இந்தியாவில் கொரோனா காலகட்டத்திற்கு பிறகு விவாகரத்துகள் அதிகரித்து விட்டது என்று தான் சொல்ல வேண்டும். அந்த காலத்தில் பெண்கள் குடும்பம், குழந்தைகள் என வீட்டையும் குடும்பத்தையும் கவனித்து கொண்டு இருந்தனர். ஆனால் தற்போது பெண்கள் நன்றாக படித்து பெரிய வேலையில் ஆண்களுக்கு நிகராக சுயமாக சம்பாதித்த சொந்த காலில் நிற்க ஆரம்பித்து விட்டனர். தங்களின் எந்த ஒரு தேவைக்கும் கணவரை சார்ந்திருக்க வேண்டிய அவசியம் இல்லை என்ற கண்ணோட்டத்தில் வாழ ஆரம்பித்து விட்டனர். இதனால் கணவன் மனைவிக்கு ஈகோவில் தொடங்கும் பிரச்சனைகள் கடைசியில் விவாகரத்தில் சென்று முடிவடைகிறது.
அந்த வகையில் விவாகரத்து கோரும் மனைவி கணவனிடம் இருந்து ஜீவனாம்சம் (Alimony/Maintenance) கோர முடியும். மனைவிக்கு வருமானம் இல்லாவிட்டாலோ அல்லது போதிய வருமானம் இல்லாவிட்டாலோ, தன்னைப் பராமரிக்க இயலாத பட்சத்தில் ஜீவனாம்சம் கேட்கலாம்.
ஜீவனாம்சம் என்பது வாழ்க்கையை தானே சமாளிக்க முடியாத ஒருவர் தன்னை பராமரிக்க வேண்டியவரிடம் இருந்து சட்டப்படி பெரும் தொகையாகும். இது முக்கியமாக விவாகரத்து அல்லது பிரிவுக்கு பிறகு கணவன் அல்லது மனைவி ஒருவர் மற்றொருவருக்கு விவாகரத்தின் பொருட்டு ஜீவனாம்சம் வழங்க வேண்டிய சட்டமாக உள்ளது.
ஆனால் இந்தியாவில் ஆண்களே அதிகம் வேலைக்கு போகும் சூழலும், பெண்களை விட அதிகமாக சம்பாதிக்கும் சூழலும் உள்ள காரணத்தாலும் பெரும்பாலான வழக்குகளில் ஆண்களே அதிக ஜீவனாம்சம் கொடுக்கும் நிலை உள்ளது.
அதாவது இந்தியாவில் விவாகரத்திற்கு பிறகு ஜீவனாம்சம் வழங்க வேண்டும் என்பது பெண்களுக்கு உள்ள சட்டப்பாதுகாப்பு. இந்த சட்டத்தை சில பெண்கள் தவறாக பயன்படுத்தி கணவரிடம் இருந்து அதிக ஜீவனாம்சம் கேட்டு தெந்தரவு செய்வதாக அவ்வப்போது விமர்சனங்கள் எழுந்த வண்ணம் இருந்தது.
இந்நிலையில் நிதி ரீதியாக சுயசார்புடனும், சுதந்திரமாகவும் இருக்கும் ஒரு துணைக்கு, அது கணவன் ஆனாலும், மனைவி ஆனாலும் நிரந்தர ஜீவனாம்சம் வழங்க முடியாது என்று சமீபத்தில் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்து இருந்தது குறிப்பிடத்தக்கது. ஜீவனாம்சம் கோருபவர் உண்மையிலேயே தனக்கு நிதி உதவி தேவை என்பதை நிரூபிக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் வலியுறுத்தி இருந்தது.
இந்த நிலையில் தான் விவாகரத்து வழக்கு ஒன்றில் அலகாபாத் உயர்நீதிமன்றம் ஒரு முக்கிய தீர்ப்பை வழங்கி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதாவது, சுயமாக சம்பாதிக்கும் பெண்ணுக்கு விவாகரத்து பெற்ற கணவன் ஜீவனாம்சம் வழங்கத் தேவையில்லை என தற்போது அலகாபாத் உயர்நீதிமன்றம் அதிரடியாக அறிவித்துள்ளது.
அன்கித் சஹா என்பவருக்கும் அவரது மனைவிக்கு விவாகரத்தான நிலையில் கணவன் தனக்கு ஜீவனாம்சம் வழங்கவில்லை என்று கூறி, அவரது மனைவி நீதிமன்றத்தை நாடியிருந்தார். இந்த விவாகரத்து வழக்கில் அந்த பெண் தான் படிக்கவில்லை, வேலையும் இல்லை கணவரிடம் இருந்து ஜீவனாம்சம் வேண்டும் என கோரியிருந்தார். ஆனால், மனைவி சொல்வது பொய் என்று கணவர் ஆதாரங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பித்தார்.
அதில் அந்த பெண் முதுகலை படித்தவர் என்பதும் வெப் டிசைனராக வேலை பார்ப்பதும், மாதம் ரூ.36,000 சம்பளமாகப் பெறுவதும் தெரிய வந்தது.
இதையடுத்து, அந்த பெண் வருமானம் ஈட்டுபவர் என்பதால், தன்னைத் தானே பராமரித்துக் கொள்ளும் திறன் கொண்டவர் எனக்கூறி அந்த பெண்ணுக்கு ஜீவனாம்சம் தேவையில்லை என கோர்ட் அதிரடியாக உத்தரவிட்டிருக்கிறது.
இதன் மூலம் சம்பாதிப்பதை மறைந்து ஜீவனாம்சம் கேட்கும் பெண்களுக்கு நீதிமன்றம் தரமான தீர்ப்பை வழங்கியுள்ளது.