுப்பிய கேள்விகள் அனைவரது கவனத்திற்கும் சென்றுள்ளது.
உதயநிதி ஸ்டாலின் பேசும் முன் திமுக சார்பாக முதல்வருக்கு எங்களுடைய பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துகொள்வதாக கூறி தனது கேள்விகளை அடக்கினார்."ஆட்சிபொறுபேற்று 40 நாட்கள் முடிந்துவிட்டது. ஆளுநர் உரையில் 40 நாட்களில் இந்த அரசு ஏதேனும் திட்டங்களைக் கொண்டு வந்திருக்கிறார்களா? என்று நானும் எங்களது சட்டமன்ற உறுப்பினர்களும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்தோம்.ஆனால் எங்களுக்கு மிஞ்சியது வெறும் ஏமாற்றம் மட்டுமே. தமிழ்தாய் வாழ்த்துக்கு முதலிடம் கொடுங்கள் என்று சொன்னேன். அதன்படி தமிழ்தாய் வாழ்த்து பாடப்பட்டது. அதன்பிறகு மரபை மீறி தேசியகீதம் இரண்டு முறை பாடப்பட்டிருக்கிறது.
மொத்தத்தில் ஆளுநர் உரை ரீல்ஸ் கன்டென்ட்டிற்கு உதவுமே தவிர ரியல் பிரச்னைகளுக்கு உதவுவதாக தெரியவில்லை.ஆளுங்கட்சியின் நிறை குறைகளை சொல்வதுதான் எதிர்கட்சியின் வேலை. ஆனால் இப்போது இருக்கக்கூடிய ஆளுங்கட்சியை விமர்சனம் செய்வதில் முந்தைய எதிர்கட்சிகளை விட எங்களுக்கு அதிக பொறுப்பும், அதிக உரிமையும் இருக்கிறது.அதற்கு காரணம் எங்களுடைய கூட்டணி கட்சியாக இருந்து எங்கள் உடன் பிறப்புகளின் வாக்குகளைப் பெற்று எங்களின் தயவில் தான் அரசு நடந்துகொண்டிருக்கிறது. குறிப்பாக சொல்லப்போனால் எங்களின் வாக்கு எதிர்கட்சியில் மட்டும் இல்லை. ஆளுங்கட்சியிலும் எங்களின் ஓட்டு இருக்கிறது" என்று பேசியதும் எதிர்க்கட்சி எம்எல்ஏக்கள் கைகளைத் தட்டி ஆதரவு தெரிவித்தனர்.
இந்த ஆட்சியின் முன்பு பல பிரச்சினைகள் உள்ளன. அதில் கவனம் செலுத்தாமல் அடுத்த கட்சியில் இருந்து ஆட்களை எடுப்பதில் தான் முழு முயற்சி நடக்கிறது ஆள் பிடிக்கும் வேலையை விட்டுவிட்டு ஆட்சி நிர்வாகத்தில் அவர் கவனம் செலுத்த வேண்டும்.3 சோபா 5 சோபாவாக மாறி உள்ளது என அடுத்த குற்றச்சாட்டை வீசினார் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின்.
எம்எல்ஏக்களை இழுத்து தூயசக்தி ஆக்கி வருகின்றனர். தீர்ந்து போன சக்தியிடம் திருடும் அளவிற்கு காய்ந்துபோன சக்தியாக உள்ளது தவெக. ஆள் பிடிக்கும் வேலையை விட்டுவிட்டு ஆட்சி நிர்வாகத்தில் தவெக அரசு கவனம் செலுத்த வேண்டும்.மாதம் 2500 மகளிர் உரிமைத்தொகை ஆண்டுக்கு 6 சிலிண்டர் உள்ளிட்டவை எப்போது வழங்கப்படும் என முதல்வர் பதில் உரையை கூற வேண்டும். திமுக மீது பழக்க தோஷத்தில் குறை கூறாமல் தீர்வை நோக்கி பதில் கூற வேண்டும்.
முழுக்க முழுக்க முதலமைச்சரின் புகழரையாக தான் ஆளுநர் உரை அமைந்துள்ளது .. தமிழ்த்தாய் வாழ்த்து 1 முறை, தேசிய கீதம் 2 முறை ஏன்? ஆளுநர் உரை நாளன்று தமிழ்த்தாய் வாழ்த்து ஒரு முறை பாடப்பட்ட நிலையில், தேசிய கீதம் மட்டும் 2 முறை பாடப்பட்டது. மரபு மீறல் நடந்துள்ளது. தமிழ்த்தாய் வாழ்த்தை விட ஆளுநர் தான் முக்கியமா?
