கோடையை சமாளிக்க பொதுமக்களுக்கு தடையின்றி குடிநீர் விநியோகம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்!

முதல்வர் மு.க.ஸ்டாலின்
முதல்வர் மு.க.ஸ்டாலின்

மிழ்நாட்டில் இந்தக் கோடைக் கோடைக்காலத்தில் பொதுமக்களுக்கு தங்கு தடையின்றி குடிநீர் விநியோகம் செய்யப்பட வேண்டுமென்று இன்று தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தி  உள்ளார்.

முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில் அவர், “இந்த கோடைக் காலம் இரண்டு விதமான நெருக்கடிகளை ஏற்படுத்தும். ஒன்று அதிகப்படியான வெப்பம். இன்னொன்று குடிநீர் தேவை அதிகரிப்பு. கடந்த வடகிழக்குப் பருவ மழை காலத்தில், தமிழ்நாட்டின் கடலோரப் பகுதிகளில் அதிக மழை பெய்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டபோதிலும், நீர்ப்பிடிப்பு பகுதிகளான தமிழகத்தின் மேற்கு மாவட்டங்களில் குறைந்த அளவு மழை பெய்தது. இதனால் ஏற்பட்டுள்ள குடிநீர் பற்றாக்குறைச் சூழல் குறித்து, தலைமைச் செயலாளர் மற்றும் பிற துறைச் செயலாளர்கள் விளக்கினார்கள்.

இந்த நிலையில், தென்மேற்கு பருவமழை காலத்திலும், முதல் ஓரிரு மாதங்களில் மழையளவு எதிர்பார்ப்பதை விட குறைவாகவே இருக்கக் கூடும் என்று இந்திய வானிலை மையம் குறிப்பிட்டுள்ளது. எனவே, தற்போது அணைகளில் உள்ள நீரைச் சிக்கனமாகப் பயன்படுத்தி, அடுத்த இரண்டு மாதங்களுக்கு குடிநீர்த் தேவையை நிறைவு செய்ய வேண்டிய கடினமான சூழ்நிலையில் நாம் உள்ளோம். இதனை கருத்தில் கொண்டு அனைத்துத் துறை அலுவலர்களும் கவனமாக செயல்பட்டு குடிநீர் பிரச்னை நிலவக்கூடிய அனைத்து பகுதிகளுக்கும் சென்று, உடனடி தீர்வு காண வேண்டும் என்று நான் கேட்டுக் கொள்கின்றேன்.

தமிழ்நாட்டின் 22 மாவட்டங்கள் வறட்சியால் குடிநீர் பற்றாக்குறை உள்ள மாவட்டங்களாக ஏற்கெனவே அறிவிக்கப்பட்டு, மாநிலப் பேரிடர் நிவாரண நிதியிலிருந்து 150 கோடி ரூபாய் குடிநீர் விநியோகப் பணிகளுக்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதனை தேவைக்கேற்ப மாவட்டங்களுக்கு பிரித்தளித்து, குடிநீர் வழங்கல் பணிகளையும், லாரிகள் மூலம் குடிநீர் விநியோகம் செய்யும் பணிகளையும் மேற்கொள்ள வேண்டும் என்று வருவாய் நிர்வாக ஆணையரைக் கேட்டுக் கொள்கின்றேன்.

குடிநீர் வடிகால் வாரிய அலுவலர்களும், நகராட்சி நிர்வாகத் துறை செயலாளர் உள்ளிட்ட துறை அலுவலர்களும், தற்போது செயல்பட்டு வரும் பல்வேறு கூட்டுக் குடிநீர் திட்டங்களின் செயல்பாட்டைத் தொடர்ந்து கண்காணித்து, தடையின்றி பராமரித்திட வேண்டும். நகராட்சி மற்றும் பேரூராட்சிப் பகுதிகளில் குடிநீர் பிரச்னைகள் ஏற்படும்போது, அப்பகுதி மக்களை நேரில் சந்தித்து பிரச்னைகளுக்கு உடனடி தீர்வு காண வேண்டும் என்று ஆணையர்கள் அறிவுறுத்தப்பட வேண்டும்.

