

மருத்துவக் காப்பீடு என்பது எதிர்பாராத உடல்நலப் பிரச்சினைகள் மற்றும் திடீர் மருத்துவச் செலவுகளிலிருந்து அந்த குடும்பத்தை பாதுகாக்க இன்றியமையாதது. இது மருத்துவச் செலவுகளைச் சமாளிக்க நிதிப் பாதுகாப்பை அளிக்கிறது, தரமான மருத்துவ வசதிகளை அணுக உதவுகிறது, சேமிப்பைப் பாதுகாக்கிறது மற்றும் வரிச் சலுகைகளையும் வழங்குகிறது. எப்போதும் அதிகரித்து வரும் மருத்துவச் செலவுகள் மற்றும் நோய்களின் கணிக்க முடியாத தன்மை போன்றவற்றால், இந்தியாவில் ஒருவர் மருத்துவக் காப்பீடு வைத்திருப்பது பாதுகாப்பானது மட்டுமல்ல அவசியமானதும் கூட.
அந்த வகையில், இந்தியாவில் மருத்துவச் சிகிச்சைக்கான கட்டணம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், ஒரு மோசமான உடல்நலக் குறைவு அல்லது விபத்தின் போது, உங்களுக்குத் தகுந்த மருத்துவச் சிகிச்சையை அளித்து உதவுகிறது. இதனாலேயே பலரும் சமீபகாலமாக மருத்துவக் காப்பீடு செய்வதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இந்நிலையில் கர்ப்பிணி பெண் ஒருவரின் சிகிச்சைக்கான செலவு தொகையை காப்பீட்டு நிறுவனம் வழங்க மறுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை அண்ணாநகரைச் சேர்ந்த இனியா என்பவர் நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில் கடந்த ஆண்டு மே மாதம் இன்சூரன்ஸ் நிறுவனம் ஒன்றில் ரூ.15 லட்சத்துக்கு மருத்துவ காப்பீடு எடுத்திருந்ததாகவும், அதில் அனைத்து மருத்துவ சிகிச்சை சார்ந்த செலவு மற்றும் பிரசவம் சம்பந்தமான செலவுகள் அடங்கும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. நான் காப்பீட்டில் சேர்ந்த பிறகு கர்ப்பம் அடைந்ததாகவும், அந்த சமயத்தில் தனக்கு இரைப்பை குடல் அழற்சி பாதிப்பு ஏற்பட்ட நிலையில் அதற்காக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றதற்கு ரூ.34,312 செலவானதாகவும் கூறியுள்ளார்.
இந்த தொகையை வழங்கும்படி காப்பீட்டு நிறுவனத்துக்கு விண்ணப்பித்த நிலையில் கர்ப்ப காலத்தின்போது ஏற்படும் மருத்துவ சிகிச்சைக்கான செலவுகளுக்கு காப்பீடு வழங்க முடியாது என்றும் அது காப்பீட்டு திட்ட விதிகளில் இல்லை எனக்கூறி எனது விண்ணப்பத்தை இன்சூரன்ஸ் நிறுவனம் நிராகரித்தது.
நான், எடுத்துக்கொண்ட சிகிச்சை கர்ப்ப கால சிகிச்சை சம்பந்தப்பட்டது அல்ல என தெளிவுபடுத்திய போதும் செலவு தொகையை தர காப்பீடு நிறுவனம் தர மறுத்தது. எனவே சிகிச்சைக்கான செலவு தொகை மற்றும் இழப்பீடாக ரூ.1 லட்சம் வழங்கவும் உத்தரவிட வேண்டும் என்று அந்த பெண்ணின் மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, காப்பீட்டு நிறுவனம் தரப்பில், அந்த சிகிச்சை தொடர்பான ஆவணங்களை பார்க்கும்போது மனுதாரர் கர்ப்ப காலத்துக்கான சிகிச்சையை தான் பெற்றுள்ளார் என தெரிவதால் காப்பீட்டு திட்ட விதிகள்படி சிகிச்சைக்கான செலவு தொகையை மனுதாரர் கோர முடியாது என தெரிவிக்கப்பட்டது.
இதை ஏற்க மறுத்த நுகர்வோர் குறைதீர் ஆணையம், மனுதாரரின் சிகிச்சை தொடர்பான ஆவணங்களை பார்க்கும்போது அவர் இரைப்பை குடல் அழற்சி பாதிப்புக்கு தான் சிகிச்சை பெற்றுள்ளார் என்பது தெள்ளத்தெளிவாக தெரிகிறது. மேலும் இது கர்ப்பம், குழந்தை பிறப்பு தொடர்புடைய சிகிச்சை அல்ல என்பதும் தெளிவாக தெரிகிறது.
எனவே, கர்ப்ப காலத்துக்கான சிகிச்சையை மனுதாரர் பெற்றுள்ளார் எனக்கூறி காப்பீட்டு நிறுவனம் சிகிச்சைக்கான செலவு தொகையை வழங்க மறுப்பது ஏற்புடையது அல்ல என்றும் மனுதாரரின் கோரிக்கையை நிராகரித்தது காப்பீடு நிறுவனத்தின் சேவை குறைபாட்டை காட்டுவதாக உள்ளது.
எனவே, மனுதாரருக்கு சிகிச்சைக்கான செலவு தொகை 34,312 ரூபாயுடன், சேவை குறைபாடு மற்றும் வழக்கு செலவுக்காக 20,000 ரூபாயையும் சேர்த்து மொத்தமாக ரூ.54,312ஐ காப்பீட்டு நிறுவனம் வழங்க வேண்டும் என நுகர்வோர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.