நான் முதல்வன் திட்டத்தை தவெக அரசு முடக்க முயற்சி செய்கிறது .“நான் முதல்வன்” திட்டத்தின் மூலம் 41 லட்சம் மாணவர்கள் பயனடைந்துள்ளனர் . அதை முடக்க முயற்சி நடக்கிறதா என்று கேள்வி எழுப்பினார்.
சிங்கப்பெண் படையினர் குற்றவாளிகளை பிடிக்காமல் ரீல்ஸ் போட்டு வருகின்றனர். மன்னன் எவ்வழியோ அதே வழியில் சிங்கப்பெண்களும் ரீல்ஸ் போடுகின்றனர்.
பாலியல் வன்கொடுமைக்கு ஆளான பெண் தவெக எம்எல்ஏ சரவணன் பெயரை கூறுகிறார். குற்றச்சாட்டுகள் எவ்வளவு முன் வைத்தாலும் காவல்துறைக்கு பொறுப்பு வகிக்கும் முதலமைச்சர் எந்த பதிலும் அளிக்கவில்லை.விவசாயிகள் மீது தடியடி நடத்தப்பட்டுள்ளது போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் மீது தடியடி நடத்தப்பட்டுள்ளது. இன்னொரு பிறவி இருந்தால் விவசாயியாக பிறப்பேன் என கூறிவிட்டு விவசாயிகளை கைது செய்கிறார் முதலமைச்சர்.
மின்வெட்டு மற்றும் மின்சார நிர்வாகம் குறித்து“தமிழ்நாட்டுக்கே power போய்விட்டது” எனக் கூறி,அறிவிக்கப்படாத மின்வெட்டு,பள்ளிகளுக்கு மின்சாரம் இல்லாததால் விடுமுறை, இதனால் முதலீடுகள் பாதிக்கப்படுமா என்ற கேள்விகளை முன்வைத்தார்.
சட்டம்-ஒழுங்கு பிரச்சினைகள் குறித்து கேள்வி எழுப்பினால் முதலமைச்சர் பதில் அளிக்கவில்லை எனவும் விமர்சித்தார்.
இப்படி எதிர்க்கட்சித் தலைவர் முன்வைத்த அனைத்து குற்றச்சாட்டுகளுக்கும் முதலமைச்சர் நாளை பதிலளிப்பார் என தேசிய குற்ற ஆவண காப்பக புள்ளி விவரங்களை சுட்டிக்காட்டி அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பதில் அளித்துள்ளதும் கல்வி அமைச்சர் ராஜ் மோகன் எதிர்க்கட்சி தலைவரின் பல கேள்விகளுக்கு பதில் தந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.
கோவில் நிதி குறித்து எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கேள்விக்கு "குன்னூரில் உள்ள விநாயகர் கோவிலுக்கு மாதத்திற்கு 500 பேர் தான் வருகிறார்கள் அந்த கோவிலின் கழிப்பறை வசதி கூட இல்லை அங்கு ₹ 10 கோடியில் மல்டி லெவல் கார் பார்க்கிங் ஏற்படுத்த கடந்த அரசு அறிவித்துள்ளது அடிப்படை வசதி கூட இல்லாத அப்படிப்பட்ட இடங்களில் கோவில் நிதியை பயன்படுத்தி மல்டி லெவல் கார் பார்க்கிங் எதற்கு? என அறநிலையத்நுறை அமைச்சர் ரமேஷ் பதில் அளித்து கவனம் ஈர்த்தார்.
மேலும் இக்கூட்டத்தில் உறுப்பினர்களின் மேஜைமேல் சிறு பாட்டில் தண்ணீர் வைக்கவேண்டும் என்ற வேண்டுகோளை தேமுதிகவின் பிரேமலதா முன்வைத்த போது ஓ பன்னீர்செல்வம் உடனடியாக " அப்படி வைத்தால் ஏதேனும் பிரச்சினை என்றால் எடுத்து வீசி விடுவார்கள் " எனப் பேசி மறுப்பு தெரிவித்ததும் முதல்வர் முகத்தில் புன்னகை வந்ததும் சபையில் கலகலப்பான சூழல் தந்தது.
இப்படி சட்டப்பேரவை இன்று சில சலசலப்புகள் மற்றும் கலகலப்புகளுடன் சுவாரஸ்யமாக சென்றது. நாளை முதல்வரின் உரை மேலும் சட்டசபையை பரபரப்பாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.