
முதல்வரின் முகவரி துறையின் கீழ் பல்வேறு சேவைகளை ஒருங்கிணைத்து, பொதுமக்களின் மனுக்களைப் பெற்று தீர்வுகாணும் திட்டங்கள் அவ்வபோது அரசால் அறிவிக்கப்பட்டு, செயல்படுத்தப்படுகின்றன.
அந்த வகையில், அரசுத் துறைகளின் சேவைகளை மக்களின் இல்லங்களுக்கே சென்று வழங்கும் ‘உங்களுடன் ஸ்டாலின்’ என்ற திட்டத்தை சிதம்பரத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஜூலை 15ஆம் தேதி தொடங்கி வைத்தார். தொடர்ந்து, மாநிலம் முழுவதும் இந்த திட்டத்துக்கான முகாம்கள் தொடங்கின.
நகா்ப்புறப் பகுதிகளில் 13 அரசுத் துறைகளின் 43 சேவைகளும், ஊரகப் பகுதிகளில் 15 அரசுத் துறைகளின் 46 சேவைகளும் உங்களுடன் ஸ்டாலின் முகாம் திட்டத்தின் மூலம் வழங்கப்பட்டு வருகிறது.
இந்த முகாமில், மகளிா் உரிமைத் தொகை பெறத் தகுதியுள்ள விடுபட்ட மகளிா் மகளிா் உரிமைத் திட்டத்துக்கான விண்ணப்பத்தைப் பெற்று பூா்த்தி செய்து வழங்கலாம் என்பதால், பெரும்பாலானோரின் எதிர்பார்ப்பாகவும் மாறியிருக்கிறது.
இந்நிலையில் சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் ‘உங்களுடன் ஸ்டாலின்' திட்ட முகாம் இன்று (வெள்ளிக்கிழமை) 6 வார்டுகளில் நடைபெற உள்ளது. இந்த முகாம்கள் காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை நடைபெற உள்ளது.
மணலி மண்டலம்
மணலி புதுநகர் சென்னை தொடக்கப்பள்ளி, தண்டையார்பேட்டை மண்டலம், ஆர்.வி.நகர் குருமூர்த்தி பள்ளி,
திரு.வி.க.நகர் மண்டலம்
சீனிவாசன் நகர் 3-வது பிரதான சாலையில் உள்ள பழைய பள்ளிக் கட்டிடம், தேனாம்பேட்டை மண்டலம், சூசைபுரம் சர்ச் ஆப் செயின்ட் ஜோசப் தி ஒர்க்கர், வளசரவாக்கம் மண்டலம், மதுரவாயல் ஸ்ரீபாக்யலட்சுமி திருமண மண்டபம், ஆலந்தூர் மண்டலம், முகலிவாக்கம் வி.ஜி.எஸ். பிருந்தாவன் கார்டன் எக்ஸ்டென்சன், சமூக நலக் கூடம் ஆகிய 6 வார்டுகளில் நடைபெறுகிறது.
தமிழகம் முழுவதும் வரும் நவம்பர் மாதம் வரை 10 ஆயிரம் இந்த முகாம்கள் நடத்தப்பட உள்ளன. இதுவரை கிடைத்த விண்ணப்பங்களில், பாதிக்கும் மேல் மகளிர் உரிமைத் தொகை பெறுவதற்கான விண்ணப்பங்களே உள்ளன. முதல்கட்டமாக, ஜூலை 15-இல் தொடங்கி ஆகஸ்ட் 15-ஆம் தேதி வரை முகாம்கள் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது. வாரத்தில் செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி ஆகிய 4 நாட்கள் இந்த முகாம்கள் நடத்தப்படுகின்றன. இந்த முகாம்களில் பெறப்படும் விண்ணப்பங்களின் மீது அதிகபட்சமாக 45 நாட்களுக்குள் தீர்வு காணப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.