தமிழக அரசியலில் பரபரப்பு :NDA கூட்டணியில் சேர தவெக முடிவு..?

tvk meeting
tvk meeting
Published on

தமிழக சட்டமன்ற தேர்தல் நடைபெறும் நாள் பற்றிய அறிவிப்பு இன்னும் சில தினங்களில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சூழலில் விஜய் தலைமையிலான தமிழக வெற்றி கழகம் எந்த கட்சியுடன் கூட்டணி அமைக்கும்? என்று கேள்வி எழுந்துள்ளது. நீண்ட காலமாக காங்கிரஸ் கட்சி தமிழக வெற்றி கழகத்துடன் கூட்டணி வைப்பதாக கூறி அரசியல் களத்தை பரபரப்பாக்கி வந்தது. ஆனால், இறுதி கட்டத்தில் விஜய்யை வைத்து திமுக கூட்டணியில் டிமாண்ட் செய்து 3 தொகுதிகளை அதிகமாகவும் 1 ராஜ்யசபா உறுப்பினர் பதவியும் பெற்றுக் கொண்டது. இதற்கு முன்னர் தமிழ்நாட்டில் தேசிய கட்சிகளுக்கு , மாநில கட்சிகள் ராஜ்யசபா உறுப்பினர் பதவிகளை வழங்கியது இல்லை.

தவெக – காங்கிரஸ் கூட்டணி கனவுகள் தகர்ந்ததால் , திமுக தனது கூட்டணியை வலுப்படுத்திக் கொண்டது. இன்றைய சூழலில் திமுக தனது கூட்டணியை இறுதி செய்து விட்டது. காங்கிரஸ், மதிமுக உள்ளிட்ட பல கட்சிகளுக்கு தொகுதிகளையும் ஒதுக்கி விட்டது. ஆனால் , தமிழகத்தில் அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில், இதுவரையில் கூட்டணி கட்சிகளுக்கு தொகுதிகளை பங்கீடு அளிக்கவில்லை. இந்த கூட்டணியில் தவெக இணையும் என்று கடந்த சில தினங்களாக செய்திகளில் வெளிவந்த வண்ணம் உள்ளது.

தவெக தலைவர் விஜய்யுடன் , பாஜக கூட்டணியை சேர்ந்த ஆந்திர துணை முதல்வரும் , நடிகருமான பவன் கல்யாண் கூட்டணிக்கு பேச்சு வார்த்தை நடத்தியதாக தகவல்கள் கசிந்தன. தேசிய ஜனநாயக கூட்டணியின் சார்பில் தவெகவிற்கு 40 தொகுதிகளும் துணை முதல்வர் பதவியும் வழங்கப்படும் என்று உறுதி தெரிவித்ததாகவும் ஊடகங்களில் செய்திகள் உலா வந்தன.

​இந்த கூட்டணிக்கு முத்தாய்ப்பாக முதலில் , தவெக பொதுச் செயலாளர் ஆனந்திற்கு நெருக்கமான புதுச்சேரி முதல்வர் ரங்கசாமியுடன், கூட்டணி தொடர்பாக பேசப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. புதுச்சேரியில் என்டிஏ கூட்டணியில் இணைத்து விட்டு ,அதை தமிழகத்திலும் தொடரலாம் என்றும் பேசப்பட்டு வந்தது. இந்நிலையில் இன்று (மார்ச் 13) தவெக பொதுச் செயலாளர் ஆனந்த் தலைமையில் நடைபெற்ற அவசர ஆலோசனை கூட்டத்தில், பாஜகவுடன் கூட்டணி வைப்பது குறித்து ஆலோசனைகள் நடைபெற்றது.

இந்த அவசர ஆலோசனைக் கூட்டத்தில் தமிழகத்தைச் சேர்ந்த 132 மாவட்ட செயலாளர்களில் 120 பேர் நேரடியாக கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் தேர்தல் பணியாற்றுவது , கட்சியை வலிமைப்படுத்துவது , பாஜகவுடன் கூட்டணி ஆகியவை விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. பாஜகவுடன் கூட்டணி தொடர்பான விவாதத்திற்கு கட்சியில் பலத்த ஆதரவு கிடைத்துள்ளது. கூட்டத்தில் கலந்துகொண்ட 120 மாவட்டச் செயலாளர்களில், சுமார் 98 பேர் பாஜகவுடன் கூட்டணி அமைப்பதற்கு ஆதரவாக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

விஜயை சுற்றி கரூர் கூட்ட நெரிசல் மரணம் தொடர்பான சிபிஐ வழக்கு , ஜனநாயகன் திரைப்பட சிக்கல்கள் , கூட்டணி இல்லாமல் தொண்டர்கள் சோர்வு போன்றவை குறித்தும் ஆலோசனை செய்யப்பட்டது. பெரும்பாலான நிர்வாகிகளின் மனநிலை ஏதேனும் ஒரு கூட்டணியில் இணைய வேண்டும் என்பதாக இருந்தது. ஆலோசனைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் அனைத்தும் அதன் தலைவர் விஜயிடம் அறிக்கையாக சமர்ப்பிக்கப்படும். விஜய் எடுக்கப் போகும் முடிவு அரசியல் களத்தில் சூட்டை கிளப்புமா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

இதையும் படியுங்கள்:
மருத்துவ உலகை மிரள வைத்த சம்பவம் : பரலோகம் சென்ற பெண்ணின் உயிரை மீட்டெடுத்த பள்ளம்.!
tvk meeting

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com