இந்த கூட்டுக் குடிநீர் திட்டங்கள் மற்றும் நீரேற்று நிலையங்கள் தடையின்றி தொடர்ந்து செயல்படுத்துவதற்கு, சீரான, தடை இல்லாத மின்சாரம் அவசியம். எனவே, இத்தகைய திட்டப்பணிகளுக்கு மின்சாரம் தடையின்றி கிடைப்பதை உறுதி செய்யுமாறு மின்வாரியத்தின் தலைவரை கேட்டுக் கொள்கிறேன்.

ஊராட்சிப் பகுதிகளில், சிறிய குடிநீர் திட்டங்கள் மூலம் பயன்பெறக்கூடிய பல கிராமங்களில், ஆழ்துளை கிணறுகள் வறண்டு இருக்கின்றன. இவற்றுக்கு பதிலாக வேறு குடிநீர் ஆதாரங்களில் இருந்தோ அல்லது லாரிகள் மூலம் மக்களுக்கு குடிநீர் கிடைக்கப் பெறுவது உறுதி செய்யப்பட வேண்டும். ஊராட்சித் தலைவர்கள் மற்றும் ஊராட்சித் துறை அலுவலர்களை இப்பணிகளில் முழுமையாக ஊரக வளர்ச்சித் துறை செயலாளரும் இயக்குனரும் ஈடுபடுத்திட வேண்டும்.

நமது மாநிலத்தில் வாக்குப் பதிவு முடிந்தும், தேர்தல் நடத்தை விதிகள் நடைமுறையில் இருக்கக்கூடிய நிலையில், இந்தப் முக்கியப் பணிகளில் எந்தவிதமான சுணக்கமும் ஏற்பட்டு விடாமல் தொடர்ந்து அனைத்து மாவட்டங்களையும் கண்காணித்து வருமாறு தலைமைச் செயலாளரை கேட்டுக் கொள்கின்றேன். மேலும், அனைத்து மாவட்டங்களுக்கும் மேற்பார்வை அலுவலர்கள் தொடர்ந்து நேரில் சென்று குடிநீர் விநியோகப் பணிகளை ஆய்வு செய்து, பற்றாக்குறை உள்ள இடங்களில் மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகளை பற்றி உரிய அறிவுரைகளை வழங்கிட வேண்டும்.

இதையும் படியுங்கள்:
இந்தியா வந்த வணிகக் கப்பலை தாக்கிய ஹவுதி படை…!
முதல்வர் மு.க.ஸ்டாலின்

குடிநீர் பற்றாக்குறைச் சூழல் இருப்பதால், அனைத்துத் துறை அலுவலர்களும் ஒருங்கிணைத்து சிறப்பாக செயல்பட்டு அடுத்த இரண்டு மாதங்களில் மக்கள் எந்த வகையிலும் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்திட வேண்டும். கோடைக் காலத்தில் தண்ணீர் தேவை அதிகம். ஆனால் தண்ணீர் கிடைப்பது குறைவு. இதனை மனதில் வைத்து மக்களுக்காக அனைத்து துறையும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்” என்று அறிவுறுத்தி உள்ளார்.

இக்கூட்டத்தில் அமைச்சர்கள் கே.என்.நேரு, இ.பெரியசாமி, தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா, நீர்வளத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சந்தீப் சக்சேனா, தமிழ்நாடு மின் தொடரமைப்பு கழகத்தின் தலைவர்/ தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் ராஜேஷ் லக்கானி, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை முதன்மைச் செயலாளர் முனைவர் தா.கார்த்திகேயன், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் மேலாண்மை இயக்குநர் வி.தட்சிணாமூர்த்தி, சென்னைப் பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தின் மேலாண்மை இயக்குநர் டாக்டர் டி.ஜி.வினய், பேரூராட்சிகள் இயக்குநர் கிரண் குராலா, நகராட்சி நிர்வாக இயக்குநர் எஸ்.சிவராசு, ஊரக வளர்ச்சித் துறை இயக்குநர் பி.பொன்னையா மற்றும் அரசு உயர் அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com