

நாடாளுமன்றத்தில் ஒவ்வொரு ஆண்டும் மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவது வழக்கம். அந்த வகையில் 2026-27 நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட்டை இன்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். தொடர்ந்து 9 முறை பட்ஜெட் வாசித்த அவர், இந்தாண்டு அவர் தனது பட்ஜெட் உரையை 1:23 நிமிடங்கள் வாசித்தார்.
இந்தாண்டுக்கான பட்ஜெட்டில் மக்கள் எதிர்பார்த்த அளவிற்கு பெரிய அறிவிப்புகள் எதுவும் இல்லையென்றாலும் சில குறிப்பிட்ட முக்கியத்துவம் வாய்ந்த அறிவிப்புகளும் வெளியாகி இருந்தது.
நிவாரண நடவடிக்கையாக, உள்நாட்டுத் துறைகளை மேம்படுத்தவும், நோயாளிகள் மற்றும் உற்பத்தியாளர்கள் மீதான சுமையைக் குறைக்கவும், விளையாட்டு உபகரணங்கள், தோல் பொருட்கள், புற்றுநோய் மருந்துகள் மற்றும் கடல் உணவுப் பொருட்களுக்கான செலவுகளை கொள்கை ஆதரவு, வரி இல்லாத இறக்குமதி மற்றும் சுங்க வரி விலக்குகள் மூலம் குறைக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இந்த பட்ஜெட்டில் பல்வேறு முக்கிய அறிவிப்புகள் வெளியான நிலையில் எந்தப் பொருட்களின் விலை குறையப்போகிறது, எந்தப் பொருட்களின் விலை உயரப்போகிறது என்பது குறித்து அறிந்து கொள்ளாம் வாங்க..
விலை குறைய வாய்ப்புள்ள பொருட்கள்:
விளையாட்டு உபகரணங்கள்: விளையாட்டுத் துறையில் வேலைவாய்ப்பு, திறன் மேம்பாடு மற்றும் தொழில் வாய்ப்புகளில் கவனம் செலுத்தும் 'கேலோ இந்தியா இயக்கம்' தொடங்கப்படும் என்று பட்ஜெட்டில் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். விளையாட்டுத் துறை பல வேலைவாய்ப்புகளையும் மற்றும் தொழில் வாய்ப்புகளையும் வழங்குகிறது. இதன் மூலம், விளையாட்டு உபகரணங்களின் தரம் மேம்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தோல் பொருட்கள்: பட்ஜெட்டில் காலணி ஏற்றுமதியாளர்களுக்கான மூலதன பொருட்கள் மீதான இறக்குமதிக்கு வரி விலக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. தோல் அல்லது செயற்கை காலணிகளின் மூலப்பொருட்களின் மீதான இன்புட் வரி குறைப்பால் தோல் பொருட்கள் விலை குறையும்.
புற்றுநோய் மருந்துகள்: புற்றுநோய்க்குத் தேவையான 17 மருந்து வகைகளுக்கு அடிப்படை சுங்க வரியில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது என்றும் மேலும் 7 அரிய வகை நோய்களுக்கான மருந்துகளுக்கான இறக்குமதி வரி விலக்கு அளிக்கப்படும் என்றும் நிர்மலா சீதாராமன் அறிவித்தார்.
அதாவது, அரிய நோய்களுக்கான சிகிச்சையில் பயன்படுத்தப்படும் மருந்துகள், சிறப்பு மருத்துவ நோக்கங்களுக்காக உணவு, மருத்துவப் பொருள்கள் இறக்குமதி செய்வதற்கு, இறக்குமதி வரியிலிருந்து விலக்கு அளிக்கும் பட்டியலில் மேலும் 7 அரிய நோய்களைச் சேர்க்க முன்மொழிவதாக அறிவித்தார்.
கடல் உணவு: மீனவர் சமூகத்தை ஆதரிப்பதற்காக பிராந்திய நீர்நிலைகளுக்கு அப்பால் வரி இல்லாத மீன் பிடிப்பை மையம் அறிவிக்கப்பட்டுள்ளது.
மைக்ரோவேவ் ஓவன்: மைக்ரோவேவ் ஓவன்களின் உற்பத்தியில் பயன்படுத்தப்படும் குறிப்பிட்ட பாகங்களுக்கு அடிப்படை சுங்க வரியிலிருந்து விலக்கு அளிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சோலார் பேனல்கள்: எரிசக்தி துறையில், லித்தியம்-அயன் பேட்டரி செல்களை தயாரிக்கப் பயன்படுத்தப்படும் மூலதனப் பொருட்களுக்கான அடிப்படை சுங்க வரியில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது, மேலும் சோலார் கண்ணாடி தயாரிப்பில் பயன்படுத்தப்படும் சோடியம் ஆன்டிமோனேட் இறக்குமதிக்கான அடிப்படை சுங்க வரியையும் நீக்கியுள்ளது. இதனால், சோலார் பேனல்கள் விலை மலிவாகும்.
மின்சார வாகன பேட்டரிகள்: எரிசக்தி சேமிப்பு அமைப்புகளுக்காகப் பயன்படுத்தப்படும் லித்தியம்-அயன் பேட்டரி செல்களைத் தயாரிக்கும் இயந்திரங்கள் மீதான இறக்குமதி வரி 5% ஆக இருந்த நிலையில் இந்த பட்ஜெட்டில் முழுமையாக விலக்கப்பட்டுள்ளது. இது உற்பத்திச் செலவுகளைக் குறைக்கவும், உள்நாட்டு பேட்டரி உற்பத்தியை அதிகரிக்கவும் உதவும்.
தனிப்பட்ட பயன்பாட்டிற்கான இறக்குமதிகள்: மக்களின் வாழ்க்கையை எளிதாக்கும் முயற்சியாக, தனிப்பட்ட பயன்பாட்டிற்காகக் கொண்டுவரப்படும் வரி விதிக்கக்கூடிய அனைத்துப் பொருட்களுக்கான இறக்குமதி வரி 20% இலிருந்து 10% ஆகக் குறைக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
வெளிநாடு பயணம்: வெளிநாட்டு சுற்றுலாப் பயண(சுற்றுலா) திட்டங்களுக்கான டிசிஎஸ் வரி (TCS) முந்தைய 5% மற்றும் 20% விகிதங்களிலிருந்து 2% ஆகக் குறைக்கப்பட்டுள்ளது. இதற்கு குறைந்தபட்ச தொகை வரம்பு எதுவும் இல்லை. இதன் பொருள், வெளிநாட்டுப் பயணங்களை முன்பதிவு செய்யும்போது பயணிகள் முன்பணமாகக் குறைந்த பணத்தைச் செலுத்தினால் போதும்.
கல்வி மற்றும் சிகிச்சைக்காக வெளிநாடுகளுக்குப் பணம் அனுப்புவதற்கான செலவு: தாராளமயமாக்கப்பட்ட பணம் அனுப்பும் திட்டத்தின் (LRS) கீழ் கல்வி மற்றும் மருத்துவ சிகிச்சைக்காக வெளிநாடுகளுக்கு அனுப்பப்படும் பணத்திற்கான டிசிஎஸ் வரி (TCS) 5% இலிருந்து 2% ஆகக் குறைக்கப்பட்டுள்ளது. கல்வி மற்றும் மருத்துவச் செலவுகளுக்காக LRS திட்டத்தின் கீழ் TCS-ஐ 2% ஆகக் குறைப்பது, படிப்பு அல்லது சிகிச்சைக்காக வெளிநாடுகளுக்குப் பணம் அனுப்பும் குடும்பங்களுக்கான பணச் செலவு குறையும்.
மற்றவற்றில் விமானங்களின் என்ஜின்கள் உட்பட உதிரி பாகங்கள், அணுசக்தி திட்டங்களுக்காக இறக்குமதி செய்யப்படும் பொருட்கள், முக்கிய கனிமங்களுக்கான மூலதனப் பொருட்கள் ஆகியவை அடங்கும்.
எவை விலை உயரக்கூடும்:
பங்குச்சந்தையில் ஆப்ஷன் மற்றும் ப்யூச்சர்ஸ் டிரேடிங் செய்வோருக்கான பங்குப் பரிவர்த்தனை வரி (STT) 0.02%இலிருந்து 0.05% ஆக உயர்த்தப்பட்டுள்ளது. பட்ஜெட்டில் பங்குகளைத் திரும்பப் பெறுவதற்கான வரிவிதிப்பு, பத்திரங்கள் பரிவர்த்தனை வரி (STT) மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட பொருட்களுக்கான டிசிஎஸ் வரி (TCS) ஆகியவற்றில் மாற்றங்களை அறிவித்துள்ளதால், வர்த்தகம் பெரிய அளவில் மாற்றம் ஏற்படலாம்.
வீடியோ கேம் உற்பத்தி: ஏப்ரல் 1 முதல் வீடியோ கேம்களைத் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் பாகங்களுக்கான சுங்க வரி விலக்கை அரசாங்கம் திரும்பப் பெறுகிறது. இதன் விளைவாக, வீடியோ கேம் கன்சோல்கள் அல்லது உள்நாட்டில் அசெம்பிள் செய்யப்படும் கேமிங் சாதனங்களின் விலை உயரக்கூடும்.
தவறாக வரி அறிக்கைக்கு அபராதம்: வருமான வரி குறித்த தவறான தகவல்களுக்கு தெரிவித்தால் 100 சதவீதம் அபராதம் விதிக்கப்படும் என்று பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
காபி: பிப்ரவரி 2 முதல் காபி வறுக்கும், காய்ச்சும் மற்றும் விற்பனை செய்யும் இயந்திரங்களுக்கான சுங்க வரி விலக்கு பட்ஜெட்டில் நீக்கப்பட்டுள்ளது. உற்பத்தியாளர்களோ அல்லது இறக்குமதியாளர்களோ இந்த அதிகப்படியான வரியைச் செலுத்த முன்வராவிட்டால், இறக்குமதி செய்யப்படும் காபி இயந்திரங்களின் விலை உயரக்கூடும், இது இத்தகைய உபகரணங்களை நம்பியிருக்கும் காபி கடைகள், அலுவலகங்கள் மற்றும் வணிகங்களுக்கான செலவுகளை அதிகரிக்கும்.
இறக்குமதி செய்யப்பட்ட மதுபானம்: மதுபானம் விற்பனையாளர்களுக்கான டிசிஎஸ் (TCS) விகிதம் 2% ஆக முறைப்படுத்தப்படும் என்று பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது மனித நுகர்வுக்கான மதுபான விற்பனைக்கான டிசிஎஸ் விகிதம் 1% ஆக உள்ளது. இதனால் இறக்குமதி செய்யப்படும் காபி மற்றும் மதுபானங்களின் விலையும் உயரக்கூடும்.
இறக்குமதி செய்யப்பட்ட உயிரியல் பூங்கா விலங்குகள் மற்றும் பறவைகள்: உயிரியல் பூங்காக்களால் இறக்குமதி செய்யப்படும் விலங்குகள் மற்றும் பறவைகளுக்கான வரி விலக்கு பட்ஜெட்டில் ரத்து செய்யப்பட்டுள்ளது.
உரங்கள்: உர உற்பத்தியில் பயன்படுத்தப்படும் நாஃப்தாவிற்கான சுங்க வரி விலக்கு ரத்து செய்துள்ளதால் அதன் விலை உயரும் என் எதிர்பார்க்கப்படுகிறது.
விலை உயரக்கூடிய மற்ற பொருட்களில் குடைகள், ஏடிஎம்கள், டிஜிட்டல் கேமராக்கள், ஈ ரீடர்கள், வீடியோ கேம், சாப்ட்வேர்ட்கள், சில வகை கெமிக்கல்கள் மீதான வரியும் உயர்வதால் விலை ஏறும